சிறையில் உள்ள கத்தோலிக்க அருட்பணியாளருக்காக ஜெபிக்குமாறு ஆயர் வேண்டுகோள் | Veritas Tamil

இந்தியா: சிறையில் உள்ள கத்தோலிக்க அருட்பணியாளருக்காக ஜெபிக்குமாறு ஆயர் வேண்டுகோள்

சம்பல்பூர் மறைமாவட்ட ஆயர் நிரஞ்சன் சுவால்சிங் அவர்கள், கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த ஒரு மறைமாவட்ட அருட்பணியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்காக விசுவாசிகள் அனைவரும் ஒன்றுபட்டு ஜெபிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நவம்பர் 11 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், ஆயர் கூறியதாவது:
“அருட்பணி. பால் அடபூர் அவர்களுக்காக ஜெபிப்போம்; இறைவன் அவருக்கு நம்பிக்கையூட்டும் வலிமையையும், தற்போதைய சோதனைகளில் இருந்து விடுதலையையும் அருள்வாராக,” எனக் கேட்டுக்கொண்டார்.

“மெக்பால் பேராலயத்தின் ஆசிரியாக பணியாற்றும் அருட்பணியாளர் பால் அடபூர் அவர்கள் எதிர்பாராத விதமாக நடந்த  ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துக்கொள்ளும் நோக்குடனும் வேதனையுடனும் இக்கடிதத்தை எழுதுகிறேன்,” என்று ஆயர் குறிப்பிட்டார்.

நவம்பர் 9, 2025 அன்று மதியம் 2 மணியளவில், சம்பல்பூரிலிருந்து மெக்பால் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஹீரோ கிராமத்தருகே விபத்து ஏற்பட்டது. மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அருட்தந்தை பால் ஓட்டிய வாகனத்தை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்துக்குப் பின்னர் அங்குச் சேர்ந்த மக்கள் குழப்பம் ஏற்படுத்தினர். சிலர் அருட்தந்தை பாலை உடல் ரீதியாக தாக்கினர். உடனே காவல் துறையினர் தலையிட்டு அவரை மீட்டு, பாதுகாப்பிற்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் ஜுஜுமுரா போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

பிரிவுகள் BNS 281  மற்றும்  106/1, கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவறாக பிரிவு 105யும் சேர்க்கப்பட்டதால், அருட்தந்தை பால் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனால் அவர் நவம்பர் 10 அன்று சம்பல்பூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

“அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உண்மை மற்றும் நீதி வெற்றி பெறும் எனவும், அருட்தந்தை பால் விரைவில் விடுவிக்கப்படுவார் எனவும் நம்புகிறோம்,” என்று ஆயர் தெரிவித்தார்.

“இந்த கடின நேரத்தில், அருட்தந்தை பால் அடபூர் அவர்களுக்காக உங்களின் ஜெபங்களை வேண்டுகிறேன். இறைவன் அவருக்கு தைரியம், அமைதி மற்றும் நம்பிக்கை அளிப்பாராக. இந்த துயரமான விபத்தில் உயிரிழந்த நபரின் ஆன்மாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கிடைக்க இறைவனை வேண்டுவோம்,” எனவும் அவர் கூறினார்.

“துன்ப காலங்களில் நம் அடைக்கலமும் வலிமையும் ஆன அன்பான இறைவன், அருட்தந்தை பாலை பாதுகாத்து, நீதி நிறைந்த அமைதியான தீர்வை அருள்வாராக,” என்றார்.

ஆயர் சுவால்சிங் அவர்களின் வேண்டுகோள் கிறிஸ்துவ நம்பிக்கையின் மையத்தைக் குறிப்பிடுகிறது:
“துன்ப காலங்களில் நம் அடைக்கலமும் வலிமையும் ஆன அன்பான இறைவன்.” ஒரு அருட்பணியாளர் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் வேதனைக்குரிய சூழலில், மனவருத்தம் மற்றும் இறைவன் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் இடையில் திருஅவை எவ்வாறு நடக்கிறது என்பதை இது பிரதிபலிக்கிறது.

இந்த ஜெப அழைப்பு, திருஅவையின் செயல்பாட்டில் இரண்டாம் நிலை செயல் அல்ல, மாறாக சோதனைகளில் கடவுளின் நீதியையும் கருணையையும் நாடும் மையப்புள்ளியாக இருப்பதாக ஆயர் வலியுறுத்தினார்.