ஆளுவதற்கு மட்டுமல்ல, கேட்பதற்கும், ஒத்துழைப்பதற்கும், சேவை செய்வதற்கும் | Veritas Tamil


மக்களோடு சேர்ந்து பயணிக்க அவர்களின்  உணர்வுகளைப் புரிந்துகொள்ள...

பிலிப்பைன்ஸில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயர் கபுகாவோவின் (synodal) சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான திருஅவையின் விருப்பத்திற்கு இணங்க, தன்னிடம்  ஒப்படைக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து நடக்கவும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் நினைவுறுத்தப்பட்டார்.

குவெசோன் மாகாணத்தின் இன்ஃபன்டா ஆயர் பீடத்தின் ஐந்தாவது ஆயரான மேதகு  டேவ் டீன் கபுகாவோ, தனது பொறுப்பில் உள்ள மக்களுக்கு ஒரு சர்வாதிகாரியைப் போல செயல்படாமல், அவர்களின் பயணத்தில் துணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டார்.

செப்டம்பர் 5 அன்று நடந்த ஆயர் கபுகாவோவின் ஆயர் அருட்பொழிவு மற்றும் பதவியேற்பு விழாவில், தனது மறையுரையில் கலோக்கன் ஆயரான கார்டினல் பாப்லோ விர்க்கிலியோ டேவிட் பேசும்போது, “நாம் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சிகளையும், துக்கங்களையும், குறிப்பாக ஏழைகளின் அழுகுரல்களையும் உணர்வதை நிறுத்திவிட்டால், நாம் கிறிஸ்துவின் உயிருள்ள உடலாக  இருப்பதை நிறுத்திவிடுகிறோம்,” என்று கூறினார்.

புதிய ஆயர் தேர்ந்தெடுக்கப்பட்டதன்  குறிக்கோளான(“to think with the Church”), திருச்சபையுடன் சேர்ந்து சிந்தித்தல் என்பதைப் பற்றி எடுத்துரைத்த கார்டினல், ஒவ்வொரு ஆயரும் கிறிஸ்து எப்படி சிந்திக்கிறார், உணர்கிறார் மற்றும் அன்பு செலுத்துகிறார் என்பதை ஏன் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

“அது சாத்தியமா? ஆம், நாம் எப்போது  தாழ்மையைக் கற்றுக்கொள்கிறோமோ அப்போதுதான்,” என்று அவர் கூறினார். “நாம் மற்றவர்களை நம்மைவிட முக்கியமானவர்களாகக் கருதினால், நமது நலன்களில் மட்டும் அக்கறை காட்டாமல், மற்றவர்களின் நலன்களிலும் அக்கறை காட்டினால் இது சாத்தியமாகும்.”

பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகவும் உள்ள கர்தினால் டேவிட்இ ஆயர் கபுகாவோவிடம்இ ஒரு உண்மையான ஆயர் என்பவர் “மேலிருந்து கட்டளையிடும் ஆட்சியாளராக” இருக்கக்கூடாது என்று கூறினார்.

“ஒரு ஆயர்… தனது மந்தையின் வாழ்க்கையில் பங்கெடுக்கிறார்” என்று அவர் கூறினார். “இயேசுவைப் பொறுத்தவரை, உண்மையான மேல்நோக்கிய பாதை என்பது கீழ்நோக்கியது; தாழ்மை, சேவை மற்றும் தன்னை வெறுமையாக்குவதன் மூலம் அது சாத்தியமாகும்.”

இன்ஃபன்டாவில் உள்ள குழந்தை  இயேசு மற்றும் புனித மாற்கு நற்செய்தியாளர் பேராலயத்தில் நடைபெற்ற இந்த அருட்பொழிவு மற்றும் பதவியேற்பு விழாவில், பிலிப்பைன்ஸ் முழுவதிலும் இருந்து பல ஆயர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு, இன்ஃபன்டா ஆயர் பீடத்தின் திருஅவை சட்டப்படி நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவுடனும் ஒத்துப்போனது.

பிலிப்பைன்ஸிற்கான அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் சார்லஸ் ஜான் பிரவுன் முதன்மை அருட்பொழிவு அளிப்பவராகவும், இன்ஃபன்டாவின் முன்னாள் ஆயர்களான பெர்னார்டினோ கோர்டெஸ் மற்றும் ரோலண்டோ ட்ரியா டிரோனா ஆகியோர் இணை அருட்பொழிவு அளிப்பவர்களாகவும் இருந்தனர்.

தனது செய்தியில், பேராயர் பிரவுன் விசுவாசிகள் தங்கள் புதிய ஆயருக்கு ஆதரவளிக்க ஊக்குவித்தார். “கடவுளின் குடும்பம் அன்பில் ஒன்றுபடும்போது, நாம் கடவுளின் அரசாட்சியை  நோக்கி ஒரு பயணமாக ஒன்றாக நடக்கிறோம். அதுதான் synodal என்பதன் அடிப்படை உருவம்… நாம் அனைவரும் வெவ்வேறு விதமானவர்கள், ஆனால் அனைவரும் புனித வாழ்வுக்கு  அழைக்கப்பட்டவர்கள்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தனது நன்றிச் செய்தியில், ஆயர் கபுகாவோ விசுவாசிகளுடன் “ஒரு சகப் பயணியாக” இருக்க உறுதியளித்தார். “இதுவே எனது விருப்பம்: ஆளுவதற்கு மட்டுமல்ல, கேட்பதற்கும், ஒத்துழைப்பதற்கும், சேவை செய்வதற்கும் உங்கள் ஆயராக இருப்பது,” என்று அவர் கூறினார்.

முன்னாள் ஆயர் பெர்னார்டினோ கோர்டெஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மே 16, 2025 அன்று திருத்தந்தை லியோ XIV அவர்களால் ஆயர் கபுகாவோ இன்ஃபன்டாவின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட நேரத்தில், அவர் குவெசோன் நகரில் உள்ள புனித சூசையப்பர் உருவாக்க இல்லத்தின் முதல்வராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.