இறைவனின் அன்பில் அச்சத்திற்கு இடமில்லை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

16 அக்டோபர் 2026
 
எபேசியர்  1: 11-14
லூக்கா 12: 1-7
 

இறைவனின் அன்பில் அச்சத்திற்கு இடமில்லை!


 
முதல் வாசகம்.


 
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் தமது திருவுளப்படியும் திட்டத்தின்படியும் நம்மைத் தெரிந்துகொண்டு, இயேசு கிறிஸ்துவின் மூலம் தமது பிள்ளைகளாகும் பாக்கியத்தை அளித்தார் என்றும்,  கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை வைத்த நாம், நம் வாழ்வின் மூலம் கடவுளின் மாட்சியை போற்றுகிறவர்களாக இருக்க வேண்டும் எனறும் அறிவுறுத்துகிறார்.


மேலும், கடவுளின் உயிருள்ள வார்த்தையைக் கேட்டு,  கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட நாம் தூய ஆவியானவரால் முத்திரையிடப்பட்டிருக்கிறோம் என்பதால்,கடவுளுடைய வக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து,  அவர் மாட்சியுறும் பொருட்டு, அவருக்கு வேண்டியவர்களாக  வாழ வேண்டும் என்று முடிக்கிறார். 


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்களிடம் பரிசேயரின் வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள் என்ற படிப்பினைய முன்வைக்கிறார்.  மறைக்கப்பட்டவை அனைத்தும் ஒருநாள் வெளிப்படும் என்பதால், நாம் வெளிப்புறத்தில் மட்டுமல்லாமல் உள்ளத்திலும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனும் அறிவுரை ஊட்டுகிறார்.   


மேலும், நம்முடைய உடலைக் கொல்லக்கூடிய மனிதர்களுக்கு அஞ்சாமல், அதிகாரமுள்ள கவுளுக்கு அஞ்ச வேண்டும் என்று இயேசு கூறுகிறார். அதே வேளையில், கடவுள் நம்மை மிகவும் அன்புடன் பாதுகாக்கிறார் என்பதையும் நினைவூட்டுகிறார். சிறிய சிட்டுக்குருவிகளைக்கூட கடவுள் மறப்பதில்லை; நம் தலையிலுள்ள முடிகலெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. எனவே, சீடர்காளகிய நாம் அஞ்சாமல் கடவுளை  நம்பி, அவருடைய அன்பிலும் பாதுகாப்பிலும் வாழ்வது மேலானது என்கிறார்.


சிந்தனைக்கு.


இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில்,  இயேசு தமது அறிவுரையைத் தொடங்குவதற்கு முன், தமது சீடர்களை அன்புடன் “என் நண்பர்களே” என்று அழைக்கிறார். அதேபோல நம்மையும் அவர் அழைக்கிறார். பின்னர், உடலை மட்டுமே கொல்லக்கூடியவர்களுக்கும் அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்கும் அஞ்ச வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.  ஆம், கண்ணால் காணக்கடிய உடலை கொல்லக்கூடிய மனிதனால்,  கண்களால் காண முடியாத ஆன்மாவை எதுவும் செய்ய இயலாது. ஆன்மாவுக்கு விண்ணகப் பேரின்ப வாழ்வையோ அல்லது என்றும் மீளமுடியாத கொடும் வேதனைக்குரிய நரக வாழ்வுவையோ தரவல்லவர் கடவுள் ஒருவரே.

"அஞ்சுக அஞ்சுதற்கு அஞ்சாமை பேதைமை
அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில்" (குறள் 428) 

மேற்கண்டவாறு திருவள்ளுவரும்  உலகிற்கு அறிவுறுத்தியுளாளர். ஆம். தீய செயல்கள், தவறான முடிவுகள், அவற்றால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைக் கண்டு அஞ்சுவது நல்லது. ஆனால் தேவையற்ற பயத்தினால் நற்செயல்களைச் செய்யத் தயங்குவது சரியல்ல. எனவே, எதைக் கண்டு அஞ்ச வேண்டும் என்பதைப் பகுத்தறிந்து செயல்படுவதே உண்மையான சீடத்துவத்திற்கு அழகு.


இன்றைய இரு வாசகங்களும் நமது வாழ்வில் இறைவன் கொண்டுள்ள அன்பையும், அவர்மீது நாம் வைக்க வேண்டிய நம்பிக்கையையும் எடுத்துரைக்கின்றன. மனிதர்கள் பல நேரங்களில் பயம், கவலை, எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமின்மை ஆகியவற்றால் மன அமைதியை இழக்கிறோம். ஆனால் இறைவன் நம்மைத் தெரிந்துகொண்டவர்; நம்மை அன்புடன் பாதுகாப்பவர். எனவே, அச்சத்தால் வாழாமல், இறைவன் மீது நம்பிக்கை வைத்து வாழ அழைக்கப்படுகிறோம். இதன் மூலம் நாம் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதையும், நமது வாழ்வு அவருடைய அன்பான திட்டத்தில் அடங்கியுள்ளது என்பதையும் அறிகிறோம்.  .

 
நிறைவாக, மனிதர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள், நமக்கு எதிராக என்ன செய்வார்கள் என்று மனிதர்களுக்கு அஞ்சுவதால் சில நேரங்களில் உண்மையைப் பேசவும், நன்மை செய்யவும் தயங்குகிறோம். ஆனால் இயேசு, மனிதர்களுக்கு அஞ்சுவதைவிட இறைவனுக்கு அஞ்சி வாழ வேண்டும் என்று கற்பிக்கிறார். அதே நேரத்தில், சிறிய சிட்டுக்குருவிகளைக்கூட இறைவன் மறப்பதில்லை என்றும், நம் தலையிலுள்ள முடிகலெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன என்றும் கூறி, நம்மீது அவர் கொண்டுள்ள ஆழமான அக்கறையை வெளிப்படுத்துகிறார். ஆகவே, வாழ்க்கையில் துன்பங்களும் சோதனைகளும் வரும்போதும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய வேளையிலும்  தொடை நடுங்கியாக இல்லாமல், இறைவனின் வாக்குறுதிகளில் உறுதியாக இருக்க வேண்டும்
 


இறைவேண்டல்.  

ஆண்டவரே, நீர் என்னை  தேர்ந்தெடுத்து உமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்காக நன்றி. மனிதர்களுக்கு அஞ்சி உண்மையை மறைக்காமல், உமக்கு அஞ்சி நேர்மையுடன் வாழ எனக்குத் துணிவையும் நம்பிக்கையையும் தாரும். உமது தூய ஆவியால் என்னை வழிநடத்தி, உமது அன்புக்குச் சாட்சியாக  வாழ அருள்புரியும். ஆமென்.


ஆர்.கே.சாமி,
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image