வத்திக்கானில் நடைபெற்ற சுவிஸ் காவலர்கள் விழா!

1527- ஆம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்படபோது, திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்களைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்ட 189 சுவிஸ் வீரர்களில் 147 பேர், மே 6-ஆம் நாள் கொல்லப்பட்டதன் நினைவாக, இறந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், புதிய காவலர்களை பணிக்கு சேர்க்கும் விதமாகவும் சுவிஸ் காவலர்கள் விழாவானது மே 6 அன்று சிறப்பிக்கப்பட்டது.

மே 6, செவ்வாய்க்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 11 மணியளவில், வத்திக்கானின் Caserma della Guardia என்னுமிடத்தில் சுவிஸ் காவலர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தங்களது மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்தி, சுவிஸ் காவலர்கள் தங்களது விழாவினை துவக்கினர். அதன்பின் சுவிஸ் காவலர் தலைவர், கர்னல் Christoph Graf அவர்கள் காவலருக்கு உரையாற்றினார். அதன்பின் சுவிஸ் காவலர்கள் அனைவரும் திருத்தந்தையின் பாதுகாப்பிற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த முன்னாள் காவலர்களின் தியாக வாழ்வை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.  

சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும், திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்கள் அமைப்பானது, 1506 - ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது. 19 முதல் 30 வயதுக்குட்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டு இராணுவப்பயிற்சி பெற்ற அந்நாட்டின் கத்தோலிக்க இளையோர், ஒவ்வோர் ஆண்டும் மே ஆறாம் நாளன்று, இந்த அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

1527-ஆம் ஆண்டில் உரோம் சூறையாடப்படபோது, திருத்தந்தை ஏழாம் கிளமென்ட் அவர்களைப் பாதுகாப்பாக Castel Sant’Angelo என்ற இடத்திற்குக் கொண்டு சேர்த்தனர் சுவிஸ் வீரர்கள். திருத்தந்தையைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்ட 189 சுவிஸ் வீரர்களில் 147 பேர், மே ஆறாம் நாள் கொல்லப்பட்டனர்.

2025-ஆம் ஆண்டு சனவரி 18, சனிக்கிழமை (Guardia Svizzera Pontificia) சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும், வத்திக்கானின் சுவிஸ் மெய்க்காப்பாளர்களின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏறக்குறைய 80 பேரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்துடன் இணைக்கப்பட்ட அவ்வமைப்பின் 25ஆம் ஆண்டிற்கான தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.