பொதுவான இல்லத்தைப் பராமரிப்போம் | Veritas Tamil

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ஒப்புதலுடன், உலகளாவிய இறையியல் ஆணையம் (ITC) "நமது பொதுவான இல்லத்தைப் பராமரித்தல் – மூவொரு இறைவனுக்குப் பொறுப்பு மிக்க மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் கூடிய பதில்" என்ற புதிய ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான சிந்தனைகளின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த ஆவணம், தீவிரமடைந்து வரும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக கிறிஸ்தவ விழுமியங்களின் அடிப்படையிலான செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு அழைப்பு விடுக்கிறது.

இந்த ஆவணத்தின் மூலம், "இறைவனின் படைப்பில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன"  என்றும், "பூமியைப் பராமரிப்பது மனிதகுலத்திற்கும் கடவுளுக்கும் இடையிலான உறவைப் பிரதிபலிக்கிறது மற்றும் வடிவமைக்கிறது" என்றும் உலகளாவிய இறையியல் ஆணையம் வலியுறுத்துகிறது.

மேலும் சுற்றுச்சூழல் சீரழிவால் மிகவும் பாதிக்கப்படும் ஏழைகளின் அழுகுரலுக்கும், பூமியின் அழுகுரலுக்கும் ஒருசேர செவிமடுக்குமாறும் இந்த ஆவணம் கிறிஸ்தவர்களை வலியுறுத்துகிறது.

தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றில் மட்டுமல்லாமல், கலாச்சார விழுமியங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளிலும் மாற்றங்களை உள்ளடக்கிய உண்மையான சுற்றுச்சூழல் மனமாற்றத்திற்கு இந்த ஆவணம் அழைப்பு விடுக்கிறது.

சுரண்டல் மனப்பான்மை கொண்ட மனித மைய சிந்தனையையும், இயற்கையைக் கடவுளாக வழிபடும் போக்கையும் இது எச்சரிக்கிறது; மாறாக, மனிதர்கள் படைப்பின் பராமரிப்பாளர்களாகச் செயல்படும் "சமநிலை மனித சிந்தனையை" முன்மொழிகிறது.

நற்கருணையானது ஓர் சூழலியல் சிந்தனைப் பள்ளியாக முன்வைக்கப்படுகிறது; அதே வேளையில் யூபிலி போன்ற கொள்கைகள், சுற்றுச்சூழல் ஆன்மீகம், அளவாகச் பயண்படுத்தும் தன்மை, தோழமை உணர்வு மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கான அக்கறை ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன. படைப்பைப் பாதுகாப்பதில் மதங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும் உலகளாவிய இறையியல் ஆணையம் எடுத்துரைக்கிறது.

இறுதியாக, சுற்றுச்சூழல் பொறுப்பு என்பது நெறிமுறை சார்ந்த மற்றும் இறையியல் ரீதியான கடமை என்று கூறும் இந்த ஆவணம், கடவுள் மீதான நம்பிக்கையில் வேரூன்றிய ஒரு கலாச்சார மற்றும் ஆன்மீக "சூழலியல் திருப்புமுனைக்கு" அழைப்பு விடுக்கிறது.

Tamil Survey Popup Image