இம்மை வாழ்வு எப்படியோ, அப்படியே மறுமை வாழ்வு!| ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் 33ஆம் வாரம் –புதன்
திருவெளி. 4: 1-11
லூக்கா 19: 11-28
இம்மை வாழ்வு எப்படியோ, அப்படியே மறுமை வாழ்வு!
முதல் வாசகம்.
திருவெளிப்பாடு என்பது கிரேக்கத்தில் ‘apokalypsis’ எனப்படுகிறது. இதன் பொருள் ‘கடவுளின் மறைவான நோக்கங்களை வெளிப்படுத்துதல் என்று பொருள்படும். யோவான் எழுதிய திருவெளிப்பாடு எனும் நூல் கடவுள் அவருக்கு அளித்த செய்தி எனலாம்.
இன்றைய வாசகத்தில் யோவான் கண்ட விண்ணகக் காட்சி சித்தரிக்கப்படுகிறது. இதில் விண்ணகத்தில் நிகழும் கடவுள் வழிபாடும் அவருக்கான புகழ்ச்சியும் விவரிக்கப்படுகிறது. விண்ணகத்தில் உள்ள அனைவரும் கடவுளை வழிபடுகிறார்கள். அங்கே அரியணையைச் சுற்றி இருபத்து நான்கு அரியணைகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருபத்து நான்கு மூப்பர்கள் வீற்றிருந்தார்கள் என யோவான் விவரிக்கிறார். அவர்கள் யாக்கோப்பின் 12 குலத்தினர் மற்றும் இயேசுவன் 12 சீடர்கள் ஆவர். மேலும், அவரது காட்சியில், விண்ணகத்தில் உள்ளவர்கள் வெண்ணாடை அணிந்திருந்தார்கள்; தலையில் பொன்முடி சூடியிருந்தார்கள் என்றும் கூறுகிறார்.
அரியணையைச் சுற்றிலும் நான்கு உயிர்கள் காணப்பட்டன என்கிறார். அவற்றின் முன்புறமும் பின்புறமும் அவற்றுக்குக் கண்கள் இருந்தன. அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம் போலும், இரண்டாவது இளங்காளை போலும் தோன்றின. மூன்றாவதற்கு மனித முகம் இருந்தது, நான்காவது பறக்கும் கழுகை ஒத்திருந்தது என்று மேலும் விவரிக்கிறார். அவை, “தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் இவரே” என்று அந்த உயிர்கள் அல்லும் பகலும் இடையறாது பாடிக்கொண்டிருந்தன என்ற விபரத்தையும் தருகிறார்.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா நாணய உவமையைப் பற்றிப் பேசுகிறார். உவமையில் தலைவர் ‘தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, `நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்' என்று சொன்னார் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் திரும்பிவந்தபோது தன்னிடம் மினாக்களைப் பெற்ற பணியாளர்களிடமிருந்து கணக்குக் கேட்கிறார். முதலில் வந்தவர் ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்' என்றார்.
அடுத்து வந்தவர், `ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்' என்றார். மூன்றாவதாக வந்தவரோ, `ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்' என்றார்.
தலைவர், முதலில் அழைத்தவரைப் பாராட்டி, பத்து நகர்களுக்கு அதிகாரியாகவும், அடுத்தவரை ஐந்து நகர்களுக்கு அதிகாரியாகவும் நியமித்தார். ஆனால், மூன்றாவது பணியாளரையோ ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்தாவது வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே' என்றார்.
நிறைவாக, இயேசு, `உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில் நம்மை கவரும் பகுதி, இறுதியாக இயேசு கூறிய, 'உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்பதாகும். ஒரு காரியத்தை கடவுள் அருளிய கொடையால், முழு ஆற்றலோடும் ஆர்வத்தோடும் செய்யக்கூடியவர்களுக்குக் கடவுள் மேலும் கொடுப்பார். அத்தகைய மனம் இல்லாதவர்களிடமிருந்து உள்ளதையும் பறித்துக்கொளவார் எனும் அரிய போதனை நமக்குத் தரப்படுகிறது.
இயேசுவின் உவமையில், தலைவர் திரும்பி வந்ததும், இந்த முதல் வகை மக்கள் தங்களுக்கு நாணயங்களைக் கொண்டு தாங்கள் கொண்ட கொடைகளுக்கு ஏற்ப வர்த்தகத்தில் ஈடுபட்டு, மேலும் பத்து , ஐந்து என கூடுதலாக சம்பாதித்தனர். இத்தகையோரே கடவுள் தம் இறையரசுப் பணிக்கென விரும்பும் பணியாளர்கள்.
உலகில் அவருடைய அரசை விரிவுப்படுத்துவதற்கு அவர் நமக்களித்துள்ள கொடைகளைப் பயன்படுத்த வேண்டும். இது கடவுளின் எதிர்ப்பார்ப்பாகும். அவருடைய எதிர்பார்ப்பு அன்பின் கட்டளையாக வருகிறது.
முதல் வாசகத்தில், மண்ணக வாழ்வில் கடவுளின் அரசைக் கட்டி எழுப்ப அவர்களிடமிருந்தக் கொடைகளைப் பயன்படுத்தி பாடுபட்டோரை கடவுள் அவரது அரியணையில் கொண்டிருந்ததை யோவான் காட்சியாகக் கண்டார். ஆம், அவர்கள் மண்ணகத்தில் வாழும்போது தங்கள் கொடைகளைப் பொது நலனுக்காகவும், இறையரசுக்காகவும் பகரிந்துகொண்டார்கள். எனவே, கடவுள் அவர்களுக்கு விண்ணகத்தில் மேலான இடத்தை அளித்தார். அவர்களை நாம் புனிதர்கள் என்கிறோம்.
மூன்றாவது நபரைப் போலத்தான் இந்த உலகில் பலர் இருக்கிறார்கள். தன்னலம் கொண்டவர்கள், பிறருக்குப் பயனற்றவர்கள்.
இந்த மூன்று தரப்பினரில் நாம் எந்த தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணிப்பாரக்க அழைக்கப்படுகிறோம். நமது வாழ்க்கை எந்த வகை நபர்களை மிகவும் ஒத்திருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருநாள் விண்ணகத்தில் கடவுளின அரியணையின் முன் நாம் நின்று கடவுளைப் புகழ்ந்தேத்த வேண்டுமானால், கடவுள் அருளிய கொடைகளை மண்ணகத்தில் பொது நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். கொடைகளில் கஞ்சத்தனம் நம்மை கரை சேர்க்காது.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நீர் எனக்களித்த கொடைகள் உமது அரசைக் கட்டியெழுப்பப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றீர். எனது கொடைகளை உமது பணிக்குப் பகிர்வதில் எனது தாராள மனதை ஆசீர்வதியும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452