நாம் தூய ஆவியார் குடிகொண்டிருக்கும் ஆலயம் என்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

3 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 22 ஆம் வாரம் – செவ்வாய்
1 கொரி 2: 10b-16
லூக்கா 4: 31-37
நாம் தூய ஆவியார் குடிகொண்டிருக்கும் ஆலயம் என்போம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், நம்மில் அனுதினமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மீகப் போர் நினைவுப்படுத்தப்படுகிறது. புனித பவுல், கடவுளின் ஆவியால் வழிநடத்தப்படுபவர்களைப் பற்றியும், அதற்கு நேர்மாறாக, உலகத்தின் ஆவியால் வழிநடத்தப்படுபவர்களைப் பற்றியும் பேசுகிறார்.
பவுல் அடிகளார், ஆன்மீக உலகில் இரண்டு பக்கங்களையும் வேறுபடுத்தி விவரிக்கிறார். நம்பிக்கையாளர்கள் மட்டில் தூய ஆவியாரின் உடனிருப்பை அவர் தெளிவாகக் காண்கிறார். கடவுளுடன் உறவில் இருப்பவர்களுக்கு கடவுளின் ஆவியானவர் உண்மையையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகிறார்.
கொரிந்து இறைமக்களைக் கடவுளுடன் இணைந்திருக்குமாறும், அவர்கள் கிறிஸ்து இயேசுவின் மனதைக் கொண்டிருப்பதை உணர வேண்டும் என்றும் பவுல் கேட்டுக்கொள்கிறார். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார்கள். அவர்கள் எப்பொழுதும் இயேசுவின் எண்ணம் மற்றும் அழைப்புக் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தூய ஆவியாரின் வழிகாட்டுதலைப் புறக்கணிக்காமல், அதனைப் பின்பற்ற முற்பட வேண்டும் என்றும் வலயுறுத்தி எழுதுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தனது பணியையும் ஊழியத்தையும் தொடரும்போது, அவர் மக்களுக்கு அதிகாரத்துடன் கற்பிப்பது மட்டுமல்லாமல், அவர் தனது ஆற்றலையும் அதிகாரத்தையும் கொண்டு தீய ஆவிகளை மக்களிடமிருந்து வெளியேற்றுகிறார்.
அப்போது, “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் அசுத்த ஆவி கத்தியது. இயேசு “வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்றதும் அசுத்த ஆவி அவனைவிட்டு ஓடியது. கூடியிருந்த மக்களோ, இயேசுவின் அவருடைய வார்த்தைகளையும் செயலையும் கண்டு வியப்படைந்தனர் என்றும் அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது என்றும் லூக்கா குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களிலும் தூய ஆவியார் பற்றிய படிப்பினை மையமாக உள்ளது. ஆவி என்பது நம்மால் பார்க்க முடியாத ஒன்று, ஆனால் அதன் விளைவை நாம் அனுபவிக்கக்கூடும். இவ்வுலகில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் எப்போதும் மோதல் இருந்துகொண்டுதான் இருக்கும். இத்த மொதல்களின் காரணமாக நாம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறோம் என்றால் மிகையாகாது. இவை இரண்டுக்கும் இடையில் நாம் எந்தப் பக்கம் உள்ளோம் என்பதே கேள்வியாக உள்ளது.
இதில் எழும் பிரச்சனை என்னவென்றால், இன்று பலர் ஆன்மீக உலகத்தைப் பற்றியும் தூய மற்றும் தீய ஆவிகளுக்கிடையில் நடக்கும் மோதல்கள் பற்றியும் அறியாமல், அறியாமையில் சிக்கிக் கொள்கிறார்கள். தூய ஆவியாரோ, நம்மில் கடவுளால் பொழியப்பட்டவர், நமது நன்மைக்காக அவர் நம்மை இயக்க முயல்கிறார். நாம் அவருக்குச் செவியாத்தால் அவரது கட்டுப்பாட்டில் இருந்து செயல்படுவோம். இல்லையேல் தவறிழைப்போம். ஏனென்றால், நாம் கடவுளின் ஆவியான தூய ஆவியாரைப்யைப் பற்றி சிந்திப்பதையோ அவருக்குச் செவிசாய்ப்பதையோ உலகத்தின் ஆவி விரும்புவதில்லை.
புனித பவுல் ‘உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?’ (1 கொரி 6:19) என்கிறார். ஆகவே, அகத்தூய்மையைக் காக்கவேண்டியது நமது பொறுப்பு என்பதை உணர்ந்திருத்தல் இன்றியமையாதது.
இயேசுவை முழுமையாக வரவேற்று, நமது உள்ளதில் அவரை குடிக்கொள்ளச் செய்யும் மக்களாக நம்மை இயக்கும் தூய ஆவியாருக்குச் செவிசாய்த்தல் நன்று. முதல் வாசகத்தில், கொரிந்து இறைமக்களை கடவுளுடன் இணைந்திருக்குமாறும், அவர்கள் கிறிஸ்து இயேசுவின் மனதைக் கொண்டிருப்பதை உணருமாறும் பவுல் கேட்டுக்கொள்கிறார். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். அதே அழைப்பை இன்று நமக்கும் விடுக்கிறார். நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப நம்மிடம் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் சகோதரர், சகோதரிகள் என்ற உணர்வோடு வாழ்வோம். தீய ஆவியின் செயல்பாட்டை வெல்லும் ஆற்றல் நமக்குண்டு.
‘ஆண்டவரின் ஆவி என்மேல் உளது' என ஒவ்வொருவரும் அறிக்கையிட்டால், உலகமும் நாமும் நேர்மையில் உண்மையில் வாழ்வுப் பெறுவோம்.
இறைவேண்டல்.
அசுத்த ஆவியை விரட்டியடித்த என் ஆண்டவரே. என்னில் மலிந்திருக்கும் அசுத்த ஆவியின் செயல்களிலிருந்து நான் விடுவிக்கப்படவும் தூய ஆவியாரால் வழிநடத்தப்படவும் உதவியருளும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
