அழைப்போர் குரல் கேட்கும் ஆண்டவரை அண்டுவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

30 மே 2024
பொதுக்காலம் 8ஆம் வாரம் - வியாழன்
1 பேதுரு திருமுகம் 2: 2-5, 9-12
மாற்கு 10: 46-52
அழைப்போர் குரல் கேட்கும் ஆண்டவரை அண்டுவோம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், புனித பேதுரு புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் தூய பாலை ஆவலோடுக் குடித்து வளர்வதைப்போல் புதிய கிறிஸ்தவர்களை ஆன்மீகத்தில் வளர்ச்சியுற ஆவல் கொள்ளுமாறு அழைக்கிறார். இது விசுவாசிகளுக்கு அறிவுரை மற்றும் ஊக்கமளிக்கும் அறிவுரையாக உள்ளது. .
பேதுரு இங்கே, இயேசுவை மக்கள் நிராகரித்த "உயிருள்ள கல்லுடன்" ஒப்பிடப்படுகிறார். மக்கள் இயேசுவைப் புறக்கணித்தாலும், கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர் மதிப்புள்ள கல் இயேசு என்கிறார்.
அவ்வாறே, நம்பிக்கையாளர்களாகிய கிறிஸ்தவர்களும், உயிருள்ள கற்களைப் போன்றவர்கள் என்றும், இயேசுவின் வழியாக ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படும் சமூகமாக உள்ளனர் என்றும் விவரிக்கிறார்.
கிறிஸ்வர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறப்புமிக்க வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர் என்றும் கடவுளின் சொந்த மக்கள் என்றும் புனித பேதுருவால் விவரிக்கப்படுகிறார்கள். இருளில் இருந்து (அறியாமையிலிருந்து) அற்புதமான ஒளிக்கு அழைத்து வந்த கடவுளின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது கிறிஸ்தவர்களின் பணி என்று வலியுறுத்துகிறார்.
முன்பு, அவர்கள் கடவுளின் மக்களாகக் கருதப்படவில்லை. ஆனால் இப்போது அவர்கள் கடவுளின் மக்கள் என்ற புதிய அடையாளத்தை பேதுரு அவர்களுக்குக் காட்டுகிறார்
கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தங்கள் ஆன்மாக்களுக்கு தீங்கு விளைவிக்கும் உலக ஆசைகளைத் தவிர்க்கவும், புறவினத்தாரிடையே நல்ல வாழ்க்கையை வாழவும் வேண்டும் என்று மேலும் அவர் நினைவூட்டுகிறார். இதன் மூலம், கிறிஸ்துவில் நம்பிக்கையற்றவர்களான பிற இனத்தினர் கிறிஸ்தவர்களைத் தீயவர்கள் என்று பழித்துரைக்க நேர்ந்தாலும் கிறிஸ்தவர்களின் நற்செயல்களைக் கண்டு, கடவுள் சந்திக்க வரும் நாளில் அவரைப் போற்றிப் புகழ்வார்கள் என்பதால், புனிதமான வாழ்க்கையை வாழவும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கவும் புனித பேதுரு போதிக்கின்றார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் பார்வையற்றவரான திமேயுவின் மகன் பர்த்திமேயு, இயேசுவைச் சந்தித்த பிறகு ஒரு புதிய வாழ்க்கை மற்றும் ஒரு புதிய உறவைப் பெறுகிறார். இயேசுவால் குணமடைவதற்கு முன், அவர் இருளில் இருந்தார். இயேசு அருகில் இருப்பதைக் கேள்விப்பட்டதும், அவர் , “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத்தினார். அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரை அமைதிப்படுத்த முயற்சித்தாலும், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார் என மாற்கு குறிப்பிடுகிறார்.
பர்த்திமேயுவின் குரல் கேட்டு, பர்திமேயுவை முன் வரும்படி இயேசு அழைக்கிறார். இயேசு அந்த பார்வையற்றவரிடம் என்ன வேண்டும் என்று கேட்க, “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார். “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார். அவருடைய வழியில் இயேசுவைப் பின்பற்றுவதே அவருடைய வழியாக மாறியது.
சிந்தனைக்கு.
நம் வாழ்க்கையில் சில நேரங்களில் சில விடயங்களை நாம் தெளிவாகப் பார்க்க முடியாததால் தடுமாறுகிறோம். எது நல்லது, எது கெட்டது, எது சரியானது எது தவறானது என்று ஆழ்ந்து அலசிப்பார்த்து முடிவெடுக்க இயலாமல் வழி தவறுகிறோம். நமது பார்வை பல தருணங்கில் குறுகியப் பார்வையாகவும் உள்ளது. மேலும், நமது எண்ணமும் செயலும் கடவுளோடு ஒன்றிப்பதில்லை.
நமது குறுகிய பார்வையும் மனப்பான்மையும் நம்மை இருளில் ஆழ்த்துவதால் நாம் தடுமாறுகிறோம். நம் சிந்தனை தெளிவற்றதாக உள்ள தருணங்களில், பர்திமேயுவைப் போல் ஆண்டவரை கூவி அழைக்க வேண்டும். பர்திமேயு, இறைவனிடம் நாம் எவ்வாறு மன்றாட வேண்டும் என்பதற்கு ஒரு அற்புதமான உதாரணத்தைத் தருகிறார். வாழ்க்கையில் நாம் அதிகம் போராடுவது எது? நமக்கு அதிக வேதனையைத் தருவது எது? இவ்வாறு நமது மிக மிக்கிய தேவை எது என்பதை முதலில் உணர வேண்டும். பின்னர், பர்திமேயுவைப் போலவே நாமும் நம் இறைவனிடம் குரல் எழுப்ப வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் ‘ஆண்டவரே, ஆண்டவரே' என்பதல்ல.
ஈரண்டுகளுக்கு முன், எனது இடது கரத்தின் முட்டியில் ஒருவகையான குடைச்சல் எற்பட்டு மிகவும் அவதிப்பட்டேன். கையை வெட்டி எறிந்துவிடலாம் என்றுகூட நினைக்கத்தோன்றியது. ஏறக்குறைய மூன்று வாரங்கள் முயற்சித்தும் மருத்துத்தால் நலமடையவில்லை.
ஒருநாள் இரவு வலி தாங்கமுடியமால் ஆண்டவரிடம் அழுது மன்றாடினேன். மறுநாள் இங்கிலாந்து, லண்டன் பகுதியிலிருந்து ஒரு அருள்பணிளார் என்னை கைத்தொலைபேசியில் அழைத்தார். அவர் அப்போதுதான் திருப்பலி முடித்துவிட்டு அறைக்கு வந்ததாகவும், எனது கைத்தோலைபேசி எண் அவரது கைத்தொலைப்பேசியில் காணப்பட்டதாகவும் கூறினார். அவர் உடனே அந்த எண்ணுக்கு அழைத்து, என்னைப் பற்றி விசாரித்தார். நான் என்னை விவரித்தேன். அவர் அப்போதே, உங்கள் கை நலமாகிவிட்டது, பணியைத் தொடருங்கள் என்றார். அந்த நாள் முதல் எனது கை நலமானது. அந்த அருள்பணியாளரின் பெயர் அரோக்கிய சீலன். இன்றும் என்னோடு தொடர்பில் உள்ளார். அன்று பர்திமேயுவின் நிலையில் நானும் இருந்தேன். ஆண்டவரிடம் குரல் எழுப்பினேன், நலம் பெற்றேன்.
முதலில், பர்திமேயுவைச் சுற்றி இருந்தவர்கள் அவரைக் கண்டித்து, அமைதியாக இருக்கச் சொன்னார்கள். பார்திமேயு நம்பிக்கையில் பலவீனமாக இருந்திருந்தால், அவர் கூட்டத்தின் பேச்சைக் கேட்டு, விரக்தியில் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் மற்றவர்களின் கண்டனங்களைப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், " உரக்கக் கூப்பிட்டார்" என்பது நமக்கான பாடமாக உள்ளது.
நமது இறைவேண்டலுக்குச் சோதனைகளாக இடையூறுகளாக பல அம்சங்கள் இருக்கலாம். நாம் இறைவனின் குரலுக்குச் செவிசாய்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் நமக்கு இரங்குவார். முதல் வாசகத்தில், பேதுரு கூறுவதைப்போல், நம் ஆண்டவர் வெறும் கல் அல்ல. அவர் உயிருள்ள கல். அவருக்கு உணர்வு உண்டு. பர்திமேயுவைப் போல நம்பிக்கையோடு அவரைத் தொடர்வோர், வாழ்வு பெறுவர்.
வி.ப. 3:7ல், ‘எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்’ என்றுதான் கடவுள் மோசேவுக்கு அறிவித்தார். அவ்வாறே. திருப்பாடல் 116:1-2-ல், “எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்’ என்று வாசிக்கிறோம்.
முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனை
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன் (கவிஞர் கண்ணதாசன்)
இறைவேண்டல்.
‘நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்’ என்றுரைத்த ஆண்டவரே, எனது துன்ப வேதனையில் உதவிக்கு உம்மைக் கூவி அழைக்கும் நம்பிக்கை என்னில் பெருகச் செய்வீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
