ஆண்டவரின் அழைப்புக்கு அடிப்பணிவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
22 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 20 ஆம் வாரம் – வியாழன்
எசேக்கியேல் 36: 23-28
மத்தேயு 22: 1-14
ஆண்டவரின் அழைப்புக்கு அடிப்பணிவோம்!
முதல் வாசகம்.
கடவுள், எசேக்கியேல் இறைவாக்கினர் மூலமாக பேசுகிறார். பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையைத் தூண்டுகிறார். புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்புக்கான நேரத்தை கடவுள் அருள்வார் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்.
இஸ்ரயேலர்கள் கடவுளின் அழைப்புக்கேற்ற வாழ்வு வாழவில்லை, இது மற்ற நாட்டவர் மத்தியில் அவருடைய மாட்சிமிகுப் பெயரைத் தீட்டுப்படுத்த வழிவகுத்தது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வாலும், வார்த்தையாலும் கடவுளின் பெயருக்கு களங்கத்தை விளைவித்தனர். இஸ்ரயேலர் சிறைப்பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட பாபிலோனில் இருந்து, மீண்டும் சொந்தத் தாயகமான யூதேயாவுக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்ற கடவுளின் வாக்குறுதியை எசேக்கியேல் இங்கே நினைவூட்டுகிறார்.
மேலும், கடவுள் அவர்களைத் தமது தூய மக்களாக, யாவே எனும் ஒரே கடவுளின் மக்களாக மீண்டும் பெற்றுக்கொள்வார் என்று அறிவுறுத்துகிறார். இது அவர்களின் பாவம் மற்றும் உருவ அல்லது சிலை வழிபாட்டிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. கடவுளின் இந்த வாக்கறுதியானது, அவர்களின் "கல்லான இதயங்களை" எடுத்து, கடவுளின் விருப்பத்துடன் இணைந்த இதயமாக அவர் மாற்றவிருப்பதைக் குறிக்கிறது.
கடவுள் அவர்களில் புதிய ஆவியைப் பொழிவார் என்பது, கடவுளின் சட்டங்களைப் பின்பற்றுவதற்கான புதிய மனநிலை அல்லது அணுகுமுறையை அருளவுள்ளார் என்று பொருள்கொள்ளலாம்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் விண்ணரசைப் பற்றிய இயேசவின் போதனைத் தொடர்கிறது. விண்ணரசு கண்களுக்குப் புலப்படாத ஒன்று. எனவே அறிந்துணர்தல் சிரமம். ஆகவே, இயேசு உவமைகள் வாயிலாகப் புரிய வைக்க முயல்கிறார். இம்முறை, இயேசு விண்ணரசை திருமண நிகழ்ச்சிக்கு ஒப்பிட்டு யார் விண்ணரசுக்குத் தகுதியானவர்கள், யாரெல்லாம் தகுதியற்றவர்கள் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.
ஓர் அரசர் திருமண விருந்தினை ஏற்பாடு செய்துவிட்டு அழைப்புக் கொடுத்த அனைவரையும் அழைக்கின்றார். அவர்களோ சாக்குப்போக்குச் சொல்லி விருந்தைப் புறக்கணித்தனர். இதனால் சினங்கொண்ட அரசர், தன்னுடைய பணியாளர்களை அனுப்பி தெருவோரங்களில் காணப்பட்ட ஏழை எளியோரை விருந்தில் பங்குபெற அழைக்கின்றார். இது முதல் பகுதி.
இரண்டாம் பகுதியில்,
அந்தத் திருமண மண்டபத்தில் அரசர் அளித்தத் திருமண ஆடையை அணியாத ஒருவர் இருப்பதை அரசர் கண்டு கோபங்கொண்டர். இறுதியில் அவர் வெளியே அனுப்பப்பட்டார் என்று மத்தேயு இயேசுவின் உவமையைப் படைக்கிறார்.
சிந்தனைக்கு.
ஒருவரின் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் என்றால் அது ஒரு கொண்டாட்டமாக மாறிவிடுவது வழக்கம். நெருங்கிய குடும்ப உறவினர், உற்றர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழைக்கப்படுவர். விருந்து ஏற்பாடுகள் அனைத்தும் தடபுதலாக இருக்கும். இப்படி அனைத்தும் சிறப்பாகவும் மிகுந்த எதிர்நோக்குடனும் செய்யப்பட்ட விருந்துக்கு அழைக்கப் பெற்றவர்கள் வர விரும்பவில்லை என்றால் என்ன நடக்கும்? ஏமாற்றம், கோபம், அவர்கள் மேல் வெறுப்பும்தான மிஞ்சும்.
நற்செய்தியல் விருந்து மண்டபம் வெறுமையாக இருக்கிறது! விருந்து பரிமாறுபவர்கள் வாசல் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். யாரும் உள்ளே வரவில்லை. அரசருக்குப் பெரும் ஏமாற்றம்.
அரசருக்கு கோபத்திற்கு மேல் கோபம் வருகிறது. 'அழைக்கப்பெற்றவர்கள் (இஸ்ரயேல் மக்கள்) தகுதியற்றுப் போனார்கள்' என்று சொல்லி, மாற்று ஏற்பாடு செய்கிறார்.
நிறைவாக தெருவில் இருந்தோருக்கு (புறவினத்தாருக்கு) அழைப்பு விடுக்கப்படுகிறது. விருந்துக்கூடம் நிரம்பி வழிகிறது. மகழ்ச்சி பொங்கிவரும் வேளையில், அக்கூட்டத்தில் திருமண ஆடை அணியாத ஒருவரை அடையாளம் காணுகிறார் அரசர். திருமண ஆடை என்பது அரசர் வழங்கும் பரிசு. அந்தப் பரிசை அவன் ஏற்க மறுத்துள்ளான். அதை அரசர் தனக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாகவும், அவரது நற்பெயருக்குக் கலங்கமகாவும் கருதி, அவனை வெளியேற்றுமாறு கட்டளையிடுகிறார்.
விண்ணக விருந்து என்று ஒன்று உண்டு. அவ்விருந்தில் பங்கு பெற கடவுள் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலருக்கு முன்னுரிமையும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இதற்கெனவே தம் ஒரே மகனை கடவுள் அனுப்பிவைத்தார். அவரை இஸ்ரயேலர் புறக்கணித்தனர். எனவே, நம்மைப் போன்ற புறவினத்தார் அழைக்கப்பட்டனர்.
கடவுளின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில் பலர் இரண்டும் கெட்டான் நிலையில் தத்தளிக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் சிந்தனை ஓரிடத்தில் இருப்பதில்லை. பலர் காலை முதல் இரவு வரை மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள். பலர் தங்கள் ஸ்மார்ட்போன்கள், கணினிகள், வாட்செப் செய்திகள் என பலவற்றில் மூழ்கிக் கிடக்கிறார்,
இயேசு இருகரம் விரித்தவராக நம்மை அழைக்கிறார். நமது நிலைவாழ்வான விண்ணக விருந்தில் பங்கு பெற அழைக்கிறார். அதே விருந்தின் முன்சுவையாக நற்கருணை விருந்தினைப் படைத்துக்கொண்டிருக்கிறர். இம்மை வாழ்வில் இவ்விருந்தினைப் புறக்கணிப்போர் மறுமை வாழ்வில் விண்ணக விருந்திற்கு ஏங்க வேண்டியிருக்கும்.
இந்தத் திருமண விருந்து உவமையை நமது சொந்த வாழ்க்கையின் பின்னணியில் பதிய வைத்துச் சிந்திப்பது சிறப்பு. கடவுள் நம்மை தூய வாழ்வுக்கு, ஒன்றிப்புக்கு, பிறர் அன்புப் பணிக்கு அழைத்தக்கொண்டே இருக்கிறார். நம்மில் பலர் பல சாக்குப்போக்குகளை முன்வைத்து அழைப்பைத் தட்டிக் கழிக்கிறோம். இந்நிலை நீடிக்குமேயானால், நம்மில் பலரும் திருமண ஆடையின்றி இருந்தவனைப்போல ‘வெளியே எறியப்படுவோம்’ என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
‘புதிய இதயமும், புதிய ஆவியும் உமக்கருள்வேன்’ என்ற ஆண்டவரே, உமது வாக்கின்படி, புதிய இதயமும் புதிய ஆவியும் கொண்டு உமது திருப்பெயருக்காக வாழும் வாழ்வை எனக்கருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452