கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சி நம் பணியில் வெளிப்படும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

4 செப்டம்பர் 2024 
பொதுக்காலம் 22 ஆம் வாரம் –புதன்
1 கொரி  3: 1-9
லூக்கா 4:38-44


கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சி நம் பணியில் வெளிப்படும்!


முதல் வாசகம்.

புனித பவுல் கொரிந்திய இறைமக்கள்  தங்கள் நம்பிக்கை வாழ்வில் இன்னும் முதிர்ச்சி அடையாத நிலையில்  உள்ளார்கள் என்பதை  நினைவூட்டும் வகையில் திருமுகத்தைத்  தொடர்கிறார். கிறிஸ்துவோடுள்ள உறவில் அவர்கள் இன்னும் குழந்தைகள் என்றே எண்ணுகிறார்.

எனவே, அவர்கள் உடன் பிறந்தவர்களுடன் போட்டி போடுவதற்குப் பதிலாக, அவர்கள் கடவுளின் குடும்பத்தை (திருஅவையை) கட்டியெழுப்ப ஒன்றாக உழைக்க வேண்டும் என்கிறார். அவரது எண்ணப்படி, இறை ஊழியத்தில் யார் யார்   ஈடுபட்டுள்ளார் என்பது அல்ல, ஆனால் கடவுள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நன்மைக்காக அனைத்துப் பணியாளரகள் வழியாகவும் கடவுள் பணியாற்றுகிறார் என்பதை உணர்ந்து ஒற்றுமை காக்கவேண்டும் வேண்டும் என்கிறார்.

கிறிஸ்தவ மக்கள் தங்களுக்குள் பிளவுபட்டு, ‘‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’ என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது அவர்கள் உலகின்  போக்கில் வாழ்பவர்களாகவே உள்ளனர் என்பதைத் தெளிவுப்புத்துகிறார்.  நிறைவாக,  ‘நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. யாரும் நடலாம், யாரும் நீர் பாய்ச்சலாம். ஆனால், பயிருக்கு உயிர் கொடுக்கும் கடவுளே  இன்றியமையாதவர் என்கிறார்.
 
 
நற்செய்தி.


நற்செய்தியில், துன்பப்படுபவர்களிடம் இரக்கம் காட்டுவதன் மூலம் இயேசு தாம் அழைக்கப்பட்ட ஊழியத்திற்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறார்.  சைமன் பேதுரிவன் வீட்டில் இருக்கும்போது, அவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்துகிறார்.  பின்னர் அவர் உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்துகிறார்.  

 தொடர்ந்து, அவர் தனது தந்தையுடன்  நேரத்தை செலவிடுவதற்காக சிறிது நேரம் தனியாக செல்கிறார், “நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று கூறி,  பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.


சிந்தனைக்கு.


திமுமுழுக்கின் நிமித்தம் நமக்கு  ஓர் அழைப்பு உள்ளது. அது  கடவுளிடமிருந்து வரும் அழைப்பு.  நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் இடத்தில் ஆண்டவராகிய  இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.  நற்செய்தி அறிவிப்பது என்பது ஒரு கூட்டுப்பணி. இந்த சிந்தனையை முன்வைக்கவே, இங்கு அவருக்கும் அப்பல்லோவுக்கும் இடையே சண்டை இல்லை.  ‘நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார்’ என்று நற்செய்தி அறிவிப்புப் பணியில் கடவுளின் பங்கும் உள்ளதை இணைத்துக் கூறுகிறார் பவுல்.

இறைப்பணியில் நாம் அனைவரும் கடவுளின் கருவிகளே. நாம் போதிக்கிறோம். ஆனால், கேட்பவர் உள்ளத்தில் மனமாற்றத்தை கொணர்பவர் தூய ஆவியாரே என்பதை பவுல் கொரிந்தியருக்கு இங்கே புரிய வைக்கிறார்.   நற்செய்தியை அறிவிப்பதுவே நமது தலையாயப் பணி. நற்செயதி அறிவிப்பது பெரும்பாலும்  மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும்  உதவுவதிலும் அடங்கியுள்ளது.   இவை இரண்டும் இல்லாமல் நாம்மால் நற்செய்தி அறிவிப்புப்பணியில் ‘ஹீரோ’ ஆக முடியாது. 


இவ்வாசகத்தில், இயேசு பேதுருவின் மாமியாரின்  காய்ச்சலைக் குணப்படுத்துகிறார். உடனே அவர் எழுந்து, எல்லாருக்கும் பணிவிடை செய்யத் தொடங்கினார் என்று வாசிக்கிறோம்.  வழக்கமாக யாரிடமிருந்தாவது ஒரு நன்மையைப் பெற்றதும்  உடனே உதவியரையும் அவரது உதவியையும்  மறந்து வாழ்வோம். இதுதான் இன்றைய இயல்பு. ஆனால், பேதுருவின் மாமியார் நலமானதும் இயேசுவுக்கும், அவரோடு இருந்தவர்களுக்கும்  பணிவிடை செய்கிறார்.  இதன்வழி, நமது நன்றியுணர்வை சொல்லில் வெளிப்படுத்துவதைவிட செயலில் காட்டுவது மேலானது என்ற செய்தி நமக்கும் பகிரப்படுகிறது.

இயேசு அவரில் கொண்டவை அனைத்தும் தந்தை அவருக்கு அருளியவை. அவற்றை இயேசு மனுக்குலதோடு வஞ்சகமின்றி தம் உயிர் உட்பட அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். நாம் கணக்குப் பார்க்கிறோம். அதிலும், வேண்டியவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நாம் ஏழைகளுக்குக் கிள்ளிக் கொடுக்கவும்  தயங்குகிறோம். 

நிறைவாக, புனித பவுல் கூறுவதைப்போல் ‘நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை என்பதை நினைவில் கொள்வோம். எல்லாம் புகழும் கடவுளுக்கே என்று வாழ்வோரே தன்னலம் கருதா இறைப் பணியாளர்கள். நாமும் இப்பட்டியலில் இருப்பதே சிறப்பு.
  
  
இறைவைண்டல்.


சகோதர அன்பின் ஊற்றாகிய ஆண்டவரே, விளையச் செய்யும் உமக்குப் பெருமை சேர்க்கும் சீடராக வாழும் வரமருள உம்மை இறைஞ்சுகிறேன். ஆமென்

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452