“செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமும்” - செயற்கை நுண்ணறிவு பயிற்சி | Veritas Tamil
வியட்நாம் அருள்பணியாளர், திருப்பணி சேவையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த குருக்களுக்கும் பொதுநிலையினருக்கும் பயிற்சி அளிக்கிறார்
வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள ஃபூ குயோங் மறைமாவட்டத்தின் தகவல் தொடர்பு அலுவலகத் தலைவரும், C-mate அமைப்பின் நிறுவனருமான அருள்பணி. பால் ஹோவாங் மான் ஹுய், திருப்பணி சேவையில் செயற்கை நுண்ணறிவை (AI) எவ்வாறு புரிந்துகொண்டு பயன்படுத்துவது என்பது குறித்து கத்தோலிக்க அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
அருள்பணி. பாலைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புகொள்வது என்பது வெறுமனே தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பது மட்டுமல்ல. குறிப்பாக இளைஞர்கள் உள்ளிட்ட கத்தோலிக்கர்களின் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதைப் புரிந்துகொள்வது ஒரு திருப்பணி சார்ந்த தேவையாக அவர் கருதுகிறார்.
“மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளைத் திருஅவை புரிந்துகொள்ளவில்லை என்றால், அவர்களின் வாழ்வியல் தளத்திற்கு வெளியே திருஅவை நின்றுவிடும் அபாயம் உள்ளது,” என்று அவர் கூறினார்.
அவரது அணுகுமுறை, அண்மைய திருஅவைப் போதனைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் 2024ஆம் ஆண்டிற்கான உலக சமூகத் தொடர்பு நாளுக்காக வழங்கிய “செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமும்” என்ற செய்தியும், நம்பிக்கைப் பேராயத்தின் (Dicastery for the Doctrine of the Faith) மற்றும் பண்பாடு மற்றும் கல்விக்கான பேராயத்தின் (Dicastery for Culture and Education) இணைந்து 2025ஆம் ஆண்டு வெளியிட்ட “Antiqua et Nova” என்ற ஆவணமும் இதில் அடங்கும்.
அருள்பணி. பால் நடத்தும் பயிற்சித் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படை தொழில்நுட்ப அறிவையும், AI தொடர்பான கத்தோலிக்கத் திருஅவைப் போதனைகளையும் ஒருங்கிணைக்கின்றன. இதில் பங்கேற்பவர்கள் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள், Prompt எழுதுதல், பங்குத்தள நிர்வாகம் மற்றும் திருப்பணி சேவைகளில் செயற்கை நுண்ணறிவின் நடைமுறைப் பயன்பாடுகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவின் திறன்கள் மற்றும் வரம்புகளைப் புரிந்துகொள்ளச் செய்வது அவரது பயிற்சிகளில் முக்கிய அம்சமாக உள்ளது. AI என்பது ஒரு சக்திவாய்ந்த “சொல்-முன்கணிப்பு இயந்திரம்” என்று அவர் விளக்குகிறார். அதற்கு மனச்சான்றோ, நம்பிக்கையோ கிடையாது. எனவே, மனிதர்களின் தீர்மானம், உறவுகள் அல்லது ஆன்மிகப் பகுத்தறிதல் ஆகியவற்றை அது ஒருபோதும் மாற்ற முடியாது என அவர் வலியுறுத்துகிறார்.
தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவதோடு, தனிப்பட்ட சந்திப்புகள், திருவருட்சாதனைகள் மற்றும் ஆன்மிக உடனிருப்பு போன்ற திருப்பணியின் முக்கிய அம்சங்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்குவதற்கு திருஅவைப் பணியாளர்களுக்கு உதவுவதே இந்தப் பயிற்சிகளின் நோக்கமாகும்.
வியட்நாமின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறவற சபைகள், குருத்துவக் கல்லூரிகள் மற்றும் மறைமாவட்டக் குழுக்களுக்காக அருள்பணி. பால் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உருவாக்கப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
அவர் பயிற்சி வழங்கிய நிறுவனங்களில் வியட்நாம் கத்தோலிக்கக் கழகம், சைகோனின் புனித யோசேப்பு பெரிய குருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல நிறுவனங்களும், பல்வேறு துறவற சபைகள் மற்றும் மறைமாவட்டங்களுக்குச் சேவை செய்யும் தகவல் தொடர்பு மற்றும் உருவாக்க மையங்களும் அடங்கும்.
மேலும், ஃபூ குயோங் மற்றும் சுவான் லொக் மறைமாவட்டங்களைச் சேர்ந்த குருக்களுக்கும் அவர் தொடர்ந்து உருவாக்கப் பயிற்சிகளை வழங்கி வருகிறார். இதன் மூலம், தங்களின் திருப்பணி மற்றும் நிர்வாகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு நடைமுறையில் பயன்படுத்தலாம் என்பதை அருள்பணியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
எதிர்காலத்தில், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினருக்காக ஆன்லைன் பயிற்சிப் பாடநெறிகளை உருவாக்க அருள்பணி. பால் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் செயற்கை நுண்ணறிவை குறித்த மேலும் தெளிவான மற்றும் பொறுப்பான அணுகுமுறையை கத்தோலிக்கர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
மேலும், “The Word-Prediction Machine” (Cỗ Máy Đoán Chữ) என்ற தலைப்பில் வியட்நாமிய மொழியில் ஒரு நூலையும் அவர் தயாரித்து வருகிறார். நம்பிக்கையின் பார்வையில் செயற்கை நுண்ணறிவு குறித்து கத்தோலிக்கர்கள் சிந்திப்பதற்கு இந்த நூல் உதவும் என்று அவர் நம்புகிறார்.
தனது பயிற்சி முயற்சிகள் மற்றும் C-mate அமைப்பின் வழியாக, வியட்நாமில் உள்ள திருஅவை வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை விமர்சன ரீதியாகவும், திருப்பணி நோக்குடனும் அணுகுவதற்கு அருள்பணி. பால் உதவி செய்து வருகிறார்.
மக்களுக்கும் திருஅவையின் பணிக்கும் சேவை செய்யும் ஒரு கருவியாகவே செயற்கை நுண்ணறிவு தனது சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பதே அவரது அணுகுமுறையாகும்.
