ஆவியாரின் தூண்டுதலில் அகிலம் வெல்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

2 செப்டம்பர் 2024 
பொதுக்காலம் 22 ஆம் வாரம் -திங்கள்

1 கொரி  2: 1-5
லூக்கா 4: 16-30 
 

ஆவியாரின் தூண்டுதலில் அகிலம் வெல்வோம்!


முதல் வாசகம்.

 புனித பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதும் திருமுகத்தைத் தொடர்கிறார்.  மனித ஞானத்தின் முக்கியத்துவத்தை அல்ல, மாறாக கடவுளின் வல்லமையின் முக்கியத்துவத்தை பவுல் மீண்டும் வலியுறுத்துகிறார்.  மற்ற போலி போதகர்கள் போல பவுல் அடிகளால் மக்களைக் கவரும் வண்ணம் உரையாற்ற முடியவில்லை என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதோடு, மக்களுக்கு ஏற்ற வகையில் தனது போதனாமுறையை எளிமைப்படுத்த விரும்புவதாக எழுதுகிறார். 

பவுல் அடிகளைப் பொறுத்தமட்டில், கொரிந்தியரிடையே அவரது போதனையானது  மனித ஞானத்தாலோ  ஆற்றலாலோ  ஆனது அல்ல, மாறாக, அவரது போதனையானது கடவுளின் அருள் துணையால் ஆனதாகக்  கொரிந்தியருக்குத் தெரியப்படுத்துகிறார்.

எனவே ‘நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன் என்கிறார். அவருக்கு இயேசுவைப் பற்றியும் அவரது நற்செய்தியும் தெரியும். ஆனால், இயேசுவின் செய்தியை மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக விளக்கிக்கூறும் ஆற்றல் இல்லாதவராக அவர் இருந்திருக்கலாம். போலி போதகர்களின் போதனையால் கொரிந்தியர் வெகுவாகக் கவரப்பட்டார்கள் என்பதை உணர்ந்து இவ்வாறாக கொரிந்து கிறிஸ்தவச் சமூகத்திற்கு எடுத்துரைக்கிறார். 


நற்செய்தி.

 
இன்று முதல் வார நாள்களுக்கான நற்செய்திக்கு  மத்தேயுவின் நற்செய்தியிலிருந்து லூக்காவின் வாசகத்திற்கு மாறுகிறோம் 

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து, அங்கு  ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று மறைநூலை வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் அவரைக் குறித்து எசாயா இறைவாக்கினர் எழுதிய இறைவாக்குப் பகுதியை வாசிக்கலானார். 

அந்த நாசரேத்து மக்கள்  இயேசு செய்த அற்புதங்களையும் குணமளித்தலையும்  கேள்விப்பட்டிருக்கிறார்கள்.  ஆனால், இப்போது இயேசுவின் பின்னணியை அறிந்தவர்களாக,  அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். ஆனாலும் அவர்களது பாராட்டில் மயங்காதவராக, ‘நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை’ என்று கூறியபோது, தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

 
சிந்தனைக்கு.


இயேசுவை அறிந்தவர்கள், அவர் வளர்க்கப்பட்ட ஊரைச் சேர்ந்தவர்கள், இயேசுவிடம் இவ்வளவு கடுமையாக நடந்துகொண்டார்கள் என்பதை நம்புவது கடினமாக உள்ளது.  இயேசுவின் பணி தெளிவாக இருந்தது. அவர் இறைவாக்கினரின் போதனைகளை நிறைவேற்றும் வகையில், தந்தையிடமிருந்து அனுப்பப்பட்ட மேசியாவாக இருந்தார்.  அன்று அவர்களின் கண்கள்  இயேசுவின் மேல் பதிந்தன. அதன் விளைவாக,  அவரை ஊரை விட்டு விரட்டியடித்து, அவரைக் கொல்ல நகரத்திற்கு அருகிலுள்ள குன்றிலிருந்து தூக்கி எறிய முயற்சிக்கும் அளவிற்கு இயேசு நிராகரிக்கப்பட்டார்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்கள். இங்கே சொந்த ஊரானைக் கொல்ல நினைத்த மக்களை இயேசு சந்திக்கிறார். சொந்த மக்களும் தன்னை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்களே என்று இயேசு கலங்கிவிடவில்லை.   இயேசு தொடர்ந்து இறையாட்சிப் பணியைத் தொடர்ந்தார். 

‘எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா’ 

என்ற கவிஞர் மருதகாசி அவர்களின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. நாமும் பலவாறு  பங்கிலும் சமூகத்திலும் புறக்கணிக்கப்படலாம். வறுமையும் குறைவான கல்வியறிவும் முக்கிய காரணமாகலாம். இத்தகைய சூழ்நிலையில் நாம் மனம் தளர்ந்து போகாமல், முன்னேறிச் செல்லவேண்டும் என்பதற்கு இயேசுவே முன்னுதாரணமாக இருக்கின்றார்.  இயேசுவின் போதனையை ஏற்பவர்களும் மறுப்பவர்களும் என்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் பலர் நம்மைச் சுற்றிலும், நமது விசிப்பிடம் மற்றும் பணியிடங்கள் சுற்றிலும் இருக்கிறார். இச்சூழலை நற்செய்தியை அறிவிக்க ஒரு வாய்ப்பாக நாம் பார்க்க வேண்டும். நமது, நேர்மை, உண்டு, அக்கறை மற்றும் மனிதாபிமானம் அவர்களை ஈர்க்க வேண்டும். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதுபோல், ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் இயேசுவின் பணியை முடக்க யாராலும் முடியாது என்ற நம்பிக்கை முதலில் நமக்கு இருக்க வேண்டும்.

முதல் வாசகத்தில் புனித பவுல் அடிகள் துன்பங்களுக்கிடையில்  கிறிஸ்துவை அறிவிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். தன்னுடைய படிப்போ, தன்னைப் பற்றிய செய்திகளோ முன்னிலைப்படுத்தப்படக் கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருந்தார். இன்று நமக்கு அவரே சிறந்த முன்னோடி. அவரைப்போலவே, கடவுளின் ஆவி நம்மீதும் பொழியப்பட்டுள்ளார். இயேசுவைப் போல்  தொடர்ந்து நம் பணியை ஆற்றிட ஆவி நமக்கு வல்லமை அளிக்கிறார் என்ற உண்மையில் நம்பிக்கை வைத்து பணி வாழ்வைத் தொடர்வோம்.


இறைவேண்டல்.

அன்பு ஆண்டவரே, நீர் கொண்ட ஆவியாரின்   துணையோடு நானும் அனுதினமும் சாட்சிய வாழ்வு வாழந்திட அருள்புரிவீராக.  ஆமென்.

 
 
 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452