உழைப்பின் மேன்மை | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

"மனித உழைப்பு சுதந்திரமாக மேற்கொள்ளப் பட்டாலும் சரி அல்லது வேலை வழங்குவோரோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்டாலும் சரி, அது ஆள்தன்மைகொண்ட மனிதரிடமிருந்து நேரடியாக ஊற்றெடுக்கிறது. இயேசு கிறிஸ்து நாசரேத்தில் தாமே, தமது கைகளால் உழைத்ததனால் உழைப்புக்கு உயர்ந்ததொரு மாண்பைக் கொணர்ந்துள்ளார். மனித உழைப்பு பொருளாதார வாழ்வின் மற்ற கூறுகளைவிட மதிப்பு வாய்ந்தது. (இன்றைய உலகில் திருச்சபை 2:67)

“உழைக்கும் அருளை ஆண்டவர் யாருக்கு அளித்திருக்கிறாரோ, அவர்கள் தங்கள் தொழிலை பிரமாணிக்கமாகவும் பற்றுதலுடனும் செய்யவேண்டும். இதனால் ஆன்மாவின் பகைவனாகிய சோம்பலைத் தவிர்ப்பார்கள்" (புனித பிரான்சிஸ் அசிசியார்).

மனித வாழ்வில் உழைப்பே பெருமை என்பதை பேசாமல் உணர்த்திய பெருமான், உழைப்பாளர்களுக்கு உறுதுணையானவர், மே மாதத்தின் பெருவிழாவிற்குரியவர் மரியாவின் கணவர் தூய யோசேப்பு.

உழைப்பு என்பதையும், அதன் உள் ஆழத்தையும் எந்தப் பிழையுமின்றி தெளிவாக உணர்ந்திருந்தார். தச்சர் அவர் என்று மறைநூல் சொல்வதால் அவர் உழைப்பாளர் ஆவார். மூளையாலும், கையாலும் எப்போதும் முனைந்து அயராது உழைத்துக் குடும்பம் காத்தவர். தச்சன் மகன் என்று இயேசுவுக்கே முகவரி கொடுத்தவர். அவர் உழைப்பின் வழி வந்த இயேசு தம் வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகளைத் தன் தந்தையுடன் கடுமையாக உழைப்பதிலேயே செலவிட்டார். திருக்குடும்பத்திலிருந்தே இயேசு உழைப்பை அறிந்து கற்றார். உழைப்பதற்கு வளனார் இவரைப் படிப்படியாகப் பழக்கினார்.

உலகில் உழைப்பு என்பது இயற்கை நியதி. உழைப்பு என்பது உயர்வுக்கு வழி என்று உணர்ந்த இயேசு உழைப்பாளராகவே மக்களுக்கு அறிமுகமானார். உழைப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். இன்று தோண்டவும், துருவவும், ஆராயவும், கண்டுபிடிக்கவும், மாற்றவும், எழுப்பவும் அதனால் முன்னேறவும் ஆசைப்படுகின்ற மனிதர், உண்மை உழைப்பில் மகிழ்ச்சி அடையவும் வேண்டும்.

ஜோவும் அவரது மனைவியும், தங்களுடைய மூன்று மகன்களோடு, தாங்கள் புதிதாக வாங்கிய நிலத்தின் அருகே வீடுகட்டிக் குடிபெயர்ந்தனர். புதிய சூழலில், புதிய சமூகத்தில் அவர்களின் வாழ்வு தொடங்கியபோது, பக்கத்து வீட்டுக்காரர் அவரிடம், "புதிய சொத்தாக நீங்கள் வாங்கியுள்ள இந்த நிலத்தில் தங்கம் புதைந்து கிடக்கிறது” என்றார். உண்மையாகவே தங்கப் புதையல் இங்குள்ளது என்று நம்பிய அவர் அளவிலா மகிழ்ச்சியடைந்தார். "எனக்கு நல்ல உடல் நலத்தோடு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்களிடம் சொல்லி, நன்கு உழைத்து, புதையலைக் கண்டுபிடித்து பெரிய பணக்காரனாவேன்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். அவ்வாறே இதைப்பற்றி தன் மகன்களிடம் சொல்லவே, அவர்கள் திகைத்து கற்பனையில் மூழ்கினர்.

ஒரு புதிய உற்சாகத்தோடு அவர்கள் கடுமையான உழைப்பில் இறங்கினர். தங்கள் நிலத்தின் ஒரு பக்கத்தின் ஒரு மூலையிலிருந்து எதிர்ப்பக்கம் வரை வரிசையாக அதே சமயம் ஆழமாக தோண்டத் தொடங்கினர். இவ்வாறே ஏறக்குறைய நிலத்தின் பாதிப் பகுதியைத் தோண்டிவிட்டனர். ஆனால், தங்கம் கிடைக்கவில்லை. இவ்வாறு தோண்டும் பணி வீணாகத் தோன்றினாலும், தங்கள் கடின உழைப்பின்மேல் நம்பிக்கை வைத்தனர். முயற்சியை நிறுத்தவில்லை. இந்த உழைப்பின் தொடர்ச்சி ஆறு மாத காலமாக நடைபெற்றது. பயனில்லை.

இடையில் தந்தை ஜோவுக்கு ஒரு யோசனை தோன்றியது. தோண்டிய இடத்தை வீணாக்காது, அதில் ஏதாவது பயிர் செய்து தன் மகன்களின் உழைப்புக்கு அர்த்தம் கொடுக்கலாமே என்று எண்ணி, நன்றாகத் தோண்டிய இடங்களிலே சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு 

மற்றும் வெங்காயம் ஆகியவற்றைப் பயிர் செய்தார். கடுமையாக உழைத்தார். அவருடைய மகன்கள் தோண்டுவதில் தொடர்ந்து ஈடுபட்டனர். அடிமண்ணும், மேல் மண்ணும் இடம் மாறிச் செழித்து, பொன் விளையும் பூமியாக மாறியது. ஆம், அதுவரை அந்த ஊரார் கண்டிராத அதிக விளைச்சலைக் கண்டார். தொடர்ந்து தங்களுடைய விளைபொருள்களை விற்று பெரும் இலாபம் ஈட்டினார். இவர்களின் கடின உழைப்பால் சாதாரண நிலம் பொற்குவியலைக் கொடுக்கும் நிலமாக மாறியது. ஜோவின் குடும்பமும் சமுதாயத்தின் உச்ச நிலைக்குச் சென்றது.

அப்போதுதான் அவர் அன்று பக்கத்து வீட்டுக்காரர் சொன்னதை நினைவு கூர்ந்தார்: “இந்த நிலத்தில் தங்கம் புதைந்து கிடக்கிறது.”தங்கள் உழைப்பினால் நிலம் தரும் விளைப்பொருள்களே தங்கம் என்று புரிந்து கொண்டார். உழைப்பு எப்போதும் உயர்வையும், மகிழ்ச்சியையும் தரும் என்று உணர்ந்துகொண்டனர்.

மாறிவரும் இக்காலச்சூழலில் உழைக்கவேண்டும் என்ற நியதியை உயர்வாகக் கருதுவோம். ஏனெனில் “உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது"
(2 தெச.3 : 10) என்ற இறைவார்த்தை நமதாகட்டும்.

கற்றுக்கொள்வோம் உழைப்பின் மேன்மையை, 
அற்றுப் போகச் செய்வோம் உழைப்பைப் பற்றிய 
தவறான அணுகுமுறையை.
விட்டு விடுவோம் உழைப்பை இழிவாக எண்ணும் மனப்பான்மையை.
மொட்டுவிடச் செய்வோம் உள்ளத்தில் உழைப்பின் ஆர்வத்தை.
உழைக்கட்டும் மனித இனம்; உயரட்டும் உலகு.
நாசரேத்தூர் தச்சன் அருள் பொழிவாராக!