உரிமை வெல்ல ஊக்கம் கொள்க! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil
சிதைவிடத் தொல்கார் உரவோர்; புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு (597)
அம்பு ஆழமாகத் தைத்துப் புண்பட்டாலும் உறுதி குறையாத யானை போன்று ஊக்கம் உடையவர், தளராது தம் பெருமையை நிலைநாட்டுவார்.
'பெருமை பெற்று பெருவாழ்வு வாழ்க!' என்ற தலைப்பில் ஓர் ஓவியப் போட்டி நடைபெற்றது. அது குட்டிகளுக்கான போட்டி. யானைக்குட்டி, புலிக்குட்டி, சிங்கக்குட்டி கரடிக்குட்டி, ஓநாய்க்குட்டி, நரிக்குட்டி, மான்குட்டி, குதிரைக்குட்டி, ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டி, பன்றிக்குட்டி குரங்குக்குட்டி,முயல்குட்டி என ஆண், பெண், கால்நடைக் குட்டிகள் பெருவிருப்பத்தோடு அந்தத் தோகை மயில் நடத்தி வந்தப் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்தன.
குட்டிகளை எல்லாம் ஒரே இடத்தில் பெருந்திரளாய்ப் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. ஐவண்ணக்கிளி ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தது. பள்ளி வளாகத்தில், நரிக்குட்டித் தொடங்கி அனைத்துக் குட்டிகளுக்கும் காக்கை அண்ணன்கள் வடைகள் கொடுத்து வரவேற்றன. புறா தங்கைகள் குட்டிகளைச் சுவைநீர் தொட்டிகளுக்கு அழைத்துச் சென்றன மரங்கொத்தி, மணி அடித்ததும் விலங்குக் குட்டிகள் வா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கத்திற்குள் நுழைந்தன.
கோழிகளும் சேவல்களும் படம் வரைவதற்குத் தேவையான கான்களையும் கருவிகளையும் ஓவியப் போட்டி குட்டிகளுக்குக் கொடுத்தன. வான்கோழி, அறிமுகவுரை வழங்கி ஓவியப் போட்டியைத் தொடங்கி வைத்தது. போட்டியைத் திட்டமிட்டு உத்திக் கொண்டிருந்த பறவை இனங்கள் உலங்கூர்தி (ஹெலிகாப்டர்) போன்று விலங்குகளுக்குச் சற்று மேலாக வட்டமடித்துக் கொண்டே பார்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தன.
நேரம் நெருங்கியது. எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. அவரவர் பெயரும் எண்ணும் ஒழுங்காக எழுதப்பட்டிருக்கின்றனவா என்று பார்த்துக் கொண்டனர். ஒவ்வொருவரும் வந்து தங்களது ஓவியங்களை வான்கோழியிடம் ஒப்படைத்து விட்டுப் பள்ளி வளாகத்தில் அவரவர் வரைந்த பெருமைக்குரிய படங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு மகிழ்ந்தனர்.
மதிப்பெண் வழங்கப்பட்ட எல்லா ஓவியத் தாள்களும் உரிய இடத்தில் தொங்க விடப்பட்டன. விலங்குகளும் பறவைகளும் பார்த்து மகிழ்ந்தன. அருவி, உயர்ந்த பனைமரம், ஆழிப் பேரலைக்கு முன்பு ஒரு குழந்தையின் புன்சிரிப்பு, தூக்கணாங் குருவிக்கூடு, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய். கொரோனா தீநுண்மி நோயாளிக்கு முன் ஒரு மருத்துவர், கதிர் பாத்திரத்தோடு ஓர் அருள்பணியாளர், கங்காருவின் வயிற்றில் ஒரு குட்டி, வானவில் முதலானவை போன்ற பல வகையான புதுமையான ஒவியங்கள் தொங்க விடப்பட்டிருந்தன.
இவற்றோடு பன்றிக்குட்டி வரைந்த ஒரு படம் உயர் மதிப்பெண்ணோடு முதலிடம் பெற்றிருந்தது. எல்லாருடைய கண்களும் அவ்வோவியத்தில் பதிந்திருந்தது. ஓர் அம்பு தைக்கப்பட்ட யானை ஒன்று ஊக்கத்தோடு நேர்கொண்ட பார்வை கொண்டு போர்க்களத்தில் முன்னேறுவது போன்ற தோற்றம் கொண்ட படம். பன்றிக்குட்டிக்குப் பாராட்டு மழை பொழியப்பட்டது.
நரி உள்ளிட்ட ஓரிரு விலங்குகள் மனநிறைவு இல்லாதிருந்தன. தங்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை என்ற ஏக்கம், ஏமாற்றம். பன்றிக் குட்டியின் மீது பொறாமை, சீற்றம்.
இருப்பினும், "நடுவர்கள் தீர்ப்பு இறுதியானது; எவரும் ஊக்கம் தளர்ந்து விட வேண்டாம்; கொரோனா தீநுண்மியின் விளைவான தோற்று நோயிலிருந்து மீண்டு, ஊக்கத்தோடு வாழ்க்கையை உலக மக்களும் நாமும் தொடர்கிறோம். கடவுளுக்கு நன்றி! எனவே, பரிசு பெற்றவர்களுக்குப் பாராட்டுகள் தெரிவிப்போம்; பரிசு பெறுவதற்கான வாய்ப்பு இழந்தவர்கள் எதை இழந்தாலும் 'ஊக்கமது கைவிடேல் என்பதை மனத்தில் கொள்வோம்' என்று மயில் சொன்னதும் எல்லாரும் முதிர்ச்சி பெற்று அமைதியாயினர்.
அப்பொழுது அங்கே ஒரு பொருளுந்து (லாரி) வந்து நின்றது. கொரோனா தடுப்புப் பணிக்காகச் சென்றுவந்த யானை, நாய், குதிரை, குரங்கு, காக்கைகள் எல்லாம் வந்து இறங்கின. எல்லாரும் பாதுகாப்பாகத் திரும்பி வந்ததைக் குறித்தும், மக்களுக்கு அவர்கள் செய்த தன்னலமற்ற தியாகச் செயலைப் பாராட்டியும் நூலாடைகள் போர்த்தப்பட்டன.
சென்று வந்த மருத்துவரான யானை பேசத் தொடங்கியது. 'அன்பிற்கினியவர்களே, இந்த கொரோனா தீநுண்மியினால் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் சிதைந்து விட்டன. தாங்கள் வைத்திருந்த அணு ஆயுதங்களால், பணத்தினால். அதிகாரத்தினால் பயன் என்ன? போன்ற வினாக்கள் எழுப்பப்பட்டன. புதிய தலைமுறையினர் மனமாற்றம் நிறைந்த சூழலுக்கு வந்துள்ளனர்' என்று சொல்லி முடித்தது.
செவிலியர் குதிரை, "இந்தக் காலகட்டத்தில் இயற்கையும், மாந்தரைத் தவிர மற்ற உயிரினங்களும் மகிழ்ச்சியாக இருந்திருக்கின்றனர்" என்று உரைத்தது.
காவலர் நாய்: 'அதனால், மாதம் ஒரு நாள் உலகமெங்கிலும் ஊரடங்கு; வாரம் ஒரு நாள் அந்தந்த நாடு தீர்மானிக்கும் நாளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது".
உதவியாளர் குரங்கு: "அலைப்பேசிப் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்குக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது".
துப்புரவுப் பணியாளர் காக்கை! "ஞெகிழிப் (பாலித்தீன்) பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மிதி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படும்; பொறுப்பாளர்கள் சிறையில் அடைக்கப்படுவர்."
ஒவ்வொருவரும் உரையாற்றி முடிக்கையில் சூழ்ந்து நின்ற பறவையினங்களும் விலங்கினங்களும் கை தட்டின.
ஆட்டுக் குட்டியைத் தேடி வந்த ஆடு ஆர்ப்பரிப்போடு சொன்னது. "நண்பர்களே, இன்னொரு செய்தி தெரியுமா? வருகிற தமிழ்ப் புத்தாண்டிலிருந்து (தை) ஆடு, மாடு, பன்றி, கோழி உள்ளிட்ட உயிரினங்களை இறைச்சிக்காக மாந்தர் கொல்லக்கூடாது என்ற சட்டம் நடைமுறையாகிறதாம்," அங்கிருந்த உயிரினங்கள் ஊதல் (விசில்) அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மயில், ஒலிவாங்கியில் உரைத்தது, 'அனைவருக்கும் நன்றி. இப்பொழுது நடந்து முடிந்த ஓவியப் போட்டிக்கான பரிசினை வழங்க மருத்துவர் யானையார் அவர்களையும் பரிசு பெற பன்றிக் குட்டியையும் மேடைக்கு அழைக்கிறோம்' என்றது.
அந்த ஓவியத்தில் யானை இருப்பதைப் பார்த்த யானை பன்றிக் குட்டியிடம், "பன்றித் தம்பி இந்தப் படம் வரைய வேண்டும் என்று உங்களுக்கு எவ்வாறு தூண்டுதல் கிடைத்தது?'
"எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் பள்ளிக்கூடம். தமிழாசிரியர் மாணவர்களுக்கு ஒரு நாள் இந்தக் குறள் பாடம் நடத்தினார். அப்பொழுதிலிருந்தே அந்தக் காட்சி உள் மனத்தில் பதிந்திருந்தது. போர்க் களத்தில் யானையின் உடல் அம்புகளால் தைக்கப்பட்டிருந்தாலும் மண்ணுரிமை வெல்ல ஊக்கத்தோடு துணிந்து முன்னேறிச் செல்லும். அந்த ஊக்கம் தளராமைதான் மிகப்பெரிய பெருமை என்று எண்ணினேன். அதையே வரைந்தேன். இன்று உங்கள் கையாலேயே பரிசும் பெறுகிறேன். நன்றி ஐயா." என்று உணர்ச்சி பொங்க கருத்தைச் சொன்னது பன்றிக்குட்டி.
மகிழ்ச்சி பொங்க அனைவரும் புன்னகை பூத்தனர். அனைவருக்கும் கருப்புக்கட்டி குளம்பி (காபி) வழங்கப்பட்டது.