தவறாக எடைபோடும் குணத்தைத் தவிர்ப்போம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் நான்காம் புதன்
I: எபி: 12: 4-7,11-15
II: திபா: 103: 1-2. 13-14. 17-18
III: மாற்: 6: 1-6
சில தினங்களுக்கு முன்பு நான் ஒரு குறும்படம் பார்த்தேன். விலையுயர்ந்த காலணிகள் கொண்ட கடை. ஒரு பெண் காலணி வாங்க வருகிறார். கடையில் உள்ள மற்றொரு பெண் கடைக்கு வந்திருந்த பெண்ணை மிகவும் ஏளனமாகப் பார்க்கிறார். காரணம் அப்பெண் மிக சாதாரணமான ஆடை அணிந்து பார்ப்பதற்கு எளிமையாக இருந்தார். அதனால் அப்பெண்ணால் இத்தகைய விலையுயர்ந்த காலணியை வாங்க இயலாது என எண்ணினார். ஆகவே பகட்டான உடையணிந்த மற்றவர்களை கவனித்தார். இப்பெண்ணை ஓரங்கட்டினார். இறுதியாக பகட்டான ஆடைகள் அணிந்தவர்களெல்லாம் கடையிலிருந்த அப்பெண்ணின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மாறாக எளிய தோற்றத்தில் காணப்பட்ட அப்பெண் விலையுயர்ந்த காலணிகளை வாங்கினார். கடையிலிருந்து செல்லும் போது "யாரையும் தவறாக எடை போடாதீர்கள் " எனச் சொல்லி சென்றார்.
மனிதர்களிடத்தில் தொன்றுதொட்டே காணப்படும் ஒரு மோசமான பழக்கம் என்னவென்றால் மனிதர்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப எடைபோடுவது. ஒருவரின் உடை, கோலம் ,செல்வம், நாடு,ஊர்,சாதி, வேலை, குடும்பம் என அரைகுறையாக தெரிந்து வைத்துக்கொண்டு தவறாக விமர்சிப்பதும் தவறாக நடந்துகொள்வதும் நம்மிடையே ஊறிப்போன பழக்கமாக இருக்கிறது. இதனால் பிறர் எத்தகைய மன உளைச்சலை சந்திக்கிறார்கள் என்பதை பல வேளைகளில் நாம் மறந்து விடுகிறோம்.
இன்றைய நற்செய்தி பகுதி நாம் பலமுறை வாசித்து தியானித்ததுதான்.இயேசு கற்பித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த அவருடைய சொந்த ஊர் மக்கள் அவருடைய ஞானத்தைக் குறித்து பெருமை பாராட்டாமல் அவருடைய குடும்பப் பின்னணியைக் கொண்டு தவறாக எடை போட்டனர். இவர்களுடைய இந்த பண்பு இயேசுவுக்கு மனவருத்தை தந்தது. அவரால் வல்ல செயல்களை செய்ய முடியவில்லை என்பதை நாம் வாசிக்கிறோம்.
ஒருவர் எச்செயலை செய்கிறார், அவர் எந்தக் கருத்தை சொல்கிறார், அவை நமக்கு பயனுள்ளதா, நல்லவையா என்பதைத் தான் நாம் ஆலோசிக்கவேண்டும். மாறாக தவறாக எடை போட்டு எதிர்மறையாக விமர்சிப்பது நன்மை பயக்காது. இதை மனத்தில் கொண்டு பிறரை தவறாக எடை போடுவதைத் தவிர்ப்போம். நமது மனநிலையிலும் அணுகுமுறையிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
இறைவேண்டல்
அனைவரையும் அனைத்தையும் நன்மையாகக் காணும் இறைவா! பிறரைத் தவறாக எடைபோடும் மனநிலையை எம்மிடமிருந்து அகற்ற வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Daily Program
