ஆண்டவருக்குச் செவிசாய்த்தால் அவர் ஆட்சி வசமாகும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

திருவருகைக்காலம் 2-ம் வாரம் -  வியாழன்
எசாயா: 41: 13-20
மத்தேயு  11: 11-15


ஆண்டவருக்குச் செவிசாய்த்தால் அவர் ஆட்சி வசமாகும்! 
 

முதல் வாசகம்

ஏசாயா நூலின்  இன்றைய வாசகத்தின்  முதல் வசனத்தில், யூதர்களுக்கான கடவுளின் ஆறுதல் வார்த்தை  “அஞ்சாதே” என்பது  இருமுறை இடம் பெற்றுள்ளது.  மேலும் தாம் தேர்ந்துகொண்ட யாக்கோப்பு வழிமரபினரை (இஸ்ரயேலரை) 'புழுவே, பொடிப்பூச்சியே' என்று வர்ணிக்கும்  அவர்,  அவர்களின் வல்லமையின்மையிலிருந்து வல்லமை மிக்கவர்களாக  மீட்டெடுப்பார் எனும் ஆழ்ந்த உறுதிமொழியைப் முன்வைக்கிறார். 

யூதர்கள் பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட காலம். நாட்டை இழந்து, வீட்டை இழந்து, ஒரே ஆலயத்தை இழந்து அவர்கள் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். அவர்களின் வாழ்க்கை பயத்தால் நிறைந்திருந்தது: “எங்களுக்கு வேறு என்ன நடக்கும்? எதிரிகள் எங்களை மேலும் அழித்துவிடுவார்களா?” என்று நாளும் பொழுதும் அழுதுப் புலம்பினர். 

இச்சூழலில் ஏழைகளும் வறியோரும் வாழ்வாதாரத்திற்கு அல்லல் படுகிறார்கள் எனினும்    ‘ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்’ என்ற கடவுளின் வாக்குறுதியை எசாயா பாபிலோனில் துன்புறும் மக்களுக்கு நற்செய்தியாக அளிக்கிறார்.

 
நற்செய்தி

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானையும்  கடவுளின் ஆட்சியின் வருகையைப் பற்றியும் இயேசு பேசுவதைக் கேட்கிறோம். வரவிருக்கும் கடவுளின் ஆட்சியின் செய்தியைக் கேட்க மக்களைத் தயார்படுத்தியதற்காக திருமுழுக்கு யோவான் இயேசுவால் பாராட்டப்படுகிறார். மேலும், கடவுளின் ஆட்சியில் இருப்பவர்கள் திருமுழுக்கு யோவானைவிட பெரியவர்களாக இருப்பார்கள் என்றும் இயேசு குறிப்பிடுகிறார். 

திருமுழுக்கு யோவான் பழைய ஏற்பாட்டு இறைவக்கினர்களில் ஒருவராகப் பட்டியலிடப்படுகிறார். கடவுளின் ஆட்சி மண்ணகத்தில் தொடங்கியவுடன்  அது எதிர்ப்பைச் சந்தித்தது என  இயேசு தம் சீடர்களுக்குத் தெரிவிக்கிறார். இருப்பினும், கடவுளின் ஆட்சி இறுதியில் வெற்றி பெறும் என்பது  நமக்கு ஒரு நினைவூட்டலாக அமைகிறது.  இயேசுவைப் பின்தொடர்வது சவால்மிக்கது, ஆனால் இறுதியில் அது  பலனளிக்கும். எனவேதான், இயேசு,  இறுதியில் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என முடிக்கிறார்.


சிநுதனைக்கு.


நற்செய்தியில் அனைவரிலும் பெரியவர் திருமுழுக்கு யோவான் என்று விவரித்த  இயேசு   'விண்ணரசிலும் சிறியவர் அவரிலும் பெரியவர்' என்கிறார். இதன் பொருளைப் புரிந்துக்கொள்வது சற்று கடினம்தான். ஆம், இயேசுவின் உண்மை சீடராக வாழ்வோர் திருமுழுக்கு யோவானை விட மேலானவர் என்கிறார்.   திருமுழுக்கு யோவான், இயேசுவின் முன்னோடியாகக் கடவுள் தனக்குக் கொடுத்த பணியினை  மிகுந்த தாழ்சியோடும் செய்தார் என்பது நாம் அறிந்த ஒன்று. எனவேதான்,   இயேசு அவரை, “மனிதராகப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என்று வாழ்த்துகின்றார்.

நாமும் இயேசுவால், திருமுழுக்கு யோவானைப்போல் போற்றப்படலாம். இதற்கு, ஒரு நிபந்தனையை விதிக்கிறார் இயேசு. ஆம் நற்செய்தியைக் கேட்க செவியுடையவராக நாம் இருக்க வேண்டும். கிறிஸ்தவராக இருப்பவர் எல்லாம் கடவுளின் அரசில் பங்குபெற்று விடலாம் என்று நினைப்பது பகல் கனவு.  அவரது நற்செய்திக்குச் செவிசாய்து அதன்படி வாழ்வோராக மாற வேண்டும். முதல் வாசகத்தில், கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததன் காரணமாகவே இஸ்ரயேலர் அசீரியர், பாபிலோனியர் ஆகிய அன்னியரிடம் ஒப்படைக்கப்பட்டு துன்புற்றார்கள். எனவே, கடவுளுக்குச் செவிமடுத்தல் இன்றியமையாத ஒன்று. 

முதல் வாசகத்தில் நாம் கேட்ட ‘மலைகள், குன்றுகள் எல்லாம் அவர்களின் எதிரிகளைக் குறிப்பவை. கடவுள் பக்கம் அவரது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தால் இவை அனைத்தும் தவடுப்பொடியக்கப்படும் என்கிறார் கடவுள்.

சுருங்கச் சொன்னால், இறைவனின் அழைப்புக்கு 'ஆம்' என்று ஏற்று, அவரது அரவணைப்பில் வாழ்வோர் மட்டுமே  விண்ணரசில் பெரியவர் ஆவர். கடவுளைச் சார்ந்துதான் நம்மால் வாழ முடியுமேயொழிய, நம் சொந்த சக்தியால்  விண்ணரசில் நுழைய நினைப்பது சாத்தியமாகாது.

எனவே, கடவுளின் அரசில் நாம் பங்குபெற வேண்டும் என்றால் நாமும் கடவுளின்முன் அவரது சொல்லுக்கு கீழ்ப்படிந்து வாழும் வாழ்வை ஏற்க  வேண்டும்.  கடவுளின் ஆட்சிக்காக வாழ்வோர் பல சவால்களைச் சந்திக்க நேரிடும். ‘அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,” என்கிறார் ஆண்டவர். கிறிஸ்தவத்தில் சோதனைகள் இன்றி சாதனை என்பது தப்பான கணக்கு. 

வருவிருக்கும் ஆண்டவரைச் சந்திக்க, நாம் முதலில் நம்மை மீற வேண்டும். ஆம், நம் சுயநலத்தை மீற வேண்டும். ‘நான்’ என்ற அகந்தை இறக்க வேண்டும். நம்மை மட்டும் மையப்படுத்திய சிந்தனை, சொல், செயல்களைக் கடக்க வேண்டும்.  பிறருக்குத் தயவு காட்டும் எண்ணமும் செயலும் நம்மில் மேலோங்க வேண்டும். 

 
இறைவேண்டல்.


‘அஞ்சாதீர்' என பலமுறை எனக்கு அறிவுறுத்திய ஆண்டவரே, நான் 
உமது வார்த்தையைக் கேட்பதிலும், தியானித்து வாழ்வதிலும் நாளுக்கு நாள்  ஊட்டம்  பெற  அருள்புரிவீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452