நமது குடும்ப உறவு மலர்ச்சியுற்றால் அதுவே கிறிஸ்துமஸ்| ஆர்.கே. சாமி | VeritasTamil
திருவருகைக்காலம் 3-ம் வாரம் - செவ்வாய்
தொடக்க நூல் 49: 1-2, 8-10
மத்தேயு 1: 1-17
நமது குடும்ப உறவு மலர்ச்சியுற்றால் அதுவே ‘கிறிஸ்மஸ்’
முதல் வாசகம்
இன்று தொடங்கி இயேசுவின் பிறப்பு பெருவிழா வரை, திருவருகைக் காலத்தின் இரண்டாம் பகுதிக்குள் நுழைக்கிறோம். முதல் பகுதியில் இயேசுவின் இரண்டம் வருகை மற்றும் இறுதிகாலம் பற்றி சிந்தித்து வந்தோம். அடுத்த சில நாட்களுக்கு, இயேசுவின் குழந்தைப் பருவக் நிகழ்வுகளை - மத்தேயு மற்றும் லூக்கா ஆகிய இரண்டு நற்செய்திகளிலிருந்து தியானிக்கவுள்ளோம்.
இன்றைய முதல் வாசகம், யாக்கோபின் நான்காவது மகனான யூதாவை மையமாகக் கொண்டுள்ளது, மேலும் இது அவரது தலைமையையும் அவரது தலைமுறயின் ஆதிக்கத்தையும் முன்னறிவிக்கிறது. யூதாவில் வழிமரபிலிருந்தே தாவீது அரசரும், பின்னர் உலக மீட்பராம் இயேசு கிறிஸ்துவும் (மெசியா) தோன்றுவார் என்ற முன்னறிவிப்பு தரப்படுகிறது.
யூதாவின் உடன்பிறந்தோர் யூதாவைப் பணிந்து வணங்குவார்கள் என்றும், அவரது சகோதரர்கள் அவரைத் தங்கள் தலைவராக அங்கீகரிப்பார்கள் என்ற விபரத்தையும் வாசகம் தருகிறது.
நற்செய்தி.
மத்தேயு, இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பின் மூலம் இயேசுவின் வழிமரபைப் பட்டியலிடுகிறார். எபிரேயர்களின் நம்பிக்கையின் தந்தையான ஆபிரகாமிலிருந்து இயேசுவின் வழிமரபை மத்தேயு தொடங்குகிறார். பின்னர், அவர் யூதா மற்றும் தாவீது வழியாக மரியாவின் கணவரான யோசேப்பு வரை இயேசுவின் தலைமுறையைப் வரிசைப்படுத்துகிறார். இதன் வழியாக பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் மத்தேயு இணைக்கிறார் எனலாம்.
மத்தேயுவைப் பொறுத்தவரை, இயேசு யூதாவின் அரச மரபு வழியில், குறிப்பாக தாவீது குலத்தைசை சேர்ந்தவர் என்பதை வலியுறுத்துவது முக்கியமானது. இதன் மூலம், பழைய ஏற்பாடு இறைவாக்குகள் இயேசுவில் நிறைவேறுவதாக மத்தேயு காட்டுகிறார்.
சிந்தனைக்கு.
இந்த இரு வாசகங்களும் குடும்பத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இயேசு மூவொரு இறைக்குடும்பதில் இரண்டாம் ஆள். அவர் மண்ணுலகத்திற்கு மீட்பராக வருவதற்குக் கடவுள் அவரை மேலிருந்து குதிக்கச் செய்யவில்லை. ஒரு குறிப்பிட்ட வழிமரபைத் தேர்வுச் செய்து, மரியா வழி மனுவுருவாகச் செய்தார். எனவே, இங்கே வழிமரபும் குடும்பமும முன்னுரிமைப் பெறுகிறது.
இதனிமித்தம், இயேசு ஆண்டவரின் பிறப்பு பெருவிழா (கிறிஸ்துமஸ்) ஒரு குடும்ப பெருவிழாவாகப் பார்க்கப்பட வேண்டும். சில நேரங்களில் உறவுகளை மறந்துவிடுகிறோம். குடும்ப நல்லுறவுக்குப் பதிலாக அலங்காரங்கள், தடபுடலான உணவு வகைகள், புத்தாடைகள் பற்றி அதிகம் சிந்தித்துச் செயல்படுகிறோம். ‘மீட்பை’ எடுத்துவிட்டால் கிறிஸ்மஸ் பொருளற்றதாகிவிடும். குடும்பதில் இழந்த உறவை முதலில் மீட்டெடுக்க வேண்டும்.
குடும்பம் என்பது கணவன், மனைவி குழுந்தைகள் கொண்ட வெறும் தொகுப்பு அல்ல. அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான். ஆகவே, இயேசுவின் பிறப்புப் பெருவிழா நான்கு சுவர்களுக்குள் ஒருநாள் கெண்டாட்டமாக முடிவடைவதில் பெருமையடைவதில் பலனில்லை. சொந்தங்களும் பந்தங்களும் சூழ வேண்டும். நமது குடும்ப உறவு என்பது தற்செயலாக உருவானது அல்ல. அது கடவுளின் கொடையாகப் பார்க்க வேண்டும்.
இன்றைய காலக் கட்டத்தில் குடும்ப அமைப்பு மாற்றிக்கொண்டே வருகிறது. இப்போதுள்ள குடும்பங்கள் யாவும் தனிக் குடும்பம் என்ற பெயரில் சிறிய குடும்பமாகிவிட்டது. மத்தேயு, இயேசுவின் வழிமரபை ஆராய்ந்தறித்து நமக்குக் காட்டியதுபோல. நமது குடும்ப வழிமரபைத் தேடிப்பார்த்து ஆசீர்வாதங்கள் பெற வேண்டும். இன்றுள்ள நவீனமான தொலைத்தொடர்பு கருவிகளின் உதவியால் எங்கிருப்போருடனும் நம்மால் தொடர்புகொள்ள இயலும். உறவுகளை அழைத்துப் பேசுவோம், ஆசீர் பெறுவோம். இதற்கான தயாரிப்பு இன்றே தொடங்கப்படட்டும்.
இறைவேண்டல்.
எங்கள் மீட்பராகிய ஆண்டவரே, நன்றி செலுத்தும் மனப்பான்மையும், கொடுக்கும் உள்ளமும் என்னில் பெருக்கெடுக்கட்டும். உமது அன்பான உடனிருப்பில் என் குடும்ப உறுப்பினர்களைப் பேணுவதற்குப் பொறுமையும் அன்பையும் எனக்கும் தாரும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452