கடமைக்கு நோன்பு கடவுளுக்கு ஆகாது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

5 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 13 ஆம் வாரம் – சனி
தொடக்க நூல்  27: 1-5, 15-29
மத்தேயு  9: 14-17

 
கடமைக்கு நோன்பு கடவுளுக்கு ஆகாது! 
 
முதல் வாசகம்.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு முதல் வாசகம் சற்று விசித்திரமாகத் தெரிகிறது. ஈசாக்கின் இரட்டை மகன்களில் இளையவரான யாக்கோபு , தனது வயதான, பார்வையற்ற, இறக்கும் தருவாயில் இருக்கும் தந்தையிடமிருந்து வழிமரபு ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக பொய் சொல்லி ஏமாற்றுகிறார். யாக்கோபு தனது தாயார் ரெபேக்காவின் தூண்டுதலின் பேரில் அவ்வாறு செய்ய வழிநடத்தப்படுகிறார்.

ஈசாக்கு தனக்குப் பிடித்த தன் மூத்த மகனைக் கூப்பிட்டு உணவுப் பதார்த்தங்களைக் கொண்டு வரச் சொன்னதைப் பார்க்கும் ரெபேக்கா, தான் மிகவும் நேசித்த தன்னுடைய இளைய மகன் யாக்கோபை அழைத்து, அவனிடம் உணவுப் பதார்த்தங்களைக் கொடுத்து, ஈசாக்கிடமிருந்து திருட்டுத்தனமாக ஆசியைப் பெற வைக்கின்றார்.

நற்செய்தி.

யோவான் சீடர்கள் இயேசுவிடம், உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை என்று கேட்டதும், இயேசு அவர்களிடம், “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவீட்டார் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும் அப்பொழுது அவர்களும் நோன்பிருப்பார்கள்” என்கின்றார்.
 பழைய மற்றும்  புதிய கட்டமைப்புகள்:
துணி மற்றும் மதுத் தோல்களின் ஒப்புமைகள் வழியாக  இயேசு தீவிரமாக புதிய ஒன்றை அறிமுகப்படுத்துகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.  அவரது போதனைக்கும் நற்செய்திக்கும் புதிய தோற்றத்தை மற்றும் வெளிப்படைத்தன்மையைத் தருகிறார்.    

சிந்தனைக்கு.

இயேசுவின் சீடர்கள் நோன்ப் இருக்காகததை அறிந்து,  திருமுழுக்கு யோவானின் சீடர்கள் அவர்கள் மீது கோபப்படுகிறார்கள். வாரத்திற்கு இரண்டு முறை நோன்பு நோற்பது  யூத பழக்கத்தின் ஒரு பகுதியாகும். எடுத்துக்காட்டாக, எசா 58:3-7. ஆனால் கிறிஸ்து வித்தியாசமான ஒன்றைக் கடைப்பிடிக்கிறார்.

இதனால், யோவானின் சீடர்கள் தங்களைக் கிறிஸ்துவையும் அவருடைய சீடர்களையும் விட சிறந்தவர்களாக நினைத்துக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குப் பதிலளிக்கும் இயேசு, நோன்பு நோற்பது கூடாது என்று நோன்பை மறுக்கவில்லை. மாறாக, அவர்களுடைய கேள்வியைத் திருப்திப்படுத்த, இயேசு நோன்புக்கும் விருந்துக்கும் ஏற்ற நேரங்கள், காலங்கள் உள்ளன  என எளிய விளக்கத்தைக் கொடுக்கிறார்.

ஆம், யேசுவின் விளக்கத்தை ஆழ்ந்து ஆராய்ந்தால், நாம் நோன்பு நோற்கும்போது இயேசுவே நம் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும் என்பது புலனாகிறது. நற்செய்திக்காக, பிறர் நலனுக்காக எதையெல்லாம் நாம் தியாகம் செய்கிறோமோ, அவையே நமக்கான சிறந்த நோன்பு.  மனிதநேயத்தை மறந்து மணிக்கணக்காக, நாள்கணக்க்காக நோன்பு  இருத்தலால் பலன் இல்லை என்பது இயேசுவின் புதிய (தோல் பை) போதனையாக தரப்படுகிறது.

இயேசுவின் சீடர்களாக, தூய ஆவியால் வழிநடத்தப்படும் நாம், பழைய சட்டங்களுக்குள்ளும் சடங்குகளுக்கும் அடிமைகள் அல்ல. ஏன்? எதற்கு? என்று அறிந்துணராமலேயே சில சடங்குகளைச் செய்துகொண்டுதான் உள்ளோம்.   கிறிஸ்தவம் என்றும் புதியது. அதற்கு முதுமை பழமை என்பது இல்லை. காலத்தின் சுழற்சிக்கு எற்ப என்றும் தன்னை புதுப்பித்துக்கொண்டு மக்களை புதிய வானகம், புதிய வையகம், புதிய எருசலேம் நோக்கி அழைத்துச் செல்வது கிறிஸ்தவம். ‘இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (திவெ 21:5) என்ற இயேசு, பழையனவற்றை அவ்வப்போது புதுபித்துக்கொண்டுதான் உள்ளார். 

எனவே. இயேசுவின் சீடர்களாகிய நமக்கு முற்போக்கு சிந்தனை இன்றியமையாதது என்பதை மனதில் கொண்டு செயலாற்றுவோம். 


இறைவேண்டல்.
நோன்பு என்பது கடமைக்கு அல்ல என்பதை உணர்த்திய ஆண்டவரே, நீர் காண்பிக்கும் புதிய வழிமுறைகளில் எம் நம்பிக்கை பயணம் அமைய அருள்புரிவீராக. ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452