அம்மாவின் பாசத்துக்குத் தடைபோட முடியுமோ? | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

அம்மாவின் பாசத்துக்குத் தடைபோட முடியுமோ?

எதிர்பார்ப்பே இல்லாத ஓர் உறவு இருக்குமானால், அது தாயின் உறவுதான்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 98 வயதான அடா கியாட்டிங், லிவர்பூலில் அமைந்துள்ள ஒரு காப்பகத்தில் வசித்து வந்தார். இவருடைய 80 வயதுடைய மூத்த மகன் டாம் 2016ஆம் ஆண்டு இன்னொரு காப்பகத்தில் சேர்ந்துகொண்டார். திடீரென்று தமது மகனுக்கு அதிகக் கவனிப்பு தேவைப்பட்டது. இதை அறிந்த தாய் அடாவால் தம் காப்பகத்தில் இருக்க முடியவில்லை. தன் மகன் வசிக்கும் காப்பகத்துக்கே சென்று தற்போது தம் மகனோடு வசித்து வருகிறார்.

அடாவுக்கு நான்கு குழந்தைகள். ஒரு குழந்தை 13 வயதிலேயே இறந்து விட்டது. மற்ற மூன்று குழந்தைகளும் உயிரோடு இருக்கிறார்கள். இவர்களுள் மூத்த மகன் டாம் திருமணம் செய்துகொள்ளவில்லை. எப்போதும் தன் அம்மாவோடு இருப்பவர். "காப்பகத்தில் தம் மகனை நல்ல முறையில் கவனிக்கப் பலர் இருந்தாலும், ஒரு தாயின் அன்பும் அரவணைப்பும் அவனுக்குத் தேவைப்படுகிறது. எனவேதான் என் மகனோடு சேர்ந்து அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்கிறேன்" என்கிறார் அடா கியாட்டிங்.

தற்போது இருவரும் பக்கத்துப் பக்கத்து அறைகளில் வசிக்கிறார்கள். இருவரும் அடிக்கடி பேசிக்கொள்கிறார்கள். இருவரும் சேர்ந்து உணவருந்துகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்வுகளைச் சேர்ந்து பார்க்கிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் 'குட் நைட்' சொல்லிவிட்டுத் தூங்கச் செல்கிறார்கள். மோசமான நிலையில் இருந்த டாமின் உடல்நிலை இப்போது சீராகி வருகிறது.

"அடாவைப்போல ஒருவரைப் பார்ப்பது அரிது. செவிலியராக இருந்த அடா இந்த வயதிலும் தன்மகனை அவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்”.

 "யாருமே என்னை நேசிக்கவில்லை” என்று கத்தினேன். "நான் இன்னும் மரணித்துவிடவில்லை” என்றார் தாய்.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image