துணிவற்ற கிறிஸ்தவர் பயனற்ற கிறிஸ்தவர் | ஆர்.கே. சாமி | VeritasTamil

16 ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 3ஆம் வாரம் - செவ்வாய்

தி. பணிகள்   7: 51- 8: 1a                                             

யோவான்  6: 30-35

முதல் வாசகம்.

முதல் வாசகமானது,  இயேசு கிறிஸ்துவின் ஆரம்பகால சீடர்களில் ஒருவரான ஸ்தேவான்  என்பவர்  எருசலேமில் மூப்பர் மற்றும்  மறைநூல் அறிஞர் முன் கொண்டுவரப்பட்டு அநீதியாகக் கொல்லப்பட்ட  ஒரு நிகழ்வை   விவரிக்கிறது. மெசியாவின் வருகையை முன்னறிவித்த இறைவாக்கினர்களைத்  துன்புறுத்தியதற்காக,  ஸ்தேவான்  மூப்பர் மற்றும்  மறைநூல் அறிஞர்களை “திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும், ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே,’ என்று  குரல் எழுப்பினார். 

ஸ்தேவான் இவ்வாறு அவர்களைத் திட்டியது  மூப்பர் மற்றும்  மறைநூல் அறிஞரை சினம் கொள்ளச் செய்தது.  இதனால், அவரை மேலும் விட்டு வைக்க மனம் இல்லாமல், அவரைக் கல்லெறிந்து கொன்றார்கள்.  சவுல் (பவுல் அடிகள்)  அப்போது அங்கிருந்ததை லூக்கா சுட்டிக்காட்டுகிறார்.   ஸ்தேவான் கல்லெறியப்பட்டாலும்,   தனது நபிக்கையில்  உறுதியாக இருந்தார்.  தன்னை துன்புறுத்தியவர்களை மன்னிக்கும்படி கடவுளிடம் விண்ணப்பித்தவாறு  உயிர்விட்டார். 


நற்செய்தி.

திரண்டிருந்த மக்கள் கூட்டம் இயேசுவிடம், "நாங்கள் உங்களைப் பார்த்து நம்பிக்கைக் கொள்ள நீங்கள் என்ன அடையாளம் செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினர். மேலும்,
 ‘நம் முன்னோர்கள் பாலைநிலத்தில்  மன்னா சாப்பிட்டார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
அவர் (மோசே)  அவர்களுக்கு உண்பதற்கு வானத்திலிருந்து அப்பத்தைக் கொடுத்தார்" என்றனர்.

இயேசு அவர்களிடம், வானத்திலிருந்து அப்பத்தைக் கொடுத்தது மோசே அல்ல;
என் தந்தையே விண்ணிலிருந்து அருளினார் என்றும், இப்போது   உண்மையான அப்பத்தை உங்களுக்குத் தருகிறார் என்றும் பதில் அளித்தார். இயேசு குறிப்பிடும் கடவுளின் அப்பம் என்பது வானத்திலிருந்து இறங்குவது மற்றும்  உலகிற்கு உயிர் கொடுப்பது  என்பதைத்  தெளிவுப்படுத்துகிறார்.  

இயேசுவின் பதிலைக் கேட்டவர்கள்,  இயேசுவிடம், "ஐயா, இந்த அப்பத்தை  எங்களுக்கு எப்போதும் கொடுங்கள்" என்று கேட்கவே, “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.
 

சிந்தனைக்கு.

இரு வாசகங்களும்  இறைமக்களுக்கும்  கடவுளுக்குமிடையே இருக்கும் உறவைப் பற்றி பேசுகின்றன. ஒருவர் எவ்வளவு அதிகமாக கடவுளிடம் நெருங்கி வருகிறாரோ, அந்த அளவுக்கு அந்த உறவு வலுவாக இருக்கும். உலக வாழ்க்கை மற்றும் நிலைவாழ்வுக்கான அனைத்தையும் கடவுள் வழங்குவார் என்பதை இறைமக்கள் உணர்ந்திட வேண்டும்.    

இன்றைய வாசகங்கள் நமது நம்பிக்கை வாழ்வக்கு ஒரு சவாலாக உள்ளன.  இயேசுவுடனான உறவுக்காக ஸ்தேவான்  உயிரைவிட துணிந்தார். இதன் வழியாக திருஅவையின் முதல் மறைசாட்சியானார்.  இவரது மரணமும் தியாகமும் உயிர்த்த ஆண்டவருடனான நமது  உறவு வாழ்வுக்குச் சவாலாக உள்ளது.

நமது  சாட்சிய வாழ்வுக்கு  ஆதாரமாக இயேசுவைத் தேடுகிறோமா? அவர் வழங்கும் உணவான நற்கருணைக்கு முன்னுரிமை அளிக்கிறோமா?  அவருடைய வார்த்தை, அவரது வாழ்க்கை, அவரது உடல் மற்றனைத்தையும் விட  நமக்கு மேன்மையானவை என்று ஏற்கிறோமா? கடந்த ஏப்ரல் 10-ம் திகதி, ‘துணிவு இல்லாத கிறிஸ்தவர்’ ‘பயனற்ற கிறிஸ்தவர்’என்றுரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

உடலுக்கு உணவு இன்றியமையாதது. ஆனால், அதனால் மட்டும் மனிதனாக வாழ்ந்து விட முடியாது. உள்ளத்திற்கு உரமூட்டும் நல்ல ஆறுதலான வார்த்தைகள் தேவை. ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ (மத் 4:4) எனும் கடவுளின் வார்த்தையை இயேசு மீண்டும் நினைவூட்டினார். இறைவார்த்தையை அள்ளி அள்ளி தந்த இயேசு, தானே இறைவார்த்தையாகவும் உள்ளார் என்பதில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இயேசு சமாரியப் பெண்ணிடம் வாக்களித்ததோ சாதாரண தண்ணீர் அன்று. இயேசு அளிக்கும் தண்ணீர் உயிரூட்டமான தண்ணீர். அவ்வாறே, நிலையான. நிறைவான  வாழ்வுதரும் அப்பத்தை (நற்கருணையை) இன்று வாக்களித்தார் இயேசு. அவரின் வார்த்தையில் நம்பிக்கை கொள்வோம். வானிலிருந்து இறங்கி வந்த உணவு இயேசுவே என்பதில் நமது நிலைவாழ்வு அடங்கியுள்ளது. 

நிறைவாக, நாம் ஸ்தேவானைப் போல்,  கல்லெறியப்பட்டு  அல்லது துன்புறுத்தப்பட்டு  இறக்க வேண்டிய சூழல் இன்று எழாமல் இருக்கலாம்.  ஆனால், நமது இயேசுவுடனான  நம்பிக்கை உறவை வெளிப்படுத்த உயிரைவிடவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.  நமது நம்பிக்கை வாழ்வுக்குச் சோதனை காலம் ஒருநாள் வரக்கூடும். அது எப்போது என்று நாம் அறியோம்.  

ஸ்தேவானைப்போல நம்மைத் துன்புறுத்துவோரை மன்னிக்கும் மனப்பக்குவம் கிறிஸ்வர்களுக்கு இன்றியமையாதது. “தந்தையே இவர்களை மன்னியும்” (லூக் 23: 34) என்ற இயேசுவின் வார்த்தைகளை ஒத்திருக்கும் ஸ்தேவானின் வார்த்தைகள், அவர் தன்னைக் கல்லால் எறிந்து கொன்றவர்களை மன்னிப்பதை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன என்பதால்,  ஸ்தேவான் நமக்கு  ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆவார். 

மன்னித்து வாழ்வதே கிறிஸ்தவம் என்பதை நினைவில் கொண்டு, கிறஸ்துவுக்குச் சாட்சியம் பகர்வோம். 


இறைவேண்டல்.

அன்பு இயேசுவே, வாழ்வு தரும் உணவான உமது வார்த்தைகளையும், நிறைவு தரும் விருந்தான நற்கருணையையும் எனக்கு வற்றாத விண்ணக உணவாக அளித்து வருவதற்காக நன்றி கூறுகிறேன். இதனால் நான் என்றும் உம்மோடு என்றும் இணைந்திருக்கவும், ஸ்தேவானைப்போல் துணிவுப் பெறவும்  அருள்புரிவீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452