சீடத்துவம் ஞாயிறு திருப்பலியோடு முடிவதல்ல! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

4 நவம்பர் 2026

பிலிப்பியர் 2: 12-18
லூக்கா 14: 25-33

 

சீடத்துவம் ஞாயிறு திருப்பலியோடு முடிவதல்ல!


முதல் வாசகம்.

இன்றைய இவ்வாசகத்தில்,  நாம் கடவுளுக்கு அஞ்சி, அவரது திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்றும், கற்பிக்கப்பட்ட நம்பிக்கையில்  உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்றும் பவுல் அடிகள் குறிப்பிட்டு எழுதுகிறார்.   கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார் என்பதை வலியுறுத்துகிறார்.

 
மேலும், நாம் கடவுளின் வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொண்டு, நமது வாழ்க்கையின் மூலம் கிறிஸ்துவின் அன்பையும் நற்செய்தியையும் மற்றவர்களுக்குப் பகிர வேண்டும் என்பதோடு, கடவுளுக்காகத்  தியாகம் செய்ய நேர்ந்தாலும் மனம் தளராமல் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும் பவுல் எடுத்துரைக்கிறார். 


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு தம்மைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் அவருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் மற்றும் தங்களுடைய உயிரைவிடவும் இயேசுவின் மீது அதிக அன்பும் அர்ப்பணிப்பும் கொண்டிருபதோடு,  முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்ய வேண்டும் என்பதையும்  அவர் வலியுறுத்துகிறார். மேலும், தமது சிலுவையைச் சுமந்துகொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்பது அவரது மேலான படிப்பினையாக உள்ளது.   செய்யுங்கள்


இதன் மூலம், இயேசுவைப் பின்பற்றுவது எளிதான காரியமல்ல; அதற்கு நிலைபெயறாத நம்பிக்கையும் தியாக மனப்பான்மையும் தேவை என்பதை உணர்த்துகிறார். மேலும், ஒரு கோபுரத்தைக் கட்டுவதற்கு முன்பு அதன் செலவைக் கணக்கிடும் மனிதனையும், போருக்குச் செல்வதற்கு முன்பு தனது படைபலத்தை ஆராயும் அரசனையும் உதாரணமாகக் கூறுகிறார். அதுபோல, இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் அதற்கான பொறுப்பையும் தியாகத்தையும் உணர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதை லூக்கா குறுப்பிட்டு எழுதியுள்ளார். 


சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், உண்மையான சீடத்துவத்திற்குத் தேவையான உள்ளார்ந்த மனப்பான்மைகளை இயேசு எடுத்துரைக்கிறார். இந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறுகிறவர்கள் “எனக்குச் சீடராக இருக்க முடியாது” என்று அவர் மூன்று முறை வலியுறுத்திக் கூறுகிறார்.   


நமது ஆன்மீகப் பயணமானது ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் உலகப் பயணம் அல்ல.  அது ஆழமான ஆன்மீக அர்த்தத்தைக் கொண்டதாகும். தன்னலத்தை மறுத்தல், தியாகமிக்க அன்பு மற்றும் இறுதியில் தந்நையில் மாட்சி அடைதல் ஆகியவற்றின் பாதையை நமத் ஆன்மாகப் பயணம் குறிக்கிறது. கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இத்தகைய அர்ப்பணிப்பு நிறைந்த பாதையில் பயணிக்க அழைக்கப்படுகிறோம்.


எனவே, உண்மையான சீடத்துவம் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் உயர்ந்த தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் இன்று ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  கிறிஸ்துவின் சீடராக இருப்பது நமது வாழ்க்கை எளிதாகிவிடும் என்பதோ அல்லது அனைவராலும் உணர்வுபூர்வமாக போற்றப்படுவோம் என்பதோ அல்ல. மாறாக, கடவுளின் அருளுக்கும், மீட்புக்கும்,  பிறரிடம் அன்பு செலுத்துவதற்கும் ஒரே ஆதாரமாகிய கிறிஸ்துவின் மீது நமது கண்களை எப்போதும் பதிய வைத்திருப்பதே உண்மையான சீடத்துவமாகும். 


ஆகவே, சீடத்துவம் என்பது,
•    மலர் மஞ்சம் போன்று மென்மையான ஒன்றல்ல. 
•    அது தொடர் வெற்றிகளும் செல்வச் செழிப்பும் நிறைந்ததல்ல..
•    வாரா வாரம் ஞாயிறன்று தவறாது ஆலயம் செல்வதும் அல்ல

நிறைவாக, கிறிஸ்தவராக வாழ்ந்தோம் மரித்தோம் என்பதில் மட்டும் நமது நிறைவு அடங்காது. மாறாக, இயன்றவரை  பிறரையும் கிறிஸ்துவின் சீடர்களாக உருவாக்குவதில் நாம் எடுக்கும் முயற்சிகளும் கணக்கில் கொள்ளப்படும். கிறிஸ்துவில் நிலைத்திருந்து, அவரைப் போல வாழ்ந்து, பிறரையும் அவரிடம் வழிநடத்துவதே சீடத்துவ வாழ்வுக்கான அழைப்பு என்பதை நினைவில் நிறுத்துவோம்.

இறைவேண்டல்.


ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவதில் முழுமையான அர்ப்பணிப்பையும் தியாக மனப்பான்மையையும் அருள்வீராக. ஆமென்.

 

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image