சவால்களை வெல்லும் சாட்சிய வாழ்வு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
29 அக்டோபர் 2026
எபேசியர் 6: 10-20
லூக்கா 13: 31-35
சவால்களை வெல்லும் சாட்சிய வாழ்வு!
முதல் வாசகம்.
இயேசுவில் நம்பிக்கை கொள்ளுதல் குறித்து வலியிறுத்தி வரும் பவுல் அடிகள் இன்றைய முதல் வாசகத்தில், கிறிஸ்தவர்கள் கடவுளின் வல்லமையில் திடம்பெற வேண்டும் என்றும், அநீதியை, தீமையை எதிர்த்து நிற்க கடவுள் கொடுக்கும் ஆவிக்குரிய எல்லாப் படைக்கலன்களையும் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
தொடர்ந்து, நம்முடைய போராட்டம் மனிதர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, மாறாக பொய், பித்தலாட்டம் இவற்றுக்குப் பேர்போன அலகையின் செயல்களுக்கும் எதிரானது என்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு, எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு இறைவேண்டுதல் செய்ய அழைப்புவிடுக்கிறார் பவுல்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், ஏரோது இயேசுவைக் கொல்ல விரும்புவதாகவும், தப்பித்துக்கொள்ள அங்கிருந்து போய்விடுமாறும் சில பரிசேயர்கள் இயேசுவிடம் தெரிவிக்கிறார்கள். அதற்கு இயேசு, தாம் செய்ய வேண்டிய பணியைத் தொடர்ந்து செய்து, தமது ஊழியத்தை நிறைவேற்றுவதாக உறுதியாகக் கூறுகிறார்.
ஆபத்துகள் இருந்தபோதிலும், இயேசு தமது பணியிலிருந்து பின்வாங்கவில்லை. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். எருசலேம் மக்களையும் இறைவாக்கினர்களையும் நிராகரித்ததை இயேசு வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே சேர்த்துக்கொள்வதுபோல, தமது மக்களைப் பாதுகாக்கவும் அவர்களைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ளவும் அவர் விரும்பினார்.
மேலும், மக்கள் கடவுளின் அழைப்பை ஏற்க மறுத்ததால், அவர்களுக்குத் தண்டனை வரும் என்று இயேசு எச்சரிக்கிறார். அதே நேரத்தில், ஆண்டவர் திருப்பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அவர்கள் கூறும் நாளையும் அவர் சுட்டிக்காட்டியதை லூக்கா பதிவு செய்துள்ளார்.
சிந்தனைக்கு.
கண்முன் நிகழும் அநீதிக்கும் தீமைமைக்கும் எதிராகக் குரல் கொடுக்க வேண்டிவர்கள் இயேசுவின் சீடர்கள். இவ்வாறு அநீதிக்கும் தீமைக்கும் எதிராக எதிர்கொள்ளும் போராட்டங்களில் கடவுளின் வல்லமையை நம்பி, அவருடைய வார்த்தையில் நிலைத்து போராட வேண்டும். இதற்கு இறைவேண்டல் இன்றியமையாதது. எனவேதான், பவுல் அடிகள் அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்துகொள்ளுங்கள் என்றார். இந்த படைக்கலன்களில் மிக முக்கியமானது நம்பிக்கை எனும் கேடயம்.
‘ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்’ (திபா 16:8) என்ற திருப்பாடலின் வரிகள் தாவீது அரசருக்குச் சொந்தமானவை. எல்லா சூழலிலும் ஆண்டவரை நாம் நம்பி போராடினால் தோல்வி என்பது கிடையாது.
ஒரு கோழி தன் குஞ்சுகளை ஆபத்திலிருந்து பாதுகாப்பதுபோல, இயேசுவும் நீதிக்கான நம் போராட்டங்களில் நம்மை பாதுகாக்க விரும்புகிறார். ஆனால் அவரது வார்த்தையில் நம்பிக்கை வைத்து அவரைப் பின்பற்றுவது நமது பொறுப்பாகும். சில நேரங்களில் நாம் இறைவனின் வார்த்தையைக் கேட்கிறோம்; ஆனால் அதன்படி வாழத் தயங்குகிறோம். மன்னிக்க வேண்டும் என்று அறிந்திருந்தும் மன்னிப்பதில்லை; அன்பு காட்ட வேண்டும் என்று தெரிந்திருந்தும் பிறரைப் புறக்கணிக்கிறோம். இத்தகைய மனநிலையிலிருந்து நாம் மாற வேண்டும். நற்செய்தியில் சில பரிசேயர்கள் ஏரோதுக்குப் பலியாகாமல் இயேசுவை தப்பிக்க அறிவுறுத்தினார்கள். இயேசு ஏரோதுவுக்குப் பயந்து தொடைநடுங்கியாகப் புறங்காட்டி ஓடவில்லை.
‘அஞ்சி அஞ்சிச் சாவார்—இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே’
எனும் பாரதியாரின் வரிகள் நமக்கானது அல்ல. உண்மையாக அறத்துக்காகவோ, சமூக நீதிக்காகவோ குரல் கொடுப்பதில் நாம் முந்துதல் வேண்டும். அது ஒவ்வொரு கிறிஸ்தவரின் முதன்மையான ஆன்மீக மற்றும் சமூகக் கடமை என்பதை ஏற்க வேண்டும். ஏனெனில், தம் சீடர்கள் இந்த உலகில் பலவிதமான எதிர்ப்புகளையும், துன்பங்களையும், அநீதிகளையும் சந்திக்க நேரிடும் என்பது இயேசு அறியாத ஒன்றல்ல.
திருஅவையின் தொடக்கம் முதல் இன்று வரை எண்ணற்றோர் உண்மைக்கும் நேர்மைக்குமாக மறைசாட்சிகளாக உயிர் துறந்தனர் என்பது வரலாறு.
இயேசு 'அஞ்சாதீர்' என்று கூறியது வெறும் ஆறுதல் வார்த்தை அல்ல; மாறாக, நமது பயத்தை நீக்கி, நம்பிக்கையை வளர்த்து, எந்தச் சூழ்நிலையிலும் இறைவனின் அருள் நமக்குத் துணையாக இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைத் தருவதற்காகவே என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, ‘அஞ்சாதீர்’ எனும் உமது வார்த்தை என்றும் எப்போது என்னில் நிலைத்திருக்கவும் என்னை திடப்படுத்தவும் எனக்கு அருள்தாரும். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
