கடவுளை மனம் வருந்தச் செய்யாதிருப்போம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 6 செவ்வாய்
I: தொநூ: 6:5-8,7:1-5,10
II: திபா:  29:1-2,3-4,9-10
III: மாற்:  8:14-21

நம்மேல் அன்பு கொண்ட ஒருவர், நாம் நல்லவர்கள் என்று சான்று பகர்ந்த ஒருவர் ,நம்மை வளர்த்தெடுத்த ஒருவர் நம்முடைய செயல்களில் வேறுபாட்டைக் கண்டு நம்மை அன்பு செய்ததற்காக மனம் வருந்துகிறார் என்பதை நாம் உணர்ந்தால் நம்முடைய மனநிலை என்னவாக இருக்கும் என சற்று சிந்திப்போம். அதைவிட நம்மை நேசித்தவர்களின் இதயம் எவ்வளவு வருந்தும் என நாம் உணர்ந்ததுண்டா?

தன் படைப்புகளையெல்லாம் நல்லதாக கடவுள் கண்டார். அதற்கெல்லாம் சிகரமாக மனிதனைப் படைத்தார். மனிதனை அன்பு செய்தார். அதே கடவுள் மண்ணுலகில் மனிதனைப் படைத்ததற்காக வருந்துகிறார் என நாம் இன்றைய முதல்வாசகத்தில் வாசிக்கிறோம். கடவுள் இந்த அளவிற்கு வருந்துகிறாரென்றால் மனிதனுடைய போக்கு எந்த அளவிற்கு தீமை நிறைந்ததாக இருந்திருக்கும்?

அதேபோல நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் தன் சீடர்களின் அவநம்பிக்கையைக் கண்டு வருந்துகிறார். சீடர்கள், இயேசுவின் வல்ல செயல்களுக்கெல்லாம் சான்று பகரவும் அவ்வாறே வல்ல செயல்கள் புரியவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் இயேசுவின் அதிசயங்களையும் அற்புதங்களையும் கண்ட அவர்கள் உணவில்லை என்று எண்ணி கவலைப்படுவதைக் கண்டு வருந்துகிறார் அவர். 

நம்முடைய வாழ்வை சிந்திப்போம்.நம்மில் எத்தனை பெற்றோர்கள் ஏன் இவனைப் பெற்றேன் என வருந்துகிறார்கள்? நம்முடைய நண்பர்களோ அல்லது உறவினர்களோ நம்மை அன்பு செய்ததை எண்ணி வருந்தியிருக்கிறார்களா?  ஆம் எனில் நாம் மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தீமைகளை அகற்றி நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதை உணர்வோம். 

 இறைவேண்டல் 
அன்பு இறைவா நீர் எம்மைக் குறித்து மனம் வருந்தாத வண்ணம் நாங்கள் வாழ வரமருளும். ஆமென்

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்