களைப்படைந்த உள்ளங்களுக்கு இறைவனே இளைப்பாறுதல்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

2 நவம்பர் 2026
இறந்த நம்பிக்கையாளர் அனைவர்-விழா

புலம்பல் ம் 3: 17-26
மத்தேயு 11: 25-30 


 களைப்படைந்த உள்ளங்களுக்கு இறைவனே இளைப்பாறுதல்!


முதல் வாசகம்.


புலம்பல் நூலானது. கி.மு. 586-ஆம் ஆண்டில் பாபிலோனிய மன்னன் நேபுகாத்நேச்சார் எருசலேம் நகரத்தை அழித்து, எருசலேம் ஆலயத்தையும் இடித்து யூதர்களை சிறைபிடித்தான். அந்த அழிவையும், யூத மக்களின் துன்பத்தையும் பின்னணியாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. எனவே, துன்பங்கள் மத்தியிலும் கடவுளின் அருளும், இரக்கமும் உண்மையும் நிலைத்திருக்கின்றன எனும் செய்தி இதில் அதிகமாக உள்ளது எனலாம்.

துன்பங்களால் மன அமதியும் நம்பிக்கையும் இழந்ததுபோல் தோன்றினாலும்,  மனம் சோர்வடையாது, ஆண்டவரை  நம்பி, பொறுமையுடன் காத்திருப்பது நல்லது. அவருடைய மீட்புக்காக  அமைதியுடன் காத்திருக்க வேண்டும் எனவும் இவ்வாசகப் பகுதி அறிவுறுத்துகிறது.


நற்செய்தி.


இன்றைய  நற்செய்தி வாசகத்தில், இயேசு தந்தையாகிய கடவுள்  உலக ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைக்கப்பட்ட இறையரசின் உண்மைகளை, எளிய உள்ளம் கொண்டவர்களுக்கு வெளிப்படுத்தியதற்காக கடவுளுக்கு நன்றி நவில்கிறார்.

 
மேலும், இயேசு தம்மை அறிந்துகொள்ளவும், தந்தையாகிய கடவுளை உணர்ந்துகொள்ளவும் அனைவரையும்  அழைக்கிறார். குறிப்பாக, அனுதின  சுமைகளால் களைத்துப்போய் பாரம் சுமப்பவர்கள் அனைவரும் தம்மிடம் வருமாறு அழைக்கிறார். அவர் அவர்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பதாக வாக்களிக்கிறார்.
இயேசு கனிவும் மனத்தாழ்மையும் கொண்டவர். எனவே, அவருடைய நுகத்தை ஏற்றுக்கொண்டு அவரிடமிருந்து கற்றுக்கொண்டால், நம் உள்ளத்திற்கு அமைதியும் இளைப்பாறுதலும் கிடைக்கும் என்பதை உறுதிபட கூறுகிறார்.


சிந்தனைக்கு.

நாம் இன்று இறந்த நம்பிக்கையாளர் அனைவர்-விழாவைக் கொண்டாடுகிறோம். வழக்கமாக இந்நாளில், நம்மைவிட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து இறந்த நம்பிக்கையாளர்களை அன்புடன் நினைவுகூர்ந்து அவர்களுக்குத் திருப்பலி ஒப்புக்கொடுத்து  சிறப்பாக இறைவேண்டல் செய்வது மரபு.  மேலும்,  நம் குடும்பங்களில் மரித்தவர்களின் கல்லறைக்குச் சென்று கல்லறைகளைச் சுத்தம் செய்து, மரித்தோருக்கு அவர்களின் தியாகத்திற்கு நன்றியும் மரியாதையும் செலுத்துவோம். இந்த கல்லறை திருநாளில், முக்கியமாக, இந்த உலக வாழ்க்கை தற்காலிகமானது என்பதை உணர்ந்து, அன்புடனும் மன்னிப்புடனும் இறைநம்பிக்கையுடனும் வாழக் கற்றுக்கொள்கிறோம்.


தொடர்ந்து, மரித்தவர்களின் பல ஆன்மாக்கள் இன்னும் தூய்மை நிலைஅடையாமல் துன்புறுவதுன்டு. (உத்தரிக்கிற ஸ்தலம்) எனவேதான் இந்நிலையில் உள்ளவர்களை ‘பாடுபடும் திருஅவையினர்’ என்று அழைக்கிறோம்.  நேற்று நாம் அனைத்து புனிதர் பெருவிழாவைக் கொண்டாடினோம். இவர்களின் ஆன்மாக்கள் கடவுளால் மீட்கப்பட்ட ஆன்மாக்கள். இவர்களை ‘மாட்சி பெற்ற திருஅவை’ என்கிறோம். நாமோ, விண்ணக வாழ்வை நோக்கி பயணிக்கும் திருஅவையாக உள்ளோம். இந்த மூன்றும் ஒரே திருஅவையாக விளங்குவதால் நாம் ஒருவர் ஒருவருக்காக மன்றாட வேண்டும்.


நாம் ஏன் இறந்தொருக்காக இறைவேண்டல் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். இறைவனை நேர் 
முகமாகக் கண்டு, அவரது விண்ணக மாட்சியில் (நிலைவாழ்வில் ) பங்கேற்க வேண்டுமெனில், பாவங்கள் அனைத்திலிருந்தும், பாவத்தின் மீதுள்ள பற்றுதல்கள் அனைத்திலிருந்தும், மிகச்சிறிய குறைபாடுகளிலிருந்தும் முழுமையாக அதாவது, 100%  தூய்மைப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், தூய்மையற்ற எதுவும் இறைவனின் உறைவ அடத்தில் நுழைய முடியாது. எனவே, இறந்தோரின் ஆன்மா விரைவில் பாவ மன்னிப்புப் பெற்று விண்ணக வாழ்வில் பங்கொள்ள கடவுளின் இரக்கம் தேவை. 


இறைவனின் இரக்கம் உயிரோடு இருப்பவர்களுக்காக மட்டுமல்லாது,  இறந்தவர்களுக்கும் இன்றியமையாதது. எனவே, நமது இறைவேண்டல் தொடர வேண்டும். நாளை நமது ஆன்மாவின் அமைதிக்காக பிறர் இறைவேண்டல் செய்வர்.


அடுத்து, கல்லறைகளில் உணவு வகைகளைப் படைப்பது முற்றிலும் ஆகாது. கிறிஸ்தவ (கத்தோலிக்கத் திருஅவையின்) நம்பிக்கையின்படி, இறந்தவர்கள் உணவையோ பானத்தையோ உட்கொள்வதில்லை. அவர்களுடைய ஆன்மாக்களுக்கு உணவு அல்லது பானம் தேவையில்லை. இது ஒருவேளை பிற சமயத்தவர் நம்பிக்கையாக இருக்கலாம். இது ஒரு மூடநம்பிக்கை.


புலம்பல் நூலின் ஆசிரியர் துன்பத்தின் மத்தியிலும் இறைவனின் இரக்கத்தை நினைவுகூருகிறார். அதேபோல் இயேசு, சுமைகளால் சோர்ந்திருக்கும் நம்மைத் தம்மிடம் வருமாறு அழைக்கிறார். எனவே, துன்பம் நம்முடைய இறுதி முடிவு அல்ல; இறைவனின் இரக்கமும் இயேசுவின் அன்பும் நமக்குப் புதிய நம்பிக்கையையும் இளைப்பாறுதலையும் அளிக்கின்றன என்பதை நினைவில் கொள்வோம்.

இறைவேண்டல். 


அன்பான ஆண்டவரே, துன்பத்தின் மத்தியிலும் ஒவ்வொரு நாளும் உமது இரக்கத்தை உணரவும், பொறுமையுடன் எமது மீட்புக்காகக்  காத்திருக்கவும் எனது நம்பிக்கையைத் திடப்படுத்துவீராக. ஆமென்.”

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image