இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திரும்பிப் பார்க்கமாட்டேன்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

01 ஜூலை 2024 
பொதுக்காலம் 13 ஆம் வாரம் -திங்கள்
ஆமோஸ் 2: 6-10, 13-16
2 திமொத்தேயு
மத்தேயு  8: 18-22
 

இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திருப்பிப் பார்க்கமாட்டேன்!
 
 
முதல் வாசகம்.


 அமோஸ்  தென் நாடான யூதேயாவைச் சேர்ந்த ஓரு மேய்ப்பன்.  இவர் வட நாடான இஸ்ரயேல் ஆசீரியர்களால் வீழ்த்தப்படும் முன் வாழ்ந்தவர்.  அதாவது  இயேசுவுக்கு  ஏறக்குறைய 750 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓர் இறைவாக்கினார்.  கடவுள் அவரை அழைக்கும்போது, அவர் தனது மந்தையை விட்டுவிட்டு கடவுளின் செய்தியை அறிவிக்கப் புறப்பட்டார்.    வட நாட்டின் மக்களின்  தீய வழிகளைக் கண்டித்தார்.  குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களை அவர்கள் நடத்திய விதத்தைத் தொட்டு இறைவாக்குரைத்தார். 

 ஏழைகளை வதைத்துத்  தங்கள் செல்வத்தைத் தேடுபவர்களை அவர் வெகுவாகக் கண்டித்தார்.  கடவுளின் இரக்கத்தை  அவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதையும், இஸ்ரவேலின் எதிரிகளை கடவுள் எவ்வாறு அழித்தார் என்பதையும், அவர்களை வாக்களிக்கப்பட்ட  கானானுக்கு  கடவுள் அழைத்து வந்ததையும் ஆமோஸ் நினைவூட்டுகிறார்.


நற்செய்தி.


நற்செய்தியில், இருவர்  இயேசுவைப்  பின்பற்ற விரும்புவதாகக் கூறும்போது, அவரைப் பின்பற்றுவதன் முழுத் தாக்கங்களையும் இயேசு அவர்கள் முன் வைக்கிறார்.  அதாவது “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்று அவரது வாழ்வின் பின்னணியை விரிக்கிறார்.   

அவர்கள் வாழ்க்கையின் வசதிகளை விட்டுக்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று உண்மை உரைத்தார்.  அவர்களுக்கு  இயேசுவின்   சவால்  மிகவும் கடுமையானதாகத் தோன்றியது. ஆளுக்கொரு காரணத்தைக் கூறி அவரிடமிருந்து வெளியேறினர்.


சிந்தனைக்கு.


ஆழம் அறியாமல் காலை விடாதே என்பது ஆன்றோர் வாக்கு. இயேசு என்பவரின் வாழ்க்கைச் சூழலைப் பற்றி முழுமையாகக் கேட்டறியாமல் அவர் பின்னே செல்ல முனைந்தனர் இருவர். அவர்களில் ஒருவர் நன்கு கற்றிந்த மறைநூல் அறிஞர். இயேசு அவர்களை எப்படியாவது தன் சீடர்களாக கவர்ந்திட வேண்டும் என்று எண்ணியிருந்தால், அது நடந்திருக்கும். ஆனால், அவர் உண்மையுரைத்தார். அவர்கள் எதிர்ப்பார்த்த பிரதிபலன் இயேசுவிடமிருந்து கிடைக்காது என்று அறிந்ததும் சாக்குப்போகுக் கூறி வந்த வழி திரும்பினர்.

முதலாவதாக, தம்மைப் பின்பற்ற விரும்புவதாக முன்மொழிந்த இருவரையும்,  இயேசு ஏற்கவுமில்லை  நிராகரிக்கவுமில்லை.  முடிவை அவர்களிடமே விட்டுவிட்டார். இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் முதலில்,  வறுமையை, எளிமையை ஏற்க வேண்டும் என்பது அவரது நிபந்தனையாக இருந்ததை அவர்களால் ஏற்க முடியவில்லை.

சுருங்கச் சொன்னால், இயேசுவைப் பின்பற்றுவது என்பது, உலகப் பற்று அற்ற  நிலையை ஏற்பதாகும். உலகப் பற்றும்  இயேசுவில் பற்றும் இரு தண்டவாளங்கள் போன்றவை.  அவை ஒன்றுக்கொன்று இணையா. ஒரே சமயத்தில் கடவுளுக்கும் செல்வத்திற்கும் இயேசுவின் சீடர் பணிவிடை செய்ய இயலாது. இந்த  உண்மையைக் கத்தோலிக்கத் திருஅவையில் காணலாம். ஒவ்வொரு அருள்பணியாளரின்   அருட்சகோதர-சகோதரியின் துறவற வாழ்வும் ஏழ்மை, கீழப்படிதல், கற்பு இவற்றில் வேரூன்றியதாக இருக்கும்.  இந்த முழு அர்ப்பணிப்பானது இயேசுவின் இன்றைய நற்செய்தி அழைத்தலுக்கு ஒப்ப அமைகிறது. ஆகவே, இயேசுவின் சீடத்துவத்தில் ‘வாழ்ந்து காட்டுதல்' இன்றியமையாத ஒழுக்க நெறியாகும். 

‘நற்செய்தியின்  மகிழ்ச்சி' (The Joy of the Gospel” என்ற அப்போஸ்தலிக்க அறிவுரை ஏடு எண்20-ல்  திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தி உலகின் எல்லாப் புற  எல்லைகளையும் சென்றடைய அனைவரும் அவரவரது ‘சுக மண்டலத்தை விட்டு' (comfortable zone) வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நம்மில் பலர் நினைப்பது போன்று, கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அன்றைட இறைவேண்டல், இறைவார்த்தை வாசிப்பு, ஆராதனை போன்றவற்றோடு  மட்டும் சம்பந்தப்பட்டவை அல்ல. கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, கிறிஸ்துவின் ஒன்றிப்பில், கிறிஸ்துவின் போதனைகளை ஏற்று, கிறிஸ்துவை பிரதிபலித்து வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை. அது தியாகத்திற்கு உட்பட்டது. எனவே,  உலகப் போக்கினைக் கைவிட வேண்டும். 

முதல் வாசகத்தில் ஆமோஸ் இறைவாக்கினர் நீதி, நேர்மை, எளிமை  போன்ற பண்புகளை முன்வைத்து இஸ்ரயேலரின் மனமாற்றத்திற்குப் போதித்தார். இது கடவுளின் எதிர்ப்பார்ப்பு. இயேசுவின் ஒவ்வொரு சீடரும் அந்த அழைப்பை ஏற்க வேண்டும்.  நாம் ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வை உலகில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே இயேசுவின் ஆவல். நாம் நினைப்பது அல்ல  மாறாக, கிறிஸ்துவின் எண்ணமும் செயல்பாடும் திருஅவை வாயிலாக உலகில் நிறைவேறச் செய்வதே நமதான வெற்றி. அன்னை மரியாவின் வேண்டுகோளான ‘“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) எனும் அறிவுரையை ஏற்று வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வுக்கு அடித்தளம். இங்கே சாக்குப் போக்கிற்கு இடமில்லை.

‘இயேசுவைப் பின்தொடர்ந்தால், தனக்கும் பேரும் புகழும்  புகழ் கிடைக்கும்’ என்ற எண்ணத்தோடு, இயேசுவை நற்செய்தியில் கண்ட இருவரும் எண்ணியிருக்கலாம். பெயர், புகழ். செல்வாக்கு என்று சீடத்துவ வாழ்வின் ஒரு பக்கத்தையே அவர்கள் கண்டார்கள்.  ஆனால். இயேசு துன்பம் மிகுந்த பக்கத்தை எடுத்துச் சொன்னார். இது நமக்கும் பொருந்தும். எனவே, நாம் இயேசுவின் பொருட்டு நம் வாழ்வில் வரும் துன்பங்களை ஏற்கத்தான் வேண்டும். நமது சீடத்துவம் வெற்றிப்பெறும்.


இறைவேண்டல்.


‘தலை சாய்க்கக்கூட இடமில்லை’ என்று உமது வெறுமையை உணர்த்திய ஆண்டவரே, பற்றற்று வந்தவர்க்குச் சுற்றமென நிற்பவர் நீர் என்பதை உணர்ந்து, உம்மை பற்றி வாழும் வரத்தைத் தந்தருள்வீராக. ஆமென்.  
 

 

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452