தர்மத்தின் தலைவனாயிரு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

7 நவம்பர் 2026

பிலிப்பியர்  4: 10-19
லூக்கா 16: 9-15

 

தர்மத்தின் தலைவனாயிரு!


முதல் வாசகம்.


இவ்வாசகத்தில், புனித பவுல் பிலிப்பிய திருஅவையினரின் அன்பையும், அவரிடம் அவர்கள் காட்டிய அக்கறைக்கும் ஆதரவுக்கும் நன்றி பாராட்டுகிறார். வாழ்வில் எல்லா சூழ்நிலைகளிலும் மனநிறைவுடன் வாழக் கற்றுக்கொண்டதாக அவர் இங்கே கூறுகிறார்.


அத்தோடு, நிறைவாக வாழ்ந்தாலும், குறைவுகளைச் சந்தித்தாலும், இன்பத்திலும் துன்பத்திலும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் துணையால் அனைத்தையும் தாங்கிக்கொள்ளவும், எதிர்கொள்ளவும் அவருக்கு வலிமை கிடைக்கிறது என்பதை எடுத்துரைக்கிறார்.


மேலும், பிறருக்கு உதவுவதும், நம்மிடம் இருப்பதைத் தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் உண்மையான கிறிஸ்தவ அன்பின் அடையாளம் என்பதைப் புனித பவுல் வலியுறுத்துகிறார். நமது தேவைகளை அறிந்த இறைவன், கிறிஸ்து இயேசுவின் வழியாக அவற்றை நிறைவு செய்வார் என்ற நம்பிக்கையைப் பகிர்கிறார்.  


நற்செய்தி.


இந்த நற்செய்தி வாசகத்தில், இயேசு செல்வத்தையும் பணத்தையும் நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து கற்பிக்கிறார்.  உலகச் செல்வம் நிலையானதல்ல என்றும், அது ஒருநாள் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்பதால்,  நம்மிடம் உள்ள செல்வத்தையும் வளங்களையும் சுயநலத்திற்காக மட்டும் பயன்படுத்தாமல், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து, பிறருடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார்.


தொடர்ந்து, அன்றாட வாழ்க்கையில் சிறிய செயல்களில் உண்மையுள்ளவர்களாக இருப்பவர்கள் பெரிய பொறுப்புகளிலும் உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் எடுத்துரைக்கிறார். மேலும், எவரும் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்திற்கும் அடிமையாக இருக்க முடியாது என்று இயேசு தெளிவாகக் கூறுகிறார். பணத்தின் மீதும் உலகப் பொருட்களின் மீதும் அளவுக்கு அதிகமான பற்றுக் கொள்ளாமல், இறைவனையே நமது வாழ்வின் முதன்மையான செல்வமாகக் கருத வேண்டும் என்பதோடு,  மனிதர்கள் வெளித்தோற்றத்தைக் கண்டு ஒருவரைப் பாராட்டலாம்; ஆனால் இறைவன் நமது உள்ளத்தையும் எண்ணங்களையும் அறிந்திருக்கிறார் என்ற மாறுபட்ட படிப்பினையை முன்வைக்கிறார் இயேசு.


சிந்தனைக்கு.


எனவே இன்றைய முதல் வாசகத்தில் பவுல் அடிகள்  நம் வாழ்வில்  நாம்  எத்தகைய சூழ்நிலையைச் சந்தித்தாலும் இறைவன் மீது நம்பிக்கை வைக்கவும், இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழவும், நன்றியுள்ள உள்ளத்தோடு பிறருக்கு உதவி செய்யவும் வேண்டும் என்பதை வலியுறுத்தியதை வாசித்தோம். 
நம்மைச் சுற்றியிருப்பவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து கவலைப்படுவதை விட்டுவிட்டு, நம்மைச் சுற்றியுள்ளவர்களோடு இருப்பதைப் பகிர்ந்து  வாழ முற்படுவதே நமக்கான அழைப்புக்கேற்ற வாழ்வு.

 
நம் மனதில் தினந்தோறும் புதிது புதிதாக கவலைகள் தோன்றுவதற்கு  ஒரு முக்கிய காரணம் பிறர் வாழ்க்கையை நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுதான். ஒப்பிட்டுப் பார்ப்பதில் தப்போ தவறோ இல்லை. ஆனால்,  அதன் விளைவாக  வருமானத்திற்கு அதிகமாக ஆசைப்பட்டு கடனில் சிக்குவதும், அவர்களது வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவதுமம் நமக்கு நாமே குழித்தோண்டிக்கொள்வதற்கு ஈடாகும். ஆகவே, நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து, பணத்தை நமக்குச் சேவை செய்யும் கருவியாகப் பயன்படுத்தி, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இயேசுவின் இன்றைய வலியுறுத்தலாகும்.


இயேசவின் இந்த படிப்பினை உலக  மக்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காக போகாலம். நமக்கோ இது அருள்வாக்கு. வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தானேயன்றி வீழ்வதற்கல்லவே. நாமாக நமது மன உறுதியைத் தொலைத்தால் ஒழிய நம்மை யாரும் வீழ்த்தவே முடியாது. ஏனெனில் நாம் தூய ஆவியாரால் இயக்கப்படும் மக்கள். 

நற்செய்தியில் ஆண்டவரோ.’ நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்கிறார். ஆம் இங்கே “நேர்மையற்ற செல்வம்” என்று இயேசு குறிப்பிடுவது உலகில் நாம் பயன்படுத்தும் பணம் மற்றும் பொருள் செல்வத்தைக் குறிக்கிறது.   செல்வத்தின் மீது நாளுக்கு நாள் பேராசை கொள்ளாமல், அதை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது போதனை. நம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவுதல், பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்தல், நோயாளிகளைக் கவனித்தல், ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளித்தல் போன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்கிறார். இப்படி செய்வதால் நாம் செய்த நற்செயல்களும், பிறருக்குக் காட்டிய இரக்கமும் இறைவனின் பார்வையில் நிலையான மதிப்பைப் பெறுகின்றன என்று அறிவுறுத்துகிறார். இந்த ஏழைகள், தேவையில் உள்ளவர்கள்தான் நம்மை இரக்கச் சிந்தையோடு வாழ உதவிய நண்பர்கள்.

 
எனவே, இந்த வாசகங்கள்  நாம் வாழ்வில் எத்தகைய சூழ்நிலையைச் சந்தித்தாலும் இறைவன் மீது நம்பிக்கை வைக்கவும், இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழவும், நன்றியுள்ள உள்ளத்தோடு பிறருக்கு உதவி செய்யவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது.


இறைவேண்டல்.


என்  ஆண்டவரே, இயேசுவே, என்னிடம் உள்ள அனைத்தும் உமக்கே உரியவை. அனைத்திற்கும் ஆதாரமாகவும், என்னை வழி நடத்துபவராகவும் நீரே இருக்கிறீர். செல்வம் மற்றும் உலகப் பொருட்களின் மீது நான் அளவுக்கு அதிகமான ஆசையும் பற்றும் கொள்வதிலிருந்து என்னை விடுவித்தருளும். நான் யாராக இருக்கிறேனோ, என்னிடம் எவையெல்லாம் உள்ளனவோ, அவை அனைத்தையும் உமது மாட்சிக்காக அர்ப்பணித்து வாழ எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image