உண்மையான அழகு எது? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 28 ஆம் செவ்வாய் 
I: உரோ:  1: 16-25
II: திபா 19: 1-2. 3-4
III: லூக்: 11: 37-41

நம்முடைய எண்ணம் தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேராக இருக்கின்றது. எண்ணம் வலிமை மிக்கதாகவும் மகத்தான சக்தியை கொண்டதாகவும் மகத்தான சாதனைகளைப் புரிய வல்லதாகவும் இருக்கின்றது. நமது எண்ணம் தூய்மையாக இருந்தால் அப்படியே வாழ்வும் தூய்மையாக இருக்கும். "உள்ளத்தின் நிறைவே வாய் பேசும்" என்பது பழமொழி. எனவே நம்முடைய உள்ளத்தை நேர்மறை சிந்தனையாலும் தூய எண்ணத்தாலும் பிறர் நல சிந்தனையாலும் அழகுப்படுத்தும் பொழுது  நம்முடைய வாழ்வு சிறப்புறும். ஏனெனில் நம் அகம் தூய்மையாக இருந்தால், நம்முடைய புறம் தூய்மையாக இருக்கும். அந்த அழகு தான் உண்மையான அழகு.  

நம்முடைய மனித வாழ்வில் அகம் மற்றும்  புறம்  ஆகிய இரண்டும் முக்கியமான ஒன்றாகும். கடவுள் ஒவ்வொருவரையும் தூய்மையுள்ளவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். ஆனால் அந்தத் தூய்மை புறத்தில் மட்டுமில்லாமல் அகத்திலும் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். இதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை சிந்திக்க அழைக்கின்றது.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பாவிகள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்று ஆணவம் பிடித்த பரிசேயர்களும் சதுசேயர்களும்  கருதினர். ஆனால் ஆண்டவர் இயேசு பாவிகளைத்   தேடி அவர்களோடு உறவாடி அவர்கள் மனமாற்ற வாழ்வு பெற வழிகாட்டினார். ஏனெனில் ஆண்டவரின் நோக்கம் பாவிகளும் மனம்மாறி புது வாழ்வு பெற வேண்டும் என்பதே. இந்த செயல் பரிசேயர்களுக்குப்  பிடிக்காத செயலாக இருந்தது. இருந்தபோதிலும் பரிசேயர்களை இயேசு மதித்துள்ளார் என்பதற்கு இன்றைய நற்செய்தி வாசகம் ஒரு உதாரணம். பரிசேயர் ஒருவர் உணவு அருந்துவதற்காக
இயேசுவை  அழைத்திருந்தார். அப்பொழுது  இயேசு உணவு அருந்துமுன் கைகளைக் கழுவ வில்லை என்று பரிசேயர்கள் விமர்சனப்படுத்தினர். எனவே இயேசு அகத்தூய்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி  சுட்டிக்காட்டினார். புறத்தூய்மை விட அகத்தூய்மை தான் முக்கியமானது என்று இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். நம்முடைய உள்ளமும் எண்ணமும் சிந்தனைகளும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் உள்ளத்தை அழகு படுத்த நாம் செய்ய வேண்டிய ஒரு செயலையும் நம் ஆண்டவர் இயேசு கூறியுள்ளார். அது என்னவெனில் தம்மிடம் உள்ளவற்றை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்வதும் தான தர்மங்கள் செய்வதுமே. மனதிலுள்ள வெறுப்புக்கள் தீய சிந்தனைகள் உலக இச்சைகளை எல்லாம் களைந்து விட்டு அதை அன்பாலும் நல்ல எண்ணங்களாலும் நிரப்புவதோடு அதை மற்றவரோடும் பகிர வேண்டும். அதேபோல நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிரும் தாராள உள்ளமும் நம்மிலே வளர்ந்து விட்டால் நம் உடலும் மனமும் உண்மையான அழகைப் பெறும். அகமும் புறமும் அழகாகும் போது இறைவனும் நம்மில் மகிழ்வார். நற்செயல்களாலும் நல்லெண்ணங்களாலும் அகத்தையும் புறத்தையும் அழகுபடுத்தத் தயாரா?

இறைவேண்டல்:

தூய்மைக்கும் அழகுக்கும் உறைவிடமே எம் இறைவா! நல்லெண்ணங்களாலும் நற்செயல்களாலும் எங்கள் அகத்தையும் புறத்தையும் அழகுபடுத்தும் வாழ்வு வாழ எம்மை வழிநடத்தும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்