விண்ணக விருந்துக்கு அக ஒளி ஏற்றுவோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

20 அக்டோபர் 2026
 
எபேசியர் 2: 12-22
லூக்கா  12: 35-38
 
 

விண்ணக விருந்துக்கு அக ஒளி ஏற்றுவோம்!


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில், பவுல் அடிகள் தொடர்ந்து,   இயேசு கிறிஸ்துவின் மூலம் நாம் கடவுளோடு ஒப்புரவாகி, ஒருவரோடு ஒருவர் சமாதானத்துடன் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை விவரித்து எபேசியருக்கு எழுத்துகிறார்.


அவர் எபேசிய கிறிஸ்தவர்கள் திருமுழுக்குப் பெறுவதற்கு முன்  கொண்டிருந்த வாழ்க்கை நிலையை சுட்டிக்காட்டுகிறார். அவற்றுள் சில:

ஒரு காலத்தில் எபேசிய கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும்,  யூதர்களால் புறந்தள்ளப்பட்டவர்களாகவும்,  பழைய உடன்படிக்கையை அறியாதவர்களாவும், எதிர்நோக்கு இல்லாதவர்களாகவும், கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும்  இருந்ததை சுட்டிக்காட்டுகிறார்.   


ஆனால், இப்போது, இயேசு யூதர்களுக்கும் புறவினத்தாருக்கும் இடையிலிருந்த பிரிவினையை நீக்கி, அனைவரையும் ஒன்றாக்கினார் என்பதோடு,  சிலுவையின் மூலம் தந்தையாம் கடவுளோடு ஒப்புரவாகும் வழியை ஏற்படுத்தியுள்ளார் என்று விவரிக்கிறார்.

தொடர்ந்து, இயேசுவின் மூலம் அனைவரும் ஒரே ஆவியினாலே தந்தையாகிய கடவுளிடம்  செல்லும் உரிமையைப் பெற்றிருக்கிறோம் என்ற மகிழ்ச்சி செய்தியைப் பகிர்கிறார். ஆகவே, 
இனி எபேசிய இறைமக்கள் அனைவரும் அந்நியர்களும் அல்ல, ஒருவருக்கொருவர் வேறுப்டவர்களும் அல்ல எனும் ஒன்றிப்பு செய்தியை முன்வைக்கிறார். 


அவர்கள் இறைமக்கள் சமுதாயத்தின் அதாதவது, திருஅவையின்  உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட (திருஅவையாய்) கட்டடமாய் இருக்கிறீர்கள் என்று முடிக்கிறார்.  


நற்செய்தி.


இன்றைய நற்செய்தி பகுதியில், இயேசு தம் சீடர்களிடம், இடுப்பில் கச்சை கட்டிக்கொண்டு, விளக்குகளை எரியவிட்டுத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். தங்கள் தலைவர் திருமண விருந்திலிருந்து திரும்பி வரும்போது, அவருக்காகக் காத்திருக்கும் பணியாளர்களைப் போல விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.


தலைவர் திரும்பி வரும்போது விழிப்புடன் இருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர்களுக்குத் தலைவரே பணிவிடை செய்வார் என்று இயேசு கூறுகிறார். தலைவர் நள்ளிரவிலோ விடியற்காலையிலோ வந்தாலும், தயாராக இருக்கும் பணியாளர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.


சிந்தனைக்கு.

“ திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி
வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத்
திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்” (லூக்கா 12:36)


“உங்கள் விளக்குகளை எரியவிடுங்கள்” என்ற இயேசுவின் வேண்டுகோளில், நாம் ஆன்மிக இருள் நிறைந்த உலகில் வாழ்கிறோம் என்பது தெளிவாகிறது.  இயேசுவின் இரண்டாம் வருகையை அடையாளம் கண்டுகொள்ள இறையருளின் ஒளியும் ஆன்மீக விழிப்புணர்வும்  நமக்குத் தேவை என்பதை இன்று நமக்கு அறிவுறுத்துகிறார் ஆண்டவர். திருமுழுக்கில் நாம் பெற்றுள்ள நம்பிக்கை ஒளியானது என்றும் ஒளிவீச வேண்டும்.


உண்மையான ஆன்மிக விழிப்புணர்வு என்பது நமது இறைவேண்டலிலும் பிறர் அன்பு பணிகளிலும் தொடர்ந்து நிலைத்திருப்பதைக் குறிக்கிறது. மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் நாம் இறைவனையே நோக்கி, “உமது திருப்பெயர் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக!” என்று மன்றாட வேண்டும்.
நமது ஒரே  விருப்பம் இவ்வுலக வாழ்வில் நிம்மதியை தேடுவதோ, மன ஆறுதலைப் பெறுவதோ, துன்பங்களின்போது உதவியை நாடுவதோ அல்ல. மாறாக, இறைவனின் மாட்சி வெளிப்பட வேண்டும் என்பதும், மற்றவர்களுடன் இணைந்து அந்த மாட்சியில் பங்குபெற வேண்டும் என்பதுமே நமது மிக உயர்ந்த விருப்பமாக இருக்க வேண்டும்.


முதல் வாசகத்தில், முன்பு இறைவனிடமிருந்து தொலைவில் இருந்த நாம், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் அவருக்கு அண்மையில் உள்ளோம் என்று புனித பவுல் கூறுகிறார். கிறிஸ்து நமக்கும் இறைவனுக்கும் இடையிலிருந்த பிரிவை நீக்கி, நம்மை இறைவனோடு ஒப்புரவாக்கினார்.  இந்த ஒப்புரவின் வாயிலாக விண்ணக வாழ்வுக்கு நாம் தகுதி பேறுபெற்றுள்ளோம். அந்த விண்ணக வாழ்வே நமக்கான திருவிருந்து.


ஆம், விண்ணக விருந்து என்பது இறைவனோடு என்றென்றும் வாழும் நிலைத்திருக்கும் மகிழ்ச்சியின் நிலை. இந்த விண்ணக விருந்தில் பங்குபெறுவது என்பது எளிதல்ல. அதற்கு ஆன்மீக விழிப்பு இன்றியமையாதது.   தொடர்ந்து இறைவேண்டல் செய்வதும்,  இறைவார்த்தையின்படி வாழ்வதும், பிறருக்கு உதவுவதும், நம்மைத் துன்புறுத்துவோரை மன்னிப்பதும் நமது விழிப்புணர்வுக்கு சிறந்த வழியாகும்.  மகிழ்ச்சியான நேரங்களிலும் துன்பமான நேரங்களிலும் இறைவனை நம்பி, அவருடைய திருவுளத்தை நிறைவேற்ற முயற்சி செய்வதே உண்மையான ஆன்மிக விழிப்புணர்வு.

இறைவேண்டல்.


அன்பு ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னை தந்தையாம் கடவுளோடு ஒப்புரவாக்கியதற்காக நன்றி கூறுகிறேன்.  உமது வருகைக்காக எப்போதும் விழிப்புடனும், நம்பிக்கையுடனும், பிறருக்குச் சேவை செய்தும்  நான் வாழ எனக்கு  அருள்புரியும். ஆமென்.

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image