துயரில் யார் துணை? | Pope Leo XIV | Veritas Tamil

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Amoris laetitia திருத்தூது ஊக்கவுரையின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்களைத் தங்கள் உள்ளூர் திருஅவைகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கேட்டுக்கொண்டார்.

அக்டோபர் 07, புதனன்று, வத்திக்கானில் தொடங்கிய “Amoris laetitia வெளியிடப்பட்டு பத்து ஆண்டுகள்: இன்றைய குடும்பங்களுடன் நற்செய்தியை அறிவித்தல்” என்ற கூட்டத்தின் தொடக்க உரையில் பேசியபோது  இவ்வாறு கூறிய திருத்தந்தை, பல்வேறு கலாச்சாரச் சூழல்களில் உள்ளூர் திருஅவைகள் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு பங்கேற்பாளர்களை வலியுறுத்தினார்.

இன்றைய குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பலவீனங்களுக்கு நடுவில், அவர்களுடன் உடனிருந்து பயணிக்கும் தமது அர்ப்பணிப்பைப் புதுப்பிக்குமாறும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

அன்பு, உண்மைத்தன்மை, மன்னிப்பு, குழந்தைகளை வளர்த்தல், நம்பிக்கையைப் பரிமாறுதல், முதியோர் மற்றும் நலிவுற்றோரைக் கவனித்தல் போன்றவற்றின் வழியாக குடும்பங்கள் நற்செய்திக்குச் சான்று பகர்கின்றன என்றும், திருஅவையின் பணியில் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

பாலியல் மற்றும் நெருக்கம் குறித்த மாறிவரும் பார்வைகள், பொருளாதார நெருக்கடி, குடிபெயர்வு, வன்முறை, தனிமை, உணர்வுசார் பாதிப்புகள் உள்ளிட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டுமெனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக “பலவீனம்” குறித்து கவனம் செலுத்திய திருத்தந்தை, வாழ்க்கை தங்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமையாதபோது, மக்கள் எத்தகைய திருஅவையைச் எதிர்கொள்கின்றனர் என்று கேள்வி எழுப்பியதுடன் ஒவ்வொருவருக்கும் திருஅவையில் இன்னும் ஓர் இடமும், பொறுப்பும், வழங்குவதற்கான கொடைகளும் உள்ளன என்பதை உணரச் செய்யும் வகையில், திருஅவைச் சமூகங்கள் அவர்களுக்கு துணைநிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tamil Survey Popup Image