அன்பு செயலாக மாறட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

30 அக்டோபர் 2026

பிலிப்பியர்  1: 1-11
லூக்கா 14: 1-6
 

அன்பு செயலாக மாறட்டும்!

முதல் வாசகம்.


புனித பவுல் அடிகள் பிலிப்பி நகரிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதிய இந்தப் பகுதியில், அவர்கள்மீது கொண்ட அன்பையும், அவர்களுக்காகச் செலுத்தும் நன்றியையும், அவர்களின் நம்பிக்கை வளர்ச்சிக்காகச் செய்யும் இறைவேண்டலையும் பற்றி  விவிரிக்கிறார்.


தொடக்கமாக,  பவுலும் தீமொத்தேயுவும் பிலிப்பி திருஅவையினருக்கு, கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளையும் அமைதியையும் பகிர்ந்து,  நற்செய்திப் பணியில் அவர்கள் காட்டிய ஒத்துழைப்புக்கு  பவுல் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்.


உண்மையில், பிலிப்பிய மக்கள் பவுலின் நற்செய்திப் பணியில் அவருடன் பங்குகொள்வதால், அவர் அவர்கள்மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருக்கிறார். அவர்களுடைய அன்பு மேலும் பெருகவும், நல்லது எது என்பதை அறிந்து தேர்ந்தெடுக்கவும், தூய்மையான வாழ்வு வாழவும், கடவுளுக்கு மகிமையையும் புகழையும் அளிக்கும் நற்செயல்களால் நிறைந்திருக்கவும் பவுல் கடவுளிடம்  மன்றாடுகிறார்.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில், ஓய்வுநாளில் இயேசு ஒரு நோயுற்ற மனிதரைக் குணப்படுத்துகிறார். அப்போது அங்கிருந்த பரிசேயர்கள் இயேசுவைக் குற்றம் சாட்டுவதற்காகக் காத்திருந்தார்கள். ஆனால் இயேசு அவர்களிடம், ஓய்வுநாளில் ஒருவரைக் குணப்படுத்துவது சரியா, தவறா என்று கேட்கிறார். அவர்கள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். இயேசுவோ அந்த மனிதரைக் குணப்படுத்துகிறார். கடவுளை அன்பு செய்வதும், நம்மோடு வாழும் மனிதர்களை அன்பு செய்வதும் பிரிக்க முடியாதவை என்பதை இயேசு இங்கே உணர்த்துகிறார்.


சிந்தனைக்கு.

நற்செய்தியை வாசிக்கையில் ஒரு விடயம் தெளிவாகிறது. இயேசுவின் பார்வை மனிதரை மையமாகக் கொண்ட பார்வை. அவருடைய இதயம் இரக்கத்தால் நிறைந்த இதயம். நாமும் அதே பார்வையையும் இதயத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும்.


ஆம், சட்டங்களையும் சடங்குகளையும் விட மனிதர்மீது காட்டும் அன்பும் இரக்கமும் முக்கியமானவை. சில நேரங்களில் நாம் விதிமுறைகளையும், வெளிப்புறச் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும்  கடைப்பிடிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் துன்பங்களைக் கவனிக்க மறந்துவிடுகிறோம். சில நேரங்களில் நாம் நமது ஆற்றலுக்கு மீறிய பெரிய செயல்களைச் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் ஒரு கனிவான சொல், ஒரு புன்னகை, காது கொடுத்து கேட்டல், மன்னிப்பு ஆகியவை இன்னொருவரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.  ‘கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர்’ (1 யோவான் 4:20) என நமக்கு கூறப்பட்டுள்ளது.


புனித பவுல் கூறுவதுபோல, நமது சகோதர அன்பு நாளுக்கு நாள் வளர வேண்டும். இயேசுவைப் போல நாமும் பிறருடைய துன்பங்களைக் கண்டு இரக்கம் கொள்ள வேண்டும். பிறருக்கு உதவுவதற்கான வாய்ப்புகளைத் தேட வேண்டும். ஏனெனில் கடவுளை அன்பு செய்வதன் உண்மையான அடையாளம், நமது சகோதர சகோதரிகளிடம் அன்பு காட்டுவதில்தான் வெளிப்படுகிறது. இவற்றில் ஒன்றை தவிர்த்து மற்றொன்றை பெற முடியாது. 


நிறைவாக, அடுத்திருப்பவரை அன்பு செய்வது என்பது அவருடைய தவறுகளை எல்லாம் பொறுத்துக்கொள்வது என்று பொருளல்ல. தவறைத் தவறு என்று உணர்த்தினாலும், அந்த நபரின் மாண்பை மதித்து, அவர் நல்வழிக்குத் திரும்ப உதவுவதே உண்மையான சீடத்துவ அன்பு என்பதை மனதில் கொள்வோம்.


கடவுளிடமிருந்து எவ்வளவுதான் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டாலும், கொடுக்கும் மனப்பான்மை நமக்குள் இல்லாமற்போகுமானால், அதற்கு நமக்குள் இருக்கும் உலக ஆசைகளும், பேராசைகளுமே காரணம் எனலாம். இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கவேண்டும் என்றார் ஆண்டவர். நம்மில், அநேக அங்கிகளை வைத்துக்கொண்டும் ஒன்றைக்கூட பகிர மனமில்லாத பலர் நம்மிடையே உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. 

இறைவேண்டல்.


அன்பின் ஆண்டவரே, இயேசுவே,   பிறருடைய துன்பங்களை உணர்ந்து, உம்மைப் போல அவர்களுக்கு உதவுகின்ற மனதை எனக்கு அருள்வீராக. ஆமென்.

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image