வெளித்தோற்றம் அல்ல, உள்ளத்தின் மாற்றம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

14 அக்டோபர் 2026
 
கலாத்தியர்  5: 18-25
லூக்கா 11: 11: 42-46

 
வெளித்தோற்றம் அல்ல, உள்ளத்தின் மாற்றம்!


முதல் வாசகம்.


இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் தூய ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, கடவுளுக்கு ஏற்புடைய   வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை விவரிக்கிறார். குறிப்பாக, பொறாமை, கோபம், பகை, சண்டை, பிரிவினை, ஒழுக்கக்கேடு போன்ற தீய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும்,  இத்தகைய செயல்களில் தொடர்ந்து வாழ்வது இறையரசுக்கு  ஏற்ற வாழ்க்கை அல்ல என்றும்= வலியுறுத்துகிறார். 

தொடர்ந்து,  ஆவியின் கனிகள் பற்றி விவரிக்கும் பவுல் அடிகள் தூய  ஆவியானவர் நம்மில் செயல்படும்போது, நம் வாழ்க்கையில் அவரது கனிகளான  அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் போன்றவற்றிற்கு  உரியவராவோம் என்கிறார். 


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில்  இயேசு பரிசேயர்களையும் திருச்சட்ட அறிஞர்களையும் அவர்களின் போலித்தனமான நடத்தைக்காகக் கடுமையாகக் கண்டித்ததை லூக்கா குறிப்பிட்டு எழுதுகிறார்.


பரிசேயர்கள் புதினா, சதகுப்பை போன்றவற்றில் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் புறக்கணித்தார்கள். இயேசுவோ,  கடமைகளைச் செய்வதோடு மட்டுமல்லாமல், நீதியுடனும் அன்புடனும் வாழ வேண்டும் என்று கற்பிக்கிறார். 


பரிசேயர்கள் மக்கள் தங்களுக்கு மரியாதை கொடுக்கப்பட  வேண்டும் என்றும், முக்கியமான இடங்களில் அமர வேண்டும் என்றும் விரும்பினார்கள். ஆனால் அவர்களுடைய உள்ளமோ கடவுளின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை. இயேசுவோ,  வெளிப்புற மதப்பற்றைவிட உள்ளத்தின் தூய்மை முக்கியம் என்பதை வலியுறுத்துகிறார். 


திருச்சட்ட அறிஞர்கள் மக்களால் சுமக்க முடியாத கடினமான விதிகளை அவரகள் மீது சுமத்தினார்கள். ஆனால் அந்தச் சுமைகளை எளிதாக்க அவர்கள் உதவவில்லை. இதனிமித்தம்,  பிறருக்குப் போதிப்பவர்கள் தாங்களும் அதன்படி வாழ வேண்டும் என்று இயேசு எச்சரிக்கிறார்.


சிந்தனைக்கு.


இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல் தூய ஆவியாரின் கனிகளைப் பற்றி எடுத்துரைக்கிறார். அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவை தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் வாழ்வின் அடையாளங்கள் என்கிறார். அதே வேளையில்,  இயேசு பரிசேயர்களையும் திருச்சட்ட அறிஞர்களையும் கடுமையாகக் கடிந்துகொள்கிறார். அவர்கள் வெளிப்புறச் சடங்குகளிலும் விதிமுறைகளிலும் கவனம் செலுத்தினார்கள்; ஆனால் நீதியையும் இறையன்பையும் புறக்கணித்தார்கள். 


நற்செய்தியில், ஆண்டவர் இயேசு பரிசேயர்களையும் திருச்சட்ட அறிஞர்களையும் குறித்து,  ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு!, “ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! என்று கடிந்துகொள்கிறார். "புகைபிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு" என்பதில், அது உடலுக்குத் தீமை அல்லது அழிவைத் தரும் என்பதைக் குறிக்கிறது. அதுபோலவே, ‘உங்களுக்கு கேடு’ என்பது அது அவர்களுக்கு அழிவைத் தருவிக்கும் என்று பொருள் கொள்ளாம்.


பரிசேயர்களை இயேசு கடுமையாகக் கண்டிக்கும் நற்செய்திப் பகுதிகளை நாம் படிக்கும்போது, அது நமக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். பகைவரையும் அன்பு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தும் இயேசு, ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு’ என்றுரைக்கும் போது, பரிசேயரே நீங்கள் நாசமாகப் போவீர்கள் என்று சபிப்பதாக உள்ளது 

 
வெளியில் நாம் எவ்வளவு பக்தியுள்ளவர்களாகத் தோன்றுகிறோம் என்பதல்ல, நம் உள்ளத்தில் எவ்வளவு அன்பும் நீதியும் இருக்கின்றன என்பதே முக்கியம்.  தூய ஆவியாரின் வழியில் வாழ்வது என்பது வெறும் வார்த்தைகளில் அல்ல; நமது அன்றாடச் செயல்களில் வெளிப்பட வேண்டும். கோபத்திற்குப் பதிலாகப் பொறுமையையும், வெறுப்பிற்குப் பதிலாக அன்பையும், பெருமைக்குப் பதிலாகத் தாழ்மையையும் தேர்ந்தெடுப்பதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. தூய ஆவியாரின் கனிகளைப் பெற்றுள்ள நாமும் கனிதராவிடில், நமக்கும் ‘ஐயோ கேடுதான்’. 


எனவே, இன்று நாம் நம்மையே கேட்டுக்கொள்வோம்: நம் வாழ்வில் தூய ஆவியாரின் கனிகள் வெளிப்படுகின்றனவா? நம் பக்தி அல்லது நம்மில் உள்ள உறையன்பு நம் செயல்களில் தெரிகிறதா?


நமது வெளித்தோற்றத்தை மட்டும் அல்ல, நமது உள்ளத்தையும் இறைவன் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்.  அப்போதுதான்  நமது வாழ்வே இறைவனின் அன்பிற்குச் சாட்சியாக மாறும்.


இறைவேண்டல்.  


இயேசுவே, அன்பின் ஆண்டவரே,  நான் கொண்டிருக்கும் எனது  வெளிப்புற பக்தியை விட என் உள்ளத்தின் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க எனக்கருள்வீராக.   ஆமென்.

 


 ஆர்.கே.சாமி,
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image