அவருக்கு அடிபணிவோரில், அவரது திருவுளம் நிறைவேறும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
திருவருகைக்காலம் 3-ம் வாரம்–வெள்ளி
எசாயா 7: 10-14
லூக்கா 1: 26-38
அவருக்கு அடிபணிவோரில், அவரது திருவுளம் நிறைவேறும்!
முதல் வாசகம்
ஒரு கன்னிப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவர் கடவுளின் வெளிப்பாடாக இருப்பார் என இன்றைய இரு வாசகங்களும் அறவிக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், ஆகாசு மன்னன் குறித்த விபரத்தை அறிகிறோம். ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் தன் மூதாதையான தாவீதைப் போல் தன் கடவுளான ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், செழித்த மரங்களின் அடியிலும் பலியிட்டுத் தூப வழிபாடு நடத்தி வந்தான். ஆகாசு எதிரியிடமிருந்து காப்பாறிக்கொள்ள அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூதனுப்பி உதவி கேட்டார். ஆனால், ஆண்டவரை புறக்கணித்தான், அவரிடம் தஞ்சம் புகவில்லை.
ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக ஆகாசு அரசருக்கு ஓர் அடையாளம் வழங்குகின்றார். எதிரிகளுடன் கைகோர்ப்பதா, அல்லது ஆண்டவரைப் பற்றிக்கொள்வதா என்று முடிவெடுக்க இயலாமல் அல்லாடிக் கொண்டிருந்த ஆகாசுக்கு, உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார் ஆண்டவர்.
ஆகாசு, இறுமாப்புடன் “நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார். இச்சூழலில்தான், எசாயா இறைவாக்கினர் தோன்றுகின்றார். அவர், “தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்; என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்’ என்ற அடையாளத்தை முன்னறிவித்தார்.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில், உலக மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மரியாவுக்கு முன்னறிவிக்கப்படுகின்றது. 'இது எங்ஙனம் ஆகும்?' என்ற மரியாவின் கேள்விக்கு, 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்று பதிலுரைக்கின்றார் வானதூதர். மரியா தேரந்துகொள்ளப்பட்ட வினாடி முதல், அவரை வழிநடத்துபவர் கடவுளே. 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று அடிமை நிலைக்குத் தன்னைத் தாழ்த்திய மரியா, தன் தாழ்ச்சியின் வழியாகவே தாவீதின் திறவுகோலின் தாயாக மாறுகின்றார்.
லூக்காவின் நற்செய்தியில், கடவுளின் திருவுளம் தன்னில் நிறைவேறுவதை மரியா சுதந்திரமாக ஏற்றுக்கொளகிறார். அவ்வாறு உடன்படும்போது, தூய ஆவியானவர் அவர் மீது வருகிறார், அவள் இம்மானுவேல் அல்லது "கடவுள்-நம்முடன்" என்றுரைக்கப்பட்ட குழந்தையைக் கருவுற்றாள்.
இங்கே, கடவுளிடம் மரியா தான் கணவர் துணையின்றி ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பார் என்பதற்கு அடையாளம் எதையும் கேட்கவில்லை. ஆனாலும், குழந்தை பேறற்ற ஒரு வயதான மரியாவின் உறவினர் (எலிசபெத்) கடவுளின் தயவால், ஒரு குழந்தைக்குத் தாயாகவுள்ளார் என்று கபிரியேல் மரியாவுக்கு அடையாளமாகக் காட்டுகிறார்.
சிந்தனைக்கு.
‘கடவுளால் இயலாதது ஒன்றுமல்லை’ என்ற கபிரியேல் தூதரின் வார்த்தையை மரியா முழுமையாக நம்பினார். நம்பிக்கைதான் வாழ்வு என்பதுபோல, ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்பது மரியாவின் கடவுளோடான பிரமாணிக்க வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்தது. தமது மீட்புத்திட்டத்தில் முன்குறித்து வைத்த மரியாவுக்கு ‘ஆண்டவர் உம்முடனே’ என வாக்களிக்கிறார்.
முதல் வாசகத்தில் ஆகாசு கடவுளை நம்பாமல் தனக்கு உதவிகோரி, அந்நிய அரசனான அசீரிய அரசனின் உதவியை நாடினான். ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தான். சொந்த கடவுளைப் புறக்கணித்தான்.
இறைவன் வசிக்கும் இடங்கள் இரண்டு. ஒன்று இயேசு அவர் கற்பித்த இறைவேண்டலில் வெளிப்ப்டுத்தியதைப்போல், விண்ணகம். மற்றொன்று, தாழ்ச்சியுள்ளவரின் எளிய உள்ளம். இதனை நன்கு உணர்ந்தவர் அன்னை மரியா. எனவேதான் ‘அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்’ (லூக்கா 1:48) என்று மகிழ்ச்சி பொங்கப் பாடினார். அருள் மிகப்பெற்ற அன்னைக்கு வழங்கப்பட்ட தனித்துவமான பணி நம்மில் எவருக்கும் வழங்கப்படவில்லை என்றாலும், நாம் அனைவரும் நிச்சயமாக கடவுளால் அவரது மீட்புத் திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை. நம்மை கடவுள் உதவாக்கறைகளாகப் படைக்கவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
நம்மை அவர் தேர்ந்துகொண்டார் என்றால் அதற்குக் காரணமிருக்கும். எனவே, நமக்குள் இருக்கும் ஒவ்வொரு ஏக்கத்தையும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். வெறுமனே, நாள்தோறும் ‘அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசிப்பெற்றவர நீரே’ என்று வேண்டிக்கொண்டிராமல், அன்னை மரியாவின் முன்மாதிரியில் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக ஈடுபடுவதே அழைப்புக்கு ஏற்ற வாழ்வு ஆகும். அவ்வாறு வாழும்போது, நாம் வேண்டாமலேயே அன்னை மரியா நமக்குப் பரிந்து பேசுவார்.
நமக்கு எஞ்சியிருக்கும் வாழ்நாளில், கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற முனைந்தால், கடவுள் தனது திருவுளத்தை நமக்குப் படிப்படியாக வெளிப்படுத்துவார்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நானும் உமது அடியார்களில் ஒருவராக தொடர்ந்து பயணிக்க விழைகிறேன். உமது திருவுளப்படி எனக்கும் ஆகட்டும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 012 228 5452