ஆண்டவரில் நாம் கொள்ளும் பற்றுறுதி நம்மை வாழவைக்கும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 34 ஆம் வாரம் – செவ்வாய்
திருவெளி. 14: 14-20 - லூக்கா  21: 5-11                                                                                                              
  
ஆண்டவரில் நாம் கொள்ளும் பற்றுறுதி நம்மை வாழவைக்கும்!

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், அறுவடை செய்யும் உருவகமாக யோவான் இன்று கண்ட காட்சி அமைகிறது. சுருக்கமாகக் கூறினால், இக்காட்சியானது இறுதித் தீர்ப்பை விவரிக்கும் காட்சி எனலாம். குறிப்பாக மத்தேயு 25: 31-46 வரை உள்ள பகுதியை இது  ஒத்திருக்கிறது. இவ்வாசகப் பகுதியில் வரும் ‘வெண்மேகம’ என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இருப்பிடமாகவும்,  ‘மானிட மகனைப் போன்று’ என்பது மனுவுருவான  கடவுளின்  மகனான இயேசு கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்தும் குறிப்பாகவும் உள்ளது.
அடுத்துவரும், ‘அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன’ என்பதில் இயேசு கிறிஸ்துவின் அரசத் தன்மையை உணர்த்துகிறது. இயேசு கொண்ட வெற்றியை அவரது பொன் முடியும் தீமையை அழிக்கின்ற கருவியாக அரிவாளும்  காட்சியில் காட்டப்படுகின்றன. மேலே கூறியதைப்போல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறுதித் தீர்ப்பு வழங்க வருவதை இவை விவரிக்கின்றன. 
‘மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார்’ என்பது, ஒரு வானதூதரை சுட்டிக்காட்டுகிறது. இந்த வானதூதர் இயேசு கிறிஸ்துவின்  தூதுவராக, அவருடைய பெயரில்  தீமையை அறுவடை செய்வார் எனப் புரிந்துகொள்ள வேண்டும். 
மற்றும், நெருப்பின் மேல் அதிகாரம் கொண்ட வானதூதர் ‘மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது” என்று உரத்த குரலில் கூறினார் என்று வாசிக்கும் போது, தீயவர்களை  அல்லது தீமையை (திரட்சைக் குலைகளை) நித்தியத் தண்டனைக்கு (நரகத்திற்கு) இயேசு அனுப்பினார் என்று பொருள் கொள்ளலாம். ‘பிழிவுக் குழி’ என்பது, அக்காலத்தில் பாலஸ்தீனா நாட்டில் திராட்சை குலைகளை அறுவடை செய்து பிழிவுக் குழியில் போட்டு மிதிப்பார்கள். அப்படி செய்யும் போது திராட்சை இரசம் கிடைக்கும். அதை உதாரணத்தைக் கொண்டு இங்கே நரகத்தை பிழிவுக் குழியெனக காட்டப்படுகிறது. அங்கே தீயவர்கள் துன்பத்தை அனுபவிப்பர் எனக் கூறப்படுகிறது. 
நல்லவர்களுக்கும் நிலைவாழ்வும் (மோட்சமும்) தீயவர்களுக்கு நித்திய தண்டனையும் இறுதித் தீர்ப்பின்போது ஆண்டவரால் கொடுக்கப்படும் என்பதை இப்பகுதியில் அறிவுறுத்தப்டுகிறோம். 

நற்செய்தி.

நற்செய்தியில்,  ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தின் அழகை வியந்து பாராட்டிக்கொண்டிருந்த  சிலரைப் பார்த்து, “ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார் இயேசு.  அவர்கள் அவரிடம், “இவையெல்லாம் எப்போது நிகழும்?” என்றும்,    நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?'' என்று கேட்டார்கள். அவர்களை எச்சரிக்கும் வகையில், “நீங்கள் ஏமாறதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்” என்று முன்னறிவிப்பாகக் கூறுகிறார். 

இயேசுவின் காலத்தில் பல போலி இறைவாக்கினர்கள் தாங்கள்தான் மெசியா என்றும், உலக முடிவு அண்மையில் நிகழ இருக்கிறது என்று சொல்லி மக்களை திசை திருப்பிகு கொண்டிருந்தனர்.  அவர்களை முன்னிட்டுத்தான் ஆண்டவர் இயேசு எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவுறுத்தினார்.
 
சிந்தனைக்கு.

இன்றைக்கு உலகில்  பல்வேறு இடங்களில் பலவிதமான நம்மை அச்சுறுத்தும் நிகழ்வுகளைக் காண்கிறோம். இவற்றுள்  வன்முறைகள்,  போர்கள், இயற்கைப் பேரிடர்கள் நடந்த வண்ணம் உள்ளன. இவை உலகின் அழிவுக்கான அடையாளங்கள் என பலர் நம்மிடையே பேசித் திரிகிறார்கள். இத்தகையோரின் பேச்சை நம்பிக்கைக்கொண்டு நாம் முடங்கிவிடக்கூடாது என்கிறார் ஆண்டவர். நாம் ஒவ்வொருவரும்   துணிவோடு இருக்கவேண்டும் என்பதுதான் ஆண்டவர் இயேசுவின்  ஆறுதலான செய்தியாக நற்செய்தியில் வெளிப்படுகிறது.
‘அரண்டவன் கண்ணுக்குஇருண்டதெல்லாம் பேய்’ என்பது போல கிறிஸ்தவர்கள் வாழக்கூடாது என்பது நமக்கான அறிவுறுத்தலாகும். நன்மையைக் காத்து தீயதை அழிக்கும் ஆற்றல் நமது ஆண்டவருக்கு உண்டு என்பதை முதல் வாசகத்தில் விரிக்கப்பட்டது. அவர் அறுவடை செய்யப்போகும் நாள் எப்போது என்பது நமது கவலையாக இருக்க க் கடாது. மாறாக, வாழும் காலத்தில் நாம் எப்படி சாட்சிய வாழ்வு வாழ்கிறோம் என்பதில் நமது கவனமும் செயல்பாடும் உறுதிபெற வேண்டும்.
இயேசுவின் சீடர்களாகிய நாம் ஆண்டவரின் வருகைக்காக நம்மையே நாம் நல்ல முறையில் தயாரிக்க வேண்டும். இதற்கு,  நம்மிடம் குவிந்து கிடக்கன்ற   தீய நாட்டங்களை, பழக்கவழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். இறுதித் தீர்ப்பின்போது ஆண்டவர் யார் மீதும் பாரபட்சம் காட்டப் போதில்லை.  நமது சொல்லும் செயலும் இரக்கம் மிகுந்தனவாக இருந்தால்   நமது ஆன்மா மீட்புப்பெறும். இல்லையேல் நரகம்தான் கதி. 
ஆண்டவர் திரும்பி வருவார் என்பதுதான் இறைவார்த்தை நமக்குத் தரும் நம்பிக்கையாக இருக்கின்றது. அவரது வருகையானது வெறும் வருகையாக இராது. அது தீர்ப்பிடும் வருகை. அவரது முன்னால் நமது தீயச் செயல்கள் மட்டில் கூனி குறுகி நிற்காமல் இருக்க நம்மை நாம் சீர் செய்துகொள்ள வேண்டும். 
நற்செய்தியில், ஆண்டவர ‘ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார். அவரது வாக்கின் படியே   கி.பி. 70 ஆம் ஆண்டு நிகந்தது. அந்த அழகுமிகு எருசலேம் ஆலயம் உரோமையர்களால் நொறுக்கப்பட்டது.    ஆகவே, தந்தையாகிய கடவுள் தமது சொந்த மகனின் கொடூரமான மரணத்தின் மூலம் நம்மை ஒளியின் மக்களாக வாழ் வைத்தார் என்றால்,  நாம்  நம்பிக்கையுடன் ஆண்டவரை எதிர்கொள்ள  வேண்டும்.  இல்லையேல் வாரம் தோறும் நாம் ஏற்கும் ’நற்கருணை’ பொருளற்றதாகிவிடும். 

இறைவேண்டல்.

ஆற்றல் மிகு என் ஆண்டவரே,  நீர் மாட்சியுடன் மீண்டும் வரும்போது,  நான் நற்கருணையால் திடம் பெற்ற சீடராக உம் முன் நிற்க விழைகிறேன். என்னை ஆசீர்வதியும். ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                                                  ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                              +6 0122285452