முகம் மலர முத்துச் சிரிப்பு | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil
எந்த ஒரு உயிரினத்திற்கும் கொடுக்கப்படாத, மனிதனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட அழகான பரிசு சிரிப்பு. சிரித்த முகத்தை நிச்சயம் யாருக்கும் பிடிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் சிரிக்கத் தெரியாதவர்களாய் இருப்பார்கள் என்பது உண்மை. நம் வாழ்க்கைக்கு தேவையான சிரிப்பு என்ற மருந்தை நாள்தோறும் நமதாக்கிக் கொண்டால் வாழ்க்கையில் வேறு எந்த மருந்தும் நமக்கு தேவையிருக்காது. நாம் உற்சாகத்தோடும், புத்துணர்வோடும் இருக்க வேண்டுமென்றால் சிரிப்பை நமது அணிகலனாக்குவோம். நாம் அணியும் மற்ற அணிகலன்களைவிட மேலான, சிறந்த, அனைவருக்கும் பிடித்தமான அணிகலன் சிரிப்பு ஒன்றே. சிரிப்பு என்ற அணிகலன் நம்மை அலங்காரம் செய்யும்போது உண்மையான பிரகாசம் நம்மில் ஒளிரும்.
நமது முக சுருக்கத்திற்கும், இறுக்கத்திற்கும், வருத்தத்திற்கும் காரணம் நம்மை விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கும் நோய் அல்ல, மாறாக நமது சிரிக்காத முகமே என்பதை எப்போது உணரப்போகிறோம்? வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்ற பழமொழிக்கேற்ப வாய்விட்டுச் சிரித்து நோய்களை விரட்டுவோம். வாய்விட்டு சிரிக்கும் தருணம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது அடக்கமான சிரிப்பையும் நமதாக்குவோம். நமது இன்னல்களுக்கு மத்தியிலும் இன்முகத்தோடு சிரிக்க பழகுவோம். இன்னலிலும் சிரிக்க தெரிந்துவிட்டால் பகைவனையும், பகைமையையும் வென்றுவிடலாம். சிரிப்பு நம்மை மட்டும் அல்ல நம்மைச்சுற்றியுள்ள சமூகத்தையும் அழகாக்கும். அழகு என்பது நமது முகத்தில் அல்ல சிரிப்பில் என்பதை உணர்ந்து கொண்டு அழகான முத்துச்சிரிப்பை நமதாக்குவோம். அதுவே நமது சொத்தாக மாறட்டும்.