நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மார் மக்களுக்கான திருத்தந்தையின் செபம் ஒரு ஆறுதலின் தைலம் - கர்தினால் சார்ல்ஸ் முவாங் போ

மியான்மாரில் ஏற்பட்ட நிலஅதிர்ச்சியானது மக்களின் கண்ணீரையும் காயங்களையும் அதிகப்படுத்தியுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, குடியிருக்க வீடின்றி வாழ்கின்றனர் என்று கர்தினால் சார்ல்ஸ் போ தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மார் மக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபத்தையும் ஆன்மிக உடனிருப்பையும் தொடர்ந்து வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல், ஆறுதலின் நறுமணத் தைலம் போல இருக்கின்றது என்றும், மியான்மாரில் அமைதி நிலவவும், நாட்டில் நிலவும் போர்ச்சூழல் நீங்கி நாட்டு மக்கள் நலமுடன் வாழவும், தொடர்ந்து செபிப்பவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்று கர்தினால் சார்ல்ஸ் முவாங் போ கூறியுள்ளார்.

ஏப்ரல் 4 வெள்ளிக்கிழமை பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், மியான்மாரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை பற்றி இவ்வாறு தெரிவித்துள்ளார் மியான்மார் ஆயர்பேரவைத் தலைவர் கர்தினால் முவாங் போ.2017 -ஆம் ஆண்டு மியான்மார் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாட்டில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி அடிக்கடி தனது செப விண்ணப்பங்களிலும் சிறப்பு செபங்களிலும் நினைவுகூர்ந்து செபிப்பவர் என்றும், போர்ச்சூழல் மட்டுமன்றி இயற்கைப் பேரழிவுகளின் காலத்திலும், மக்களுக்கு ஆன்மிக உடனிருப்பை அளித்து, அனைத்து மக்களும் செபிக்க ஆதரவு அளித்து வருபவர் என்றும் கூறியுள்ளார் கர்தினால் போ.

மார்ச் 28, அன்று மியான்மாரில் ஏற்பட்ட நிலஅதிர்ச்சியானது, மக்களின் கண்ணீரையும் காயங்களையும் அதிகப்படுத்தியுள்ளது என்றும், ஆயிரக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, குடியிருக்க வீடின்றி வாழ்கின்றனர் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார் கர்தினால் போ.ஏராளமான பொருள்சேதங்களையும் உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்திய நிலஅதிர்ச்சியினால் மக்கள் வீடின்றி குளிரிலும் வெயிலிலும் தெருக்களில் தங்கி வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள்,  மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

காயமடைந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, நீர், தங்குமிடம் மற்றும் மருந்துக்களுக்கான அவசரத் தேவை உள்ளது என்று வலியுறுத்தியுள்ள கர்தினால் போ அவர்கள், மக்களுக்கு அடிப்படையான மற்றும் ஆன்மிகத் தேவைகளும் உள்ளன என்றும், துன்பப்படுபவர்களையும், அவர்களின் வலியையும், அழுகையையும் பகிர்ந்து கொள்ளும் மற்ற மனிதர்களின் அரவணைப்பையும் நாம் உணர வேண்டும், அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் கர்தினால் முவாங் போ.