சிலுவையில் பலியான இயேசுவே நம்மில் பலன் தரும் வார்த்தை!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 3ஆம் வாரம் – புதன்

எபிரேயர் 10: 11-18
மாற்கு 4: 1-20
 

சிலுவையில் பலியான இயேசுவே நம்மில் பலன் தரும் வார்த்தை!
 

முதல் வாசகம்.

 எபிரேயருக்கு எழுதிய இக்கடிதத்தில் யூத குருக்கள்  திரும்பத் திரும்ப செலுத்தும் பலிகளானது மனுக்குலத்தின்  பாவங்களைப் போக்கும் ஆற்றல்  அற்றவை என்கிறார் ஆசிரியர். ஏனெனில், அவை மனந்திரும்புதலின் அவசியத்தையும் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் வலியுறுத்தவில்லை.   

காலம் நிறைவுற்ற போது, இயேசு தம் இரத்தம் சிந்தி சிலுவையில் அனைவருக்குமான  ஒரே பலியாக தம் உயிரை அளித்ததே என்றுமுள உன்னத  பலி என்று வலியுறுத்துகிறார். 
தொடர்ந்து, தம் உயிரை ஒரே பலியாகக் கையளித்த ஆண்டவர் இயேசு, இப்போது மாட்சிக்குரியவராக கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார் என்றும்,  அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார் என்றும், கடவுளின் ஆட்சியின் நிறைவில் அவர் மீண்டும் வரும் வரை அவர் அங்கு ஆட்சி செய்வார் என்றும் ஆசிரியர் விவரிக்கிறார். 

நிறைவாக, “என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்” என்று தூய ஆவியார் சான்று பகர்வதைக் குறித்தும் நாம்  வாசிக்கின்றோம். 


நற்செய்தி.


மாற்குவின் நற்செய்தியில், கலிலேயா கடலின் கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு இயேசு மறையுரை ஆற்றுகிறார்.  இன்றயை அவரது மறையுரை நமக்கு நன்கு அறிமுகமான ‘விதை விதைப்பவர் உவமையை மையமாகக் கொண்டது. 

இந்த உவமையில்  இயேசு பயன்படுத்துகின்ற ஒவ்வொன்றும் கொண்டிருக்கும்  பொருளை அறிந்துணர இயேசு அழைக்கிறார். 

1. விதை இறைவார்த்தை (லூக் 8:11), 
2. விதைப்பவர் இறையடியார் (1 கொரி 3: 5-9), 
3. நான்கு விதமான நிலங்கள் -மனிதருடைய உள்ளங்கள். 

இப்படி நமது உள்ளம் என்னும் நிலத்தில் விதைக்கப்படும் இறைவார்த்தைக்கு நாம் எப்படி செவிமடுக்கின்றோம் என்பதும் அதன் விளைவும்  இந்த உவமையின் சாராம்சமாக உள்ளது.


சிந்தனைக்கு.

 
இயேசுவின் இந்த அற்புதமான உவமை கேட்பதற்கு எளிமையாக  இருந்தாலும் அதன் உண்மை பொருளை புரிந்துகொள்வது சற்று கடினம். அன்று அவரது சீடர்களுக்கும் உவமையின் பொருள் புரியவில்லை. அவர்கள் நேரடியாகவே, இயேசுவிடம் கேட்டறிந்தனர். 

உண்மையில், இன்றைய விளக்கம் மகிவும் எளிதானது ஏனெனில் – இயேசுவே அவர் பயன்படுத்திய ‘விதைகள்’ பற்றிய உவமைக்குத் தெளிவான விளக்கத்தைத் தந்துள்ளார்.    

நம்மில், அதிகமானோர் ஆலயத்திற்குச் செல்கிறோம்.  ஆனால் எத்தனை பேர் கிறிஸ்துவின் அழைப்புக்கேற்றவாறு,  கடவுளுடைய வார்த்தையின்படி செயல்படுகிறோம்?  பெரும்பாலோரின் வாழ்வு  முதல் மூன்று நிலங்களில் விழுந்த விதை போன்றது.  நாம் ஆயத்தில் இறைவார்த்தையைக் கேட்கிறோம்,  ஆனால்   வெளியேறியவுடன், வார்த்தைகள் நினைவில் இருப்பதில்லை. நாம் அன்றாட வாழ்க்கையில் மிகவும்  பிசி (busy) ஆகி அனைத்தையும் விட்டுவிடுகிறோம்.  

இயேசு அன்று சீடர்ளில் விதைத்த விதை வளர ஆரம்பித்தது, அதன் விளைவாக, மண்ணகத்தில்  கடவுளின் ஆட்சி 30 அல்லது 60 அல்லது 100 முறை மட்டுமல்ல, இன்னும் அதிகமாக பரவியது. 

இக்காலத்தில்,  நாள்தோறும் அல்லது வாரந்தோறும் இறைவார்த்தை நம்மில் விதைக்கப்பட்டாலும்,  நாம் சில சமயங்களில் முழுமையாக பலன் தர தவறுகிறோம்?  கடவுள் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு நம்மால் கனிதர இயலவில்லை.

என் வாழ்வில்  நான் பல்வேறு பணிக்குழுவில் இருந்துள்ளேன்,   நான் திருவிவிலியத்தை  மீண்டும் மீண்டும் இன்றுவரை வாசித்து வருகிறேன்.  ஆயினும்கூட, நான்  தொடர்ந்து பயணிக்கும் போது, கடவுளின் செய்தி எனக்கு  புதிய புதிய மற்றும் ஆற்றல் மிகு அனுபவங்களைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது.   கடவுளின் வார்த்தை உயிருள்ளது என்பதை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். 

கடவுளுடைய வார்த்தையைக் கேட்பது மட்டும் போதாது, அதை நாம் வாழ வேண்டும். குறிப்பாக ஆலயத்தில்   நாம் கேட்கும் வார்த்தைகளும் மறையுரை  விளக்கமும் ஆலயத்தின்  நான்கு  சுவர்களுக்கு உள்ளேயே  வாடிப்போய் இறக்க அனுமதிக்க முடியாது. 

நாம் கடவுளின் வார்த்தையைக் கேட்க வேண்டும்,  அன்னை மரியைப்போல் உள்ளத்தில் நிறுத்தி  சிந்திக்க வேண்டும், அதைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும்.  கடவுளுடைய வார்த்தை வேரூன்றி செழித்து வளரக்கூடிய வளமான மண்ணாக நாம் இருக்க வேண்டும்.  உண்மையில்  கடவுளுடைய வார்த்தையை நம்பி வாழ்வது கடினம், ஆனால் அதன் அறுவடை ஆச்சரியமாக இருக்கும். அது பலன் தராமல் நம்மை விட்டு அகலாது. 

இயேசு மனுவான வார்த்தை. அந்த வார்த்தைதான் உலக மீட்புக்காக ஒரே ஒருமுறை சிலுவையில் பலியானது. நமக்காக பலியான வார்த்தை நம்மில் பல மடங்கு பலன் தரும் என்பதை நம்பி செயல்படுவோம். மனுவான வார்த்தை இப்போது   மாட்சிக்குரியவராக கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார் என்றும் முதல் வாசகம்  கூறியது. ‘வலது பக்கம்’ என்பது ஒருவர் கொண்டிருக்கும் வல்லமையை உணர்ந்தும் சொற்றொடராகும். ஆம், வார்த்தைதான் இப்போது வல்லமையோடு விண்ணகத்தில் வீற்றிருக்கிறது. அந்த வார்த்தையின் வல்லமையில் வேரூன்றி வாழ்வோம், 


இறைவேண்டல். 


ஆண்டவராகிய இயேசுவே, நீர் உமது உயிருள்ள வார்த்தை என்னில் பன்மடங்கு பலன்தர என்னை ஏற்ற நிலமாக மாற்றுவீராக. ஆமென்

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452