மீட்புத்திட்டத்தில் நம் பெயரும் உள்ளது! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

திருவருகை காலம்-மூன்றாம் வாரம் சனி
I: தொநூ: 49: 1-2, 8-10
II:  திபா 72: 1-2. 3-4. 7-8. 17
III: மத்தேயு: 1:1-17

கிறிஸ்மஸ் விழாவை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிற தருணத்தில் இன்று நாம் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை நற்செய்தி வாசகத்தில் நாம் தியானிக்கிறோம். யூதாவின் குலத்தை விட்டு செங்கோல் என்றும் நீங்காது என்ற தந்தையின் வாக்குறுதி இயேசுவின் மூலம் நிறைவேற்றப்படுவதை இம்மூதாதையர் பட்டியல் நமக்கு விளக்குகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இறைவன் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவராக இருக்கிறார் என்பதை இவ்வாசகப்பகுதி நமக்கு அறுதியிட்டுக் கூறுகிறது. அதாவது 42 தலைமுறைகளாக தன் வாக்குறுதியைக் காப்பாற்றி இறைவன் தன் தனித்தன்மையை தன் உண்மைத் தன்மையை உடன்படிக்கை தவறா நிலையை நிலைநாட்டுகிறார்.
நாமும்  விண்ணகத் தந்தையின் பிள்ளைகளாக கொடுத்த வாக்கை  தவறாது நிறைவேற்றி நமது உண்மைத் தன்மையை உலகிற்கு உணர்த்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

அத்தோடு நாம் இந்நற்செய்தி பகுதியை தியானிப்பதால் பெறுகின்ற மற்றொரு முக்கியமான சிந்தனை "நமது பெயரும் மீட்புத் திட்டத்தில் எழுதப்பட்டுள்ளது" என்பதே. இந்நற்செய்தி பகுதியில் ஏற்கனவே நாம் கூறியுள்ளதைப் போல மூன்று முறை பதினான்கு தலைமுறைகள் பிரிக்கப்பட்டு பெயர் பட்டியல் தரப்பட்டுள்ளது. இப்படியலிலுள்ள பெயர்களில் அரசர்கள் மற்றும் சில பெண்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பிடப்பட்ட எல்லாரும் கடவுளுக்கு ஏற்றமுறையில் வாழ்ந்தவர்கள் அல்ல. ஒருசிலர் தவறான வழியில் நடந்து கடவுளை விட்டகன்றவர்கள். ஆயினும் அவர்களையும் கடவுள் மீட்பின் வரலாற்றில் கருவிகளாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

கடவுளால் யாரையும் எப்பேற்பட்டவர்களையும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். நாமும் அப்படித்தானே? நம்மையும் அவர் கருவிகளாகப் பயன்படுத்த தடையுண்டா என்ன? மீட்பு வரலாறு இன்னும் முடிந்துவிடவில்லை. கடவுள் முடிவே இல்லாதவர். அவர் இருக்கும் வரை மீட்பு வரலாறு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அவ்வாறெனில் அவ்வரலாற்றுக்காக நம்மையும் அவர் கருவிகளாகப் பயன்படுத்துவார் என்பதில் ஐயமில்லை. 
எனவே நாம் மீட்பு திட்டத்தின் உழைப்பாளிகள் என்பதை உணர்ந்து நம் வாழ்வு பாதையை சரிசெய்ய வேண்டும். 

இறைவனின் மீட்பு திட்டத்தில் நாமும் ஒரு கருவியாக பயன்பட நம்மையே முழுமையாக ஆயத்தப்படுத்துவோம். திருப்பலி,  அருள்சாதனங்கள், இறைவேண்டல், இறைவார்த்தையை வாசித்து தியானித்தல் போன்றவற்றில் முழுமையாக ஈடுபட்டு இறைவனின் அருளை நிறைவாக பெற முயற்சி செய்வோம். பிறரும் இறைவனின் அருளை பெற்று இறைவனின் மீட்பை பெற்றிட வழிகாட்டுவோம். அதுதான் உண்மையான இறையாட்சியின் பாதையில் பயணிப்பதற்கு வழிகாட்டும். அதன் வழியாக மீட்பு திட்டத்தில் நமது பெயரும் இடம் பெறும் அளவுக்கு கடவுளின் முன்னிலையில் நாம் உயர்த்தப்படுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! உமது  மீட்பு திட்டத்தில்   நாங்களும் கருவிகளாக பயன்பட எங்களை வழிநடத்தும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்