தொடுதலே புனிதம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

'புனிதம் உறவில் மலர்கின்றது. உறவுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் தொடுதலுக்கு உண்டு... ஓரறிவு முதல் ஆறறிவு மனிதர் வரை நம்மைக் கடந்த சக்தியின் தொடுதலே நம்மை இயக்குகிறது. பூமியைத் தொடுகிற மழைநீர் பசுமையைத் தருகிறது. துளையுண்ட மூங்கில், காற்றின் தொடுதலால் இன்னிசையைத் தருகிறது. இறைவனின் தொடுதலால்தான் மனிதரும் உயர்ந்த படைப்பானார்..
வாழ்க்கையின் ஒவ்வொரு படியும் தொடுதலால்தான் வளர்ச்சியடைகிறது..
எழுத்தாளர் கோர்டன் மெக்டோனால்டு தன் செல்ல மகளுக்கு தினமும் உறங்கச் செல்வதற்குமுன் ஒரு கதை சொல்வது வழக்கம். ஒருமுறை தன் பணியின் காரணமாக, அவர் சில நாள்கள் வெளியூரில் தங்க நேரிட்டது. தான் இல்லாத நாள்களிலும்கூட தான் கதை சொல்வதைத் தன் மகள் கேட்க வேண்டும் என்ற பாச உணர்வோடு, சில கதைகளை ஒலிப்பதிவுக் கருவியில் பதிவுசெய்து, அதைத் தன் மகள் கேட்கவும் ஏற்பாடு செய்தார். பணிகள் முடிந்து வீடு வந்ததும், தன் கதையைக் கேட்ட மகளின் நிலையை அறிய பேரார்வத்துடன், "கதை எவ்வாறு இருந்தது?" என்று கேட்டார். மகள் சற்றும் தாமதமின்றி, "அப்பா! கதை ரொம்ப நன்றாக இருந்தது. ஆனால், எப்போதும் போல என்னால் கேட்க முடியவில்லை".
அப்பா, "ஏன்?" என்று கேட்டார்,
மகளோ, "என்னால் ஒலிப்பதிவுக் கருவியின் மடிமேல் உட்கார முடியவில்லையே” என்றாள் ஏக்கத்துடன்...
தொடுதல் என்பது உயிர்களுக்குச் சொந்தமானது. தொடுதலின் சக்தியானது உடல், உள்ளம், ஆன்மிக மாற்றங்களைத் தர வல்லது. 'தொடுதல்' குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் தருகிறது. பெரியோர்களுக்கு நிறைவையும், வளமையையும் தருகிறது.
சக்தி வாய்ந்த இந்தத் தொடுதல் கலையைக் கற்றுக்கொண்டவர்கள், பிறருடைய இதயத்தை, வாழ்க்கையைத் திறக்கும் மந்திரத் திறவுகோலை கண்டடைந்தவர்கள் ஆவர்.
இறைமகன் இயேசு இப்பூமியைத் தொட்டதால் இப்பூவுலகில் அமைதியும், மகிழ்ச்சியும் துளிர்த்தது. இவ்வாறு உடலிலும், உள்ளத்திலும் இயேசு கிறிஸ்துவால் தொடப்பட்டவர்களே புனிதர்கள்... இயேசுவின் தொடுதலில் சுகம் பெற்று, பலம் பெற்று, மண்ணுலகில் அவர் வழியில் தடம் பதித்தவர்கள் விண்ணுலகில் அவரிடத்தில் பெயர் பதித்தவர்கள்.
இன்றும் தங்கள் வாழ்க்கையால் நம்மைத் தொடுகிறவர்கள். புனித உறவுக்கு நம்மை அழைத்துச் செல்பவர்கள். இந்தத் தொடுதலின் ஸ்பரிசத்தை உணர்ந்து நம் வாழ்க்கையால் பிறரைத் தொடும்போது புனித உறவில் இணைகிறோம்.
புனிதர்கள் வழியில் நாமும் தடம் பதிப்போம்.
வார்த்தையால்...
வாழ்க்கையால்...
அறச்செயல்களால்...
அன்புப் பரிமாணங்களால்...
இரக்கத்தால் ...
இதயத்தால்...
உண்மையாய்...
உள்ளத்தால்... பிறரைத் தொடுவோம்
புனிதர்களின் உறவை விசுவசிப்போம்...இதுவே புனிதம்.
Daily Program
