தாழ்ச்சியே நமது அடையாளம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
31 அக்டோபர் 2026
பிலிப்பியர் 1: 18b-26
லூக்கா 14: 1, 7-11
தாழ்ச்சியே நமது அடையாளம்!
முதல் வாசகம்.
பவுல் அடிகள் தொடர்ந்து பிலிப்பியருக்கு எழுதும்போது, இந்தப் பகுதியில், கிறிஸ்துவே தனது வாழ்வின் மையம் என்பதையும், வாழ்வதும் மரிப்பதும் கிறிஸ்துவுக்காகவே என்பதையும் வலியுறுத்துகிறார். பவுல் சிறையில் இருந்தபோதிலும், கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்படுவதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறார். தனது வாழ்விலும் மரணத்திலும் கிறிஸ்து மாட்சியுற வேண்டும் என்பதே அவருடைய விருப்பம் என்பதை வெளிப்படுத்துகிறார்.
எந்தச் சூழ்நிலையிலும் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்படுவதால் பவுல் மகிழ்ச்சியடைவதோடு அவரது வாழ்வின் குறிக்கோள் “எனக்கு வாழ்வது கிறிஸ்து, சாவதோ ஆதாயம்” என்று கூறுகிறார். அதாவது, வாழும் காலமெல்லாம் கிறிஸ்துவுக்காகச் சேவை செய்வதே அவரது நோக்கம் என்கிறார்.
நற்செய்தி.
நேற்று பிறர் அன்புப் பணியின் முக்கியத்தை வலயுறுத்திப் போதித்த இயேசு, இன்று தாழ்மையின் முக்கியத்துவத்தையும், தன்னை உயர்த்திக் கொள்பவர் தாழ்த்தப்படுவார்; தன்னைத் தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப்படுவார் என்பதையும் கற்பிக்கிறார்.
ஒரு நாள், இயேசு ஓய்வுநாளில் பரிசேயர் தலைவரின் வீட்டில் உணவருந்தச் சென்றார். அங்கு விருந்துக்கு வந்தவர்கள் முக்கியமான இடங்களில் அமர்ந்துகொள்ள விரும்புவதைக் கவனித்தார். அதனால், இயேசு அவர்களுக்கு ஓர் உவமையைக் கூறினார். திருமண விருந்துக்கு அழைக்கப்படும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் அமராமல், கடைசி இடத்தில் அமருங்கள் என்று போதிக்கிறார்.
அப்போது விருந்தளிப்பவர் வந்து, முதன்மை இடத்திற்கு அழைத்தால், அனைவருக்கும் முன்பாக மதிப்புப் பெறுவோம். மாறாக, நாமே முதன்மை இடத்தில் அமர்ந்து, பின்னர் கடைசி இடத்திற்குச் செல்லும்படி கூறப்பட்டால் அவமானமடைவோம்என்று அறிவுறுத்தியதோடு
‘தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்’ (லூக்கா 14:11) என்கிறார்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில், இயேசு, விருந்துக்கு வந்தவர்கள் மேன்மையான இடங்களில் அமர்வதற்காகப் போட்டி போட்டுக்கொள்வதை கவனிக்கிறார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இன்றைய நற்செய்தியில் காணப்படும் உவமையை அவர் கூறுகிறார். இல்லாத ஒன்றை பற்றி இயேசு கற்பனையாகப் பேசவில்லை.
ஆம், முதல் இடத்தில் அமர்வதன் மூலம் மற்றவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்ட விரும்புவோரின் மனநிலையை இயேசு சுட்டிக்காட்டுகிறார். பதவி, செல்வம், கல்வி, புகழ் அல்லது வேறு எந்த அடிப்படையிலும் ஒருவர் தன்னை உயர்த்திக்கொள்ளக் கூடாது என்பது சீடர்களுக்கான அடிப்படை போதனையாக உள்ளது. ஏனெனில், நாம் உலகில் வாழ்ந்தாலும், உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. என்றும் எப்போதும் நமது செயல்கள் நமது பெருமையை வெளிப்படுத்துவதற்காக அல்ல; அன்பையும் சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
இன்று, பலர், பணியிடத்திலும், பங்குகளிலும், அன்பிநங்களிலும் (அடிப்பை திருஅவை சமூகங்களிலும்) பதவி, அவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று ஒதுங்கி இருப்பதைக் காண்கிறோம். ஆனால் இயேசு நம்மை அத்தகைய மனநிலையிலிருந்து விடுவித்து, பிறரை மதிக்கவும், தாழ்மையுடன் சேவை செய்யவும் அழைக்கிறார். நமது உள்ளத்தில் இருக்கும் பெருமையை விட்டுவிட்டு, தாழ்மை, அன்பு, பிறருக்கு மதிப்பளித்தல் ஆகிய பண்புகளுடன் வாழ வேண்டும் என்பதே அவரது முக்கியமான செய்தியாகும்
"வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்" என்பதைநினைத்துப் பார்க்க வேண்டும். இன்றைய நிலை நாள் தலைகீழாக மாறக்கூடும். வாழ்வில் எதுவுமே நிரந்தரமானது அல்ல; ஏற்றமும் தாழ்வும் மாறி மாறி வரும். எனவே, எந்தக் காலத்திலும் யாரையும் இளக்காரமாகவோ தாழ்வாகவோ நினைக்கக் கூடாது. எப்போது யாருடைய உதவி நமக்குத் தேவைப்படும் என்று சொல்ல முடியாது.
ஆகவே, கிறிஸ்துவே தனது வாழ்வின் மையம், வாழ்வதும் மரிப்பதும் கிறிஸ்துவுக்காகவே என்றுரைத்த பவுல் அடிகளின் வரிகளை என்றும் மனதில் நிலையிறுத்துவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நான் மற்றவர்களிடமிருந்து மதிப்பையும் அங்கீகாரத்தையும் தேடுவதைத் துறந்து, பிறரை மதித்து, தாழ்மையுடன் சேவை செய்யும் மனப்பக்குவத்தை தாரும். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
