திருவிவிலியத்தை மையமாகக் கொண்ட மேய்ப்புப்பணி: 18 பேருக்குப் பயிற்சி அளித்த இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை | Veritas Tamil

திருவிவிலியத்தை மையமாகக் கொண்ட மேய்ப்புப்பணியில் குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் என 18 பேருக்குப் பயிற்சி அளித்த இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI), பங்குத்தள வாழ்வு, குடும்ப உருவாக்கம் மற்றும் நற்செய்தி அறிவிப்பில் திருவிவிலியத்தை மையமாகக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது என்று Catholic Connect ஊடகம் அக்டோபர் 22ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் கோவா மாநிலம் பெனாலிமில் உள்ள சாந்தி சதன் மையத்தில், அக்டோபர் 16 முதல் 21ஆம் தேதி வரை, “திருவிவிலிய மேய்ப்புப்பணிக்கான திறன்கள்” என்ற தலைப்பில் ஐந்து நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் திருவிவிலிய ஆணையம் ஏற்பாடு செய்த இப்பயிற்சியில், ஒன்பது குருக்கள் மற்றும் துறவியர், ஒன்பது பொதுநிலையினர் என மொத்தம் 18 பேர் பங்கேற்றனர்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் திருவிவிலிய ஆணையத்தின் செயலரும், இப்பயிற்சியின் இயக்குநருமான அருள்பணி பேட்ரிக் மத்தியாஸ், சாந்தி சதன் மையத்தின் நிர்வாகி அருள்பணி டொமிங் கோன்சால்வேஸ் அவர்களுடன் இணைந்து இப்பயிற்சியை வடிவமைத்தார்.

“இறைவார்த்தையின் மையத்துவம்” என்ற தலைப்பிலான தொடக்க அமர்வில் உரையாற்றிய அருள்பணி பேட்ரிக், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் Dei Verbum என்ற இறைவெளிப்பாடு குறித்த கொள்கை விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, திருஅவையின் வாழ்விலும் அதன் பணியிலும் திருவிவிலியம் மைய இடம் பெற வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் Verbum Domini மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Evangelii Gaudium ஆகிய திருத்தூது ஊக்கவுரைகளையும் பங்கேற்பாளர்கள் கற்றறிந்தனர். திருவிவிலியப் பயிற்சி எவ்வாறு நற்செய்தி அறிவிப்பையும் மேய்ப்புப்பணியையும் வழிநடத்துகிறது என்பதையும் அவர்கள் சிந்தித்தனர்.

இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளுதல், அறிவித்தல், விளக்குதல், கற்பித்தல் மற்றும் தங்கள் சமூகங்களில் அதற்குச் சாட்சியாக வாழ்தல் ஆகியவற்றுக்குத் தேவையான திறன்களை வளர்ப்பது இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது. திருவிவிலியத்திற்கும் இறையியலுக்கும் இடையிலான தொடர்பு, திருவழிபாடு, குடும்ப வாழ்வு, இளையோர் பணி, மறைக்கல்வி மற்றும் Lectio Divina எனப்படும் இறைவார்த்தையை இறைவேண்டலுடன் வாசிக்கும் முறை ஆகியவை குறித்தும் அமர்வுகள் இடம்பெற்றன.

Lectio Divina முறையின் ஆறு நிலைகளை விளக்கிய அருள்பணி பேட்ரிக், திருவிவிலியத்தை வெறுமனே கல்விசார் நோக்கில் படிப்பதைக் கடந்து, இறைவார்த்தையை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“திருவிவிலியத்தை வெறுமனே படிப்பதோடு நின்றுவிடாமல், அதன் போதனைகளை வாழ்வாக்குங்கள்” என்பதே இப்பயிற்சியின் மையச் செய்தியாக அமைந்தது.

கோவாவில் உள்ள புனித யோசேப்பு வாஸ் ஆன்மிக மையத்தின் துணை இயக்குநர் அருள்பணி மரியானோ டி’கோஸ்டா, திருவிவிலியத்தின் வரலாற்று வளர்ச்சி, இன்றைய சூழலில் விவிலிய மேய்ப்புப்பணி மற்றும் திருவிவிலியத்தை வாசித்தல், விளக்குதல், கற்பித்தல், இறைவேண்டல் செய்தல், அன்றாட வாழ்வில் அதன் போதனைகளை இணைத்தல் போன்ற நடைமுறை அணுகுமுறைகள் குறித்து அமர்வுகளை நடத்தினார்.

திருஅவையின் அனைத்துப் பணிகளையும் இறைவார்த்தையில் வேரூன்றச் செய்வதை நோக்கமாகக் கொண்ட மேய்ப்புப்பணியின் விவிலிய உயிரூட்டல் (Biblical Animation of Pastoral Life) குறித்தும் அவர் விளக்கினார். மறைக்கல்வி, திருவழிபாடு, குடும்பம் மற்றும் இளையோர் பணி, சமூகப் பணி, துறவற உருவாக்கம், குருத்துவப் பணி ஆகியவற்றில் இத்தகைய அணுகுமுறையின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.

திருவிவிலியத்திலிருந்து விலகிச் செயல்படும் மேய்ப்புப்பணிகள் வெறும் செயல்பாடுகளாக மட்டுமே மாறிவிடும் ஆபத்து இருப்பதையும் இப்பயிற்சி சுட்டிக்காட்டியது.

குடும்ப வாழ்வுக்கும் சிறப்புக் கவனம் அளிக்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Amoris Laetitia என்ற திருத்தூது ஊக்கவுரையை அடிப்படையாகக் கொண்டு, அன்பு, வளர்ச்சி, இரக்கம் மற்றும் கிறிஸ்தவ உருவாக்கம் ஆகியவற்றின் தளமாகக் குடும்பம் விளங்குவது குறித்து பங்கேற்பாளர்கள் சிந்தித்தனர்.

அக்டோபர் 19ஆம் தேதி, பங்கேற்பாளர்கள் கோவாவில் அமைந்துள்ள குழந்தை இயேசுவின் திருப்பண்டம் வைக்கப்பட்டுள்ள பாம் ஜீசஸ் பெருங்கோவில், சே பேராலயம், புனித ஆக்னெலின் கல்லறை மற்றும் சான்கோலேயில் உள்ள புனித யோசேப்பு வாஸ் ஆலயம் ஆகிய இடங்களுக்கு திருப்பயணம் மேற்கொண்டனர்.

அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற நிறைவு நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு, கோவா மற்றும் டாமன் மறைமாவட்ட ஆயர் சிமியாவோ புரிஃபிகாசாவ் பெர்னாண்டஸ் அவர்கள் தலைமை தாங்கினார். திருவிவிலியத்தின் செய்தியைச் செயல்பாடுகளாக மாற்றி வாழ்வதன் முக்கியத்துவம் குறித்து அவர் மறையுரை வழங்கினார்.

மேலும், பங்கேற்பாளர்கள் தங்களது மறைமாவட்டங்கள் மற்றும் பங்குத்தளங்களில் நடைமுறைப்படுத்தப்படும் மேய்ப்புப்பணி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். பங்குத்தளங்களில் திருவிவிலியக் குழுக்களை உருவாக்குதல், அவற்றை ஊக்குவித்தல் உள்ளிட்ட இறைவார்த்தையை மையமாகக் கொண்ட செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தனர்.

Tamil Survey Popup Image