உயிரைப் போற்றும் இளையோர்! | Veritas tamil

இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பரேலி மறைமாவட்டத்தில், மனித மாண்பு மற்றும் உயிரின் புனிதத்துவம் குறித்த மூன்று நாள் இளையோர் மாநாட்டில் 400-க்கும் மேற்பட்ட இளம் கத்தோலிக்கர்கள் பங்கேற்றனர். இந்திய கத்தோலிக்க இளையோர் இயக்கம் (ICYM) ஏற்பாடு செய்த இம்மாநாடு, சமகாலத்தில் எழுந்துள்ள தார்மீக மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து இளையோருக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் உள்ள பிஷப் கான்ராட் பள்ளி வளாகத்தில், அக்டோபர் 17 முதல் 19 வரை நடைபெற்ற அனுபவ் இளையோர் மாநாடு 2026, கற்பொழுக்கம், மனிதப் பாலியல் மற்றும் மனித உயிரைப் பாதுகாப்பது குறித்த கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

கருக்கலைப்பு, ஆபாசப் படங்கள், செயற்கைக் கருத்தரிப்பு (IVF), பாலினக் கருத்தியல் மற்றும் LGBTQ+ தொடர்பான விவகாரங்கள் குறித்து அமர்வுகளில் எடுத்துரைக்கப்பட்டது. இத்தகைய சமகாலப் பிரச்சினைகளை விவிலியத்தின் அடிப்படையிலும், கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகளின் அடிப்படையிலும் ஆராய்ந்து புரிந்துகொள்ள இளையோர் ஊக்குவிக்கப்பட்டனர்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) குடும்ப ஆணையத்தின் இணைச் செயலரும், உயிரைப் பாதுகாக்கும் பணிக்கான சிறப்புப் பொறுப்பாளருமான அஜின் ஜோசப் மற்றும் MSMI துறவற சபையைச் சேர்ந்த அருள்சகோதரி பவுலினா மெலைட் ஆகியோர் பயிற்சி அமர்வுகளை வழிநடத்தினர். நம்பிக்கையின் அடிப்படையில் தெளிவான முடிவுகளை எடுப்பது, மனித உயிரைப் போற்றும் அணுகுமுறையை வளர்த்துக்கொள்வது மற்றும் இன்றைய சவால்களை உறுதியான விசுவாசத்துடன் எதிர்கொள்வது குறித்து அவர்கள் வழிகாட்டினர்.

அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற்ற திருப்பலியைப் பரேலி மறைமாவட்ட ஆயரும், CCBI இளையோர் ஆணையத்தின் தலைவருமான ஆயர் இஞ்ஞாசியஸ் டி’சூசா அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றினார். அப்போது, இளையோர் தங்களது விசுவாசத்தில் ஆழமடைந்து, கிறிஸ்தவ அழைப்பிற்கு ஏற்ப வாழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.மேலும், அஜின் ஜோசப் தலைமையில் நடைபெற்ற தனி அமர்வில், அக மற்றும் உடல் சார்ந்த குணமடைதல், ஆன்மிக விடுதலை மற்றும் கற்பொழுக்கம் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இறைவனுடனான உறவை வலுப்படுத்தி, ஆன்மிகப் புதுப்பித்தலை நோக்கிப் பயணிக்க இளையோர் ஊக்குவிக்கப்பட்டனர்.

அக்டோபர் 19ஆம் தேதி, அருள்சகோதரி பவுலினா அவர்கள் தூய ஆவியில் திருமுழுக்கு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட செப அமர்வை வழிநடத்தினார். டெல்லியைச் சேர்ந்த YU4C அமைப்பின் டேவிட்ஸ் ஹார்ப் நற்செய்தி இசைக்குழுவினர் மாநாட்டின் புகழ்ச்சிப் பாடல் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு இசையமைத்து உதவினர்.பரேலி மறைமாவட்ட இளையோர் இயக்குநர் அருள்பணி விஜய் டெல்லிஸ் அவர்களின் தலைமையில், மறைமாவட்ட அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் இந்திய கத்தோலிக்க இளையோர் இயக்கத்தின் மறைமாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்தனர்.

மனித மாண்பைப் போற்றுதல், உயிரைப் பாதுகாத்தல் மற்றும் நற்செய்தியின் விழுமியங்களை வாழ்வில் கடைப்பிடித்தல் ஆகியவற்றில் இளையோர் கொண்டுள்ள பொறுப்பை இம்மாநாடு வலியுறுத்தியது. மாநாட்டில் கற்றுக்கொண்டவற்றைத் தங்களது குடும்பங்கள், பங்குச் சமூகங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்குக் கொண்டு சென்று, மனித உயிரின் மதிப்பையும் மாண்பையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுமாறு பங்கேற்பாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

Tamil Survey Popup Image