புதிய பேராயராக கர்தினால் மௌரோ நியமனம்! | Veritas Tamil
77 வயதை எட்டிய பேராயர் புருனோ ஃபோர்ட்டே அவர்கள் பணிநிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அப்ரூஸோ மண்டலத்தில் அமைந்துள்ள சியேட்டி-வாஸ்டோ உயர்மறை மாவட்டத்தின் புதிய பேராயராக 60 வயதான கர்தினால் மௌரோ கம்பெட்டி அவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நியமித்துள்ளார்.
பிரான்சிஸ்கன் துறவற சபையைச் சேர்ந்த கர்தினால் மௌரோ கம்பெட்டி, வத்திக்கானில் தற்போது வகித்து வரும் முக்கியப் பொறுப்புகளில் இருந்து விலக உள்ளார். திருத்தந்தையின் பொது பதில் குரு, புனித பேதுரு பாப்பிறை பெருங்கோவிலின் முதன்மை அருள்பணியாளர் மற்றும் புனித பேதுருவின் பராமரிப்பு வாரியத் தலைவர் ஆகிய பொறுப்புகளை அவர் நிறைவுசெய்து, சியேட்டி-வாஸ்டோ பேராயராக தனது புதிய பணியை ஏற்கவுள்ளார். அவர் கடந்த பிப்ரவரி 2021 முதல் இந்தப் பதவிகளில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1965ஆம் ஆண்டு போலோக்னா அருகிலுள்ள காஸ்டல் சான் பியெத்ரோ டெர்மேவில் பிறந்த கர்தினால் மௌரோ கம்பெட்டி, தனது உயர்கல்வியை போலோக்னா பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் பொறியியல் படிப்புடன் தொடங்கினார். பின்னர் 1992ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவற சபையில் இணைந்த அவர், இறையியல் மற்றும் மானுடவியல் பயின்று, 2000ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து இளைஞர் மேய்ப்புப் பணி மற்றும் துறவற சபையின் தலைமைப் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சேவையாற்றினார்.
2013 முதல் 2020ஆம் ஆண்டு வரை, அசிசியில் அமைந்துள்ள புனித பிரான்சிஸின் துறவற இல்லத்தின் பொறுப்பாளராக கர்தினால் மௌரோ அவர்கள் பணியாற்றினார். அக்காலகட்டத்தில், பிரான்சிஸ்கன் துறவற சபையின் பணிகளையும் புனித பிரான்சிஸ் பெருங்கோவிலின் பராமரிப்புப் பொறுப்புகளையும் அவர் கவனித்து வந்தார்.
2020 ஆம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவரை பேராயராக நியமித்தார், மேலும் அதே ஆண்டின் பிற்பகுதியில் அவரை கர்தினாலாக உயர்த்தினார். 2021 ஆம் ஆண்டில், அவர் வத்திக்கான் நகரில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டார். 2023 இல் வத்திக்கான் நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
