விண்ணகமே நிலையான வான்வீடு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

3 நவம்பர் 2026

பிலிப்பியர் 2: 5-11
லூக்கா 14: 15-24


 
விண்ணகமே நிலையான வான்வீடு!

முதல் வாசகம்.


இவ்வாசகத்தில் பவுல் அடிகள் கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!  என்று வலியுறுத்தி எழுதுகிறார். இயேசு இறைவனின் நிலையில் இருந்தபோதிலும், அவரது தெய்வீக மாட்சிமையை தமக்காகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும், அவர்  ஒரு பணியாளரின் நிலையை ஏற்று மனிதராக இவ்வுலகிற்கு வந்தார் எனும்,  அவர் சிலுவை மரணம் வரையிலும் தந்தையாம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தார் என்றும் விவரிக்கிறார். 


தொடர்ந்து, இயேசுவின் தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் முன்னிட்டு, இறைவன் அவரை மிகவும் உயர்த்தி, எல்லா பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்கு வழங்கினார் என்றும்,  விண்ணிலும், மண்ணிலும், கீழ் உலகிலும் என மூவுலகிலும்  உள்ள அனைவரும் இயேசுவின் பெயருக்கு முன்பாக மண்டியிட்டு, இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்று அறிக்கையிடுவார்கள் என்று மேலும் குறிப்பிட்டு எழுதுகிறார். 


நற்செய்தி


இன்றைய நற்செய்தி பகுதியில், இயேசு ஒரு ஒரு விருந்து நிகழ்வை மையப்படுத்திய உவமை ஒன்றின் வழியாக போதிக்கிறார். இந்த உவமையில், ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைக்கிறார்.  அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான காரணங்களைக் கூறி பங்கேற்க  மறுக்கிறார்கள். ஒருவர் நிலம் வாங்கியதாகவும், மற்றொருவர் மாடுகளை வாங்கியதாகவும், இன்னொருவர் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறி விருந்துக்கு வரவில்லை.


இதன் விளைவாக,  கோபமடைந்த விருந்தின் தலைவர், ஏழைகள், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் மற்றும் கால் ஊனமுற்றோரை அழைத்து வரும்படி பணியாளருக்குக் கட்டளையிடுகிறார். தொடர்ந்து, இன்னும் இடம் இருப்பதால், வழிகளிலும் வேலிகளின் அருகிலும் இருப்பவர்களையும் அழைத்து வரும்படி கூறுகிறார். தமது வீட்டில் உள்ள இடங்கள் நிரம்ப வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.

சிந்தனைக்கு.


இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இயேசுவிடம், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்றார். இங்கே, ‘இறையாட்சி விருந்து’ என்பதன் பொருள் பற்றி அறிந்திராவிடில் இயேசு முன்வைத்த இந்த உவமையின் பொருள் விளங்காது. 


இயேசுவின் காலத்தில் பெரிய விருந்து என்பது மகிழ்ச்சி, உறவுகளின் ஒன்றிப்பு, அந்தஸ்து அல்லது  கௌரவம் ஆகியவற்றை உட்படுத்தியது. ஒருவர் இத்தகைய விருந்துக்கு அழைக்கப்பட்டால் அவர் பெரும் மதிப்புக்குரியர் ஆவார்.  இதே கண்ணோட்டத்தில் ‘கடவுளின் அரசில்’ அல்லது விண்ணக வாழ்வில் பங்குபெற அழைக்கப்படுவதும் பெரும் மதிப்புக்குரியது என்பதை இயேசு தெளிவுப்படுத்துகிறார்.


முதலில், "வாருங்கள், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது" என்ற அழைப்பு வருகிறது. இயேசு, யோவான் 14:2-ல் 
“தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா?” என்றுரைத்ததை நினைவூட்டுகிறது. ஆம்  விண்ணேற்றத்திற்குப் பிறகு, இயேசு நமக்கு  விண்ணகத்தில் அறைகள் ஏற்பாடு செய்துள்ளார் என்பதைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளலாம். 


இயேசுவின் இந்த உவமையில்  விரு்துக்கு அழைத்த மனிதன் – கடவுளைக் குறிக்கிறது. தொடர்ந்து, பெரிய  விருந்து என்பது இறையரசில் பங்குபெற கடவுள் தரும் மீட்பையும்  ஆசீர்வாதத்தையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளலாம்.


நமக்கு மீட்பு என்பது  நாமாக சம்பாதிக்கும் ஒன்று அல்ல; அது கடவுளின் ஏற்பாட்டில் நமக்கு இலவசமாக கிட்டும் கொடை.   நற்செய்தியில் சில சாக்குப்போக்குகளைக் கூறி விருந்துக்கு வர மறுக்கிறார்கள்.  முதலாவது, உலகத்தின் மீதான பற்று. அடுத்து  சொத்து, பொருளாதாரம், உலக ஆதாயம் ஆகியவற்றில் ஆசைக்கொண்டு அவற்றை விட்டுக்கொடுக்க மறுக்கிறார்கள்.   


உண்மையில் பொருளாதார முன்னேற்றம் தவறானது அல்ல. ஆனால் இந்த உலகப் பற்று கடவுளுக்கு மேலாக நம்முடைய வாழ்க்கையில் இடம் பிடிக்கும்போது அவை ஆவிக்குரிய தடையாக மாறுகின்றன. 
வேலை செய்வதும் குடும்பத்தைப் பராமரிப்பதும் அவசியமானவை. ஆனால் அவை கடவுளோடான  உறவை மறுதளிக்க அனுமதிக்கக்கூடாது.


நாம் குடும்பத்தையும் அன்பு செய்ய வேண்டும்; அதே நேரத்தில் கடவுளுக்கு உரிய முதலிடத்தைக்  கொடுக்க வேண்டும். மத்தேயு 10:37-ல் இயேசு அவரைவிட “ தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்” என  கூறுகிறார். இறையரசில் சமூக அந்தஸ்து அல்லது கௌரவத்திற்கு கிஞ்சிற்றும் இடமில்லை.  


உவமையில், "ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடியே செய்தாயிற்று; இன்னும் இடம் இருக்கிறது. என்று கூறப்படுகிறது.  இப்போது ஒரே ஒரு கேள்விதான் —  விருந்தில்  பங்குகொள்ள (விண்ணக வாழ்வில் ) நாம் நம்மை ஆயத்தப்படுத்துகிறோம்? இக்காலத்தில் நாம் பங்குபெறும் ஒவ்வொரு திருப்பலி விருந்தும் விண்ணக திருவிருந்தின் முன் சுவை என்பதையும், கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் என்ற பவுல் அடிகளின் அறிவுரையையும் நினைவில் கொள்வோம்.

இறைவேண்டல்.


ஆண்டவரே, உமது அழைப்பை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் திறந்த மனதையும், பிறரை அன்புடன் அரவணைக்கும் இதயத்தையும் எங்களுக்குத் தாரும். ஆமென்! 

 

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image