ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 18 ஆம் வாரம் – வியாழன்
ஆண்டவரின் தோற்றமாற்றம்-விழா
தானியேல் 7: 9-10, 13-14
மத்தேயு 17: 1-9

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் தானியேல் கண்ட காட்சியில்,
"தொண்மை வாய்ந்தவர் (இறைவன்) மாட்சியோடும் நீதியோடும்
அரியணையில் அமர்ந்திருந்தார் என்றும், அவருடைய அரியணை
நெருப்பைப் போல ஒளிவீசியது எஃறும், எண்ணிலடங்கா வானதூதர்கள்
அவருக்கு முன்பாக நின்றிருந்தனர் என்றும் தானியேல் விவரிக்கிறார்.

அத்துடன், நீதித்தீர்ப்புக்காக நீதிமன்றம் கூடுகிறது; புத்தகங்கள்
திறக்கப்படுகின்றன. இது இறைவன் அனைத்தையும் அறிந்து நீதியுடன்
தீர்ப்பளிப்பவராக இருப்பதை அவர் காணகிறார். தொடர்ந்து,
"மனுமகனைப் போன்ற ஒருவர்" வானத்தின் மேகங்களோடு வந்து,
முன்னிலையில் நிறுத்தப்படுகிறார். அவருக்கு ஆட்சி, மாட்சி, அரசாட்சி
ஆகியவை வழங்கப்படுகின்றன. உலகின் எல்லா மக்களும், இனத்தாரும்,
மொழியினரும் அவருக்கு பணிவிடை செய்கிறார்கள். அவருடைய ஆட்சி
என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது அரசாட்சி ஒருபோதும் அழியாது
என்ற செய்தி இன்று வழங்கப்படுகிறது.

நற்செய்தி.

இயேசு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களை உயர்ந்த
ஒரு மலைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அவர்கள்முன் இயேசுவின்
தோற்றம் உருமாறுகிறது. அவரது முகம் சூரியனைப் போல ஒளிவீசுகிறது;
அவரது ஆடைகள் ஒளியைப் போல வெண்மையாக மாறுகின்றன.
அப்போது மோசேயும் எலியாவும் தோன்றி இயேசுவோடு
உரையாடுகின்றனர்.
இந்தக் காட்சியால் மகிழ்ந்த பேதுரு, அங்கே மூன்று கூடாரங்களை
அமைக்க விரும்புகிறார். ஆனால் ஒரு ஒளிமிகு மேகம் அவர்களைச்
சூழ்கிறது. அந்த மேகத்திலிருந்து, "இவர் என் அன்பு மகன்; இவரில் நான்
மகிழ்ச்சி அடைகிறேன்; இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற தந்தையாம்
இறைவனின் குரல் கேட்கிறது.

இக்குரலைக் கேட்ட சீடர்கள் அச்சமடைந்து தரையில் விழுகின்றனர்.
இயேசு அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள்; அஞ்சாதீர்கள்" என்று
ஆறுதல் கூறுகிறார். அவர்கள் கண்களை உயர்த்திப் பார்த்தபோது,
இயேசுவைத் தவிர வேறு யாரையும் காணவில்லை. மலை இறங்கி
வரும்போது, மானிடமகன் உயிர்த்தெழும் வரை அக்காட்சியை
யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடர்களுக்குக்
கட்டளையிடுகிறார்.

சிந்தனைக்க
இன்று ஆண்டவரின் தோற்றமாற்றம்-விழாவ நாம் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் தோற்றமாற்றத்தைப் பற்றி
வாசித்தோம். அஃது ஓரு நிகழ்வு. அது இயேசுவின் வாழ்க்கையில் ஒரு
அதிசய நிகழ்வு மட்டுமல்ல; சீடர்களின் மற்றும் நமது நம்பிக்கையை
உறுதிப்படுத்திய, உறுதிப்படுத்தும் இறை வெளிப்பாடாகவும் உள்ளது.

சிலுவையின் துன்பத்திற்கு முன்பாக, இயேசு தமது இறை மாட்சியை
மூன்று சீடர்களுக்குக் காட்டுகிறார். இது, "துன்பத்திற்குப் பின் மாட்சி
உண்டு" என்ற இறைவனின் உறுதிமொழியாக உள்ளது.

முதல் வாசகத்தில் தானியேலுக்கு இறைவன் ஓர் அற்புதமான காட்சியை
வெளிப்படுத்துகிறார். "மானிட மகனைப் போன்ற ஒருவர்"
மேகங்களோடு வந்து, எல்லா மக்களையும் ஆளும் முடிவில்லா
ஆட்சியைப் பெறுகிறார். இது மெசியாவாகிய இயேசு கிறிஸ்துவைப்
பற்றிய இறைவாக்கு. இந்த இறைவாக்கு இன்று நற்செய்தியில்
இயேசுவின் தோற்றமாற்றத்தில் நிறைவேறுகிறது. மலையில் ஒளிமயமாக
நின்றவர் சாதாரண மனிதர் அல்ல; அவர் உலகின் மீட்பரும் நிலையான
அரசரும் ஆவார்.
நற்செய்தியில், மோசேயும் எலியாவும் இயேசுவுடன் உரையாடினர். இது
சட்டமும் இறைவாக்கினரும் இயேசுவில் நிறைவேறுகின்றன என்பதை
எடுத்துக்காட்டுகிறது.
அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது:
"இவர் என் அன்பார்ந்த மகன்; இவரில் நான் பூரிப்படைகிறேன்;
இவருக்குச் செவிசாயுங்கள்."
இந்த வார்த்தைகளே இன்றைய விழாவின் மையச் செய்தியாக நாம
ஃகொள்ளலாம். இறைவன் நம்மை இயேசுவைப் பார்ப்பதற்கும்,
அவருக்குச் செவிமடுக்கவும், அவரைப் பின்பற்றவும் அழைக்கிறார்.
இன்றைய உலகில் நம்மைச் சுற்றி பல குரல்கள் நம்மை ஈர்க்கின்றன.
செல்வம், பதவி, புகழ், தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் ஆகியவை நம்
கவனத்தைத் திருப்புகின்றன. ஆனால் இறைனோ நம்மைத் தட்டி
எழுப்பி, "இவருக்குச் செவிசாயுங்கள் " என்கிறார்.

பேதுரு, "இங்கேயே மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார். அந்த
ஆனந்த அனுபவத்தில் நிரந்தரமாக இருக்க விரும்பினார். ஆனால் இயேசு
அவர்களை மலையிலிருந்து கீழே அழைத்துச் சென்றார்.

நம்மிலும் இறைவேண்டலில், திருப்பலியில், மறையுரையில், குடும்ப
இறைவேண்ட்லில், அமைதியான தருணங்களில் இறைவனின்
உடனிருப்பை உணர்கிறோம். ஆனால் அந்த அனுபவம் நம்மை மாற்ற
நாம் இடம் தருவதில்லை. பாறை மீதும், முட்செடிகள் மத்தியில் விழுந்த
விதைகள் ஆகிறோம். நமது முகத்தில் அன்பு ஒளிர வேண்டும்; நமது

வார்த்தைகளில் கருணை ஒலிக்க வேண்டும்; நமது செயல்களில்
கிறிஸ்துவின் ஒளி பிரதிபலிக்க வேண்டும். இல்லையேல், நமது பக்தி
முயற்சிகள் இனைத்தும் வீண்.

பவுல் அடிகள் கூறுவது போல, "ஆண்டவரின் மகிமையை நோக்கிப்
பார்க்கும் நாம், அதே சாயலாக மாற்றப்படுகிறோம்." தோற்றமாற்றம்
மாற்றம் இயேசுவுக்கே மட்டுமல்ல; அவரை நம்பும் ஒவ்வொரு
கிறிஸ்தவரின் வாழ்விலும் நிகழ வேண்டிய ஆன்மிக மாற்றமாகும்.

இறைவேண்டல்.

கடவுளின் அன்பார்ந்த மைந்தரே, ஒவ்வொரு நாளும் உம்மைப் போல்
அன்பு செய்யவும், மன்னிக்கவும், பணிவுடன் சேவை செய்யவும் என்னை
மாற்றும். என் வாழ்வே உமது மாட்சியை வெளிப்படுத்தும் சாட்சியாக
அமைய அருள்புரிவீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452

Tamil Survey Popup Image