ஆட்டோகார தந்தையும் அன்பான மகனும்... | அருட்சகோதரி பிரைடா SSAM | Veritas Tamil

 ஆட்டோகார தந்தையும் அன்பான மகனும்...


அது ஓர் அழகான குடும்பம். தாய், தந்த, மகள், மகன் என நான்கு பேர்கொண்ட அன்புக்கூடு. தினமும் மாலை நேரம் தாழ்த்தி வரும் தந்தை அன்று நேரத்தோடு வந்து விட்டார். மகனுக்கோ அச்சம் உடலில் அணலாய் வெளிப்பட்டது. அப்பாவை நேருக்கு நேராக பார்க்க கண்கள் மறுத்தது. அப்பாவோ மகனின் செயல்களைப் பார்த்து, ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய். உடம்பு ஏதும் சரியில்லையா என்று கேட்க, அதெல்லாம் ஒன்னு இல்லப்பா. பின்ன ஏன் ஒரு மாதிரி இருக்க? பள்ளிக்கூடத்தில ஏதாவது நடந்துச்சா? இல்லப்பா. தாயைக் கூப்பிட்டு  என்ன பிரச்சன? ஏன் எல்லாம் ஒரு மாதிரி இருக்கிங்க என்று கேட்டார். உடனே மகள் பதில் சொன்னால்.

தம்பி  மாற்கு கம்மியா எடுத்துட்டான்பா. அத உங்க கிட்ட எப்படி சொல்றதுனு தெரியாம அழுதுகிட்டு இருக்கான். அப்பா மகனை அழைத்தார். அருகில் அமரவைத்து தலையை வருடிக் கொடுத்தார். அடுத்தமுறை பார்த்துக்கலாம், கவலைப்படாதே என்று கட்டி அணைத்து முத்தமிட்டார். அன்றிலிருந்து மாறினான். அப்பாவின் அன்புக்காகவும், அவரின் உடல் உழைப்பையும் நினைத்து படிக்க துவங்கினான். இன்று படிப்பிலும் ஒழுக்கத்திலும் முதன்மையான இடத்தில் இருக்கிறான்.  


ஆட்டோகார தந்தைக்கு – கல்வி, பெருமை, மதிப்பெண் என அனைத்தும் முக்கியம் என்று அறிந்திருந்தாளும், மகனின் தவறை கண்டித்து தள்ளிவைக்கவில்லை… கட்டி அணைத்து நம்பிக்கை கொடுத்தார்.   

குடும்பம் என்பது பாசத்துக்கான தளமாக மட்டும் அல்லாமல், பயப்படாமல் உண்மை சொல்லக்கூடிய இடமாகவும் ஆகவேண்டும்.

அன்பும், புரிதலும் இருக்கும் இடத்தில், பயமும் தவறுகளும் அழிய ஆரம்பிக்கின்றன. கோபத்தை அல்லாது பாசத்தைக் கொடுப்பதுதான் ஒரு தந்தையின் உண்மை குணம். நம்முடைய தவறுகளை உணர்ந்தால்தான் மனிதன் உயர்கிறான். 

நமது வாழ்விலும் நாம் செய்யும் தவறுகள் நம்மை உயரச் செய்யும் ஒரு படியாக இருக்கவேண்டும். தவறு செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல மாறாக செய்த தவற்றை மீண்டும் மீண்டும் செய்யாமல் இருப்பதே சிறப்பு. 

உலகில் இரண்டு வகையான மனிதம் உண்டு.
ஒன்று தன் தவற்றிலிருந்து கற்றுக்கொள்பவன்.
மற்றொன்று பிறர் தவற்றிலிருந்து கற்றுக்கொள்பவன்.

இதில் நாம் ஏதாவது ஒன்றை  வாழ்வின் கோட்பாடாக ஏற்று வாழ்ந்தால் ஏற்றம் நமதாகும்.