காலத்தின் அறிகுறிகளின் படி வாழ்வோமா! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | VeritasTamil

பொதுக்காலம் 34 வெள்ளி   29.11.2024) 
மு.வா: திவெ : 20: 1-4,11 - 21: 2
ப.பா:  திபா 84: 2. 3. 4-5,7
ந.வா: லூக்: 21: 29-33

காலத்தின் அறிகுறிகளின் படி வாழ்வோமா! 

மனிதர்களாய் பிறந்த நாம் ஒவ்வொருவரும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப வாழ அழைக்கப்பட்டுள்ளோம். ''இயேசு, 'விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். 
ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா' என்றார்'' (லூக்கா 21:33) எந்த வார்த்தைகளுக்கு ஏற்ப இறைவார்த்தையின் ஒளியில் காலத்தின் அறிகுறிகளின் படி  வாழும் பொழுது, நிச்சயமாக நம்முடைய வாழ்வை கடவுளுக்கு உகந்த வாழ்வாக வாழமுடியும். நான் இறையில் படித்துக் கொண்டு இருக்கின்ற பொழுது எங்களுக்கு இறையியல் எடுத்த பேராசிரியர்களில் ஒருவர் அடிக்கடி "இறையியல்  என்பது சமூக பொருளாதார ஆன்மீக அரசியல் போன்றவற்றை பகுப்பாய்வு செய்து இறைவார்த்தையின் ஒளியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதே ஆகும் " என்று அடிக்கடி கூறுவார். அப்பொழுது எனக்குப் புரியவில்லை. நான் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டு பங்குத்தளத்திற்கு பணி செய்ய வந்த போதுதான் அதனுடைய ஆழமான பொருள் புரிந்தது. ஒவ்வொரு பங்கும் ஒவ்வொரு சூழலை கொண்டிருக்கும். அதேபோல நம்முடைய வாழ்க்கை அனுபவங்களும் ஒவ்வொரு சூழலை கொண்டிருக்கும். அவற்றையெல்லாம் அறிந்து இறைவார்த்தையின் ஒளியில் நம்பிக்கையோடு    பயணிப்பதே வாழ்வில் வெற்றியைத் தரும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

இந்நாளில் நம் ஆண்டவர் இயேசு நற்செய்தியின் வழியாக காலத்தின் அறிகுறிகளை அறிந்து வாழ அழைப்பு  விடுக்கிறார். நாம் வாழும் இந்த உலகத்தில் எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், பேராபத்துகள், பாதிப்புகள் வருகின்றன. ஆனால் இவையெல்லாம் நமக்கு சொல்வது நாம் கடவுளின் வருகைக்காக எந்நாளும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதேயாகும். மனிதர் என்பவர் பல்வேறு சோதனைகளுக்கும் இடையூறுகளுக்கும் உள்ளாவது இயல்புதான். ஆனால் அவற்றில் மூழ்கி விடாமல் நாம் செய்கின்ற ஒவ்வொரு தவற்றிலும் அனுபவங்களைக் கற்றுக் கொண்டு  இறைவார்த்தையின் பாதையில் பயணிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

தாவீதின் வாழ்க்கையை நாம் ஆய்வு செய்து பார்த்தோம் என்றால் நாம் அவரின் வாழ்விலிருந்து மனமாற்றத்தில் நிலைத்திருப்பது எப்படி என்பதை பற்றி அறிந்துகொள்ள முடியும். அவர் தன்னுடைய பலவீனத்தின் காரணமாக உடல் சார்ந்த இன்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். எனவே ஒரு உயிரை கூட எடுக்க முன்வந்தார். பிறகு இது தவறு என்று இறைவாக்கினர் நாத்தான் வழியாக அறிந்த பிறகு தன்னை முற்றிலும் வெறுமையாக்கி தான் செய்த பாவத்திற்காக மனம் வருந்தினார். தண்டனையைப் பெற்று கடவுளுடைய மன்னிப்பைப் பெற்றபிறகு  புனிதமான வாழ்வை மீண்டும் தொடங்கினார். இதுதான் நாம் செய்கிற. தவற்றிலிருந்து  புதிய அனுபவத்தை பெற்றுக் கொள்வது. எனவே கடவுள் நம்முடைய அன்றாட வாழ்விலேயே பல்வேறு அறிகுறிகள் வழியாக மனம் மாறுவதற்கு அழைப்பு விடுக்கிறார். அதனைப் புரிந்து கொண்டு மனம் மாறி தூயவர்களாக வாழும் பொழுது, நிச்சயமாக கடவுளின் அளப்பரிய இரக்கத்தை பெற்று மீட்பினைச் சுவைக்க முடியும்.

உலகமே அழிந்துபோனாலும் இயேசு கூறிய ''வார்த்தைகள் ஒழியவே மாட்டா'' என்பதன் பொருள் என்ன? என சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் வார்த்தைகள் நமக்கு வாழ்வு தருகின்ற வார்த்தைகள். அந்த வார்த்தைகளின் வல்லமையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதை யாரலும் முறியடிக்கவும் இயலாது. இந்நிலையில் உலகமே அழிந்து மாய்ந்துபோனாலும் இயேசுவின் வார்த்தைகள் ''ஒழியவே மாட்டா''. இயேசுவின் வார்த்தைகள் உண்மையானவை என்பதை இதிலிருந்து அறிகிறோம். கடவுளின் அன்பை நம்மோடு பகிர்ந்துகொள்வதற்காக இயேசு நம்மைத் தேடி இவ்வுலகிற்கு வந்தார். இயேசுவின் இரண்டாம் வருகைக்காகவும் அவரின் பிறப்பு பெருவிழாவை கொண்டாடுவதற்காகவும்  நம்மையே தயார்படுத்திக் கொண்டிருக்கும் நாம் காலத்தின் அறிகுறிகளை அறிந்து உயிருள்ள இறைவார்த்தையின் ஒளியில் எந்நாளும் வாழ்ந்திட தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :

வல்லமையுள்ள இறைவா! எங்கள் வாழ்விலே பற்பல அனுபவங்களைக் கொடுத்து மீட்பின்  கனியை சுவைக்க வழிகாட்டிக் கொண்டிருக்கிறீர். அதற்காக நன்றி செலுத்துகிறோம். தொடர்ந்து எங்கள் வாழ்வில் நீர் வெளிப்படுத்தும் அறிகுறிகளை உணர்ந்து இறைவார்த்தையின் ஒளியில் எந்நாளும் பயணித்து உமக்கு உகந்த வாழ்வு  வாழ்ந்து உமது  வருகைக்காக எங்களையே ஆயத்தப்படுத்தி மீட்பின் கனியை சுவைத்திட தேவையான அருளைத் தாரும்.ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
திருஅவைச் சட்டப்படிப்பு
புனித பேதுரு பாப்பிறை இறையியல் கல்லூரி, பெங்களூர்