அவரது திருப்பெயரில் நமக்கு வாழ்வு உண்டு! | ஆர்.கே. சாமி | VeritasTamil

11 மே 2024  

பாஸ்கா 6ஆம் வாரம் -சனி

தி.பணிகள் 18: 23-28

யோவான்  16: 23b-28


முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல் தனது மூன்றாவது மறைத்தூதுப் பயணத்தைத் தொடர்கிறார். அலக்சாந்திரியாவில் பிறந்த எனும் ஒரு யூத மறைநூல் அறிஞர்  எபேசுவில்  ஆர்வத்தோடு  இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார்.  ஆனால், திருமுழுக்கு யோவான் நீரினால் அளித்து வந்த திருமுழுக்குப் பற்றி மட்டுமே அவர் அறிந்திருந்தார்.

அப்போது,  பவுல் அடிகளின்  நண்பர்கள் சிலர் (அகில்லா மற்றும் பிரிஸ்கில்லா) இயேசுவைப் பற்றிய முழு நற்செய்தியை அப்பல்லோவுடன்  பகிர்ந்து கொள்ள,  அப்பல்லோ நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு வெகுவாக ஈர்க்கப்பட்டார். அவர் பின்னர் யூதர்களிடம் எபிரேய மறைநூல்களில் முன்னறிவிக்கப்பட்ட  மெசியா இயேசுவே  என்பதைச் சுட்டிக்காட்டி நற்செய்தி  அறிவிக்கலானார். 

 
நற்செய்தி.

 இயேசுவின்   தம் சீடர்களுடனான பிரியாவிடை உரை இன்றும்  தொடர்கிறார். அவர் புறப்படுவதற்கு முன்பாக அவர்களைத் தயார்படுத்தும் நோக்கத்தில் அவருக்கும், அவருடைய சீடர்களுக்கும், தந்தையாகிய கடவுளுக்கும் இடையிலான உறவைப் பற்றி விளக்குகிறார்.

இயேசு தம்முடைய சீடர்கள் தந்தையிடம்  அவருடைய பெயரால் “ கேட்பதை எல்லாம் தந்தை அங்களுக்குத் தருவார் என உறுதியாகக் கூறுகிறார். இதானல் சீடர்களின் மகிழ்ச்சியும் நிறைவடையும் எற்கிறார்.  இதுவரை, அவர்கள் இயேசுவின் பெயரில் கேட்கவில்லை, ஆனால் அவ்வாறு செய்யத் தொடங்க அவர் அவர்களை ஊக்குவிக்கிறார். 

மேலும், கடந்த ஏறக்குறைய  மூன்று ஆண்டுகளாக அவர் உவமைகள் கொண்டே பேசினார்.   “ஆனால் இப்போது காலம் வருகிறது.   அப்போது உருவகங்கள் (உவமைகள்)  வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன்” என்கிறார். நிறைவாக, அவர் சீடர்களை நோக்கி, “தந்தை  உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார்” என்று தம் உரையை முடிக்கிறார் .


சிந்தனைக்கு.

இயேசு, இறுதியாகக் கெத்சமணி தோட்டத்திற்குச்  செல்வதற்கு முன், சீடர்களோடு கொண்ட உரையாடலை நற்செய்தியில் கேட்டோம்.   அவர், “ஆனால் இப்போது காலம் வருகிறது.   அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன்” என்று இயேசு கூறியதைப் பற்றி சிந்திக்கும்போது, முதலாவதாக, இந்த ‘காலம் வருகிறது' என்பது அவரது மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் விண்ணேற்பு ஆகியவற்றின் காலம்  என்று புரிந்து கொள்ளலாம்.    

பெந்தெகொஸ்து  நாளில் தூய ஆவியானவர் அவர்கள் மீது வரும் போது தான், சீடர்கள் இயேசு கற்பித்த  அனைத்தையும் புரிந்துகொள்ள அவர்களின் மனக்கதவு திறக்கப்படும் என்ற பொருளும் இதில் பொதிந்துள்ளது.  

நாம் பல முறை படித்த இறைவார்த்தைப் பகுதிகளை மீண்டும் வாசித்துணரும்போது, புதிய புரிதல் நமக்கு ஏற்படுவதுண்டு. நாம் இறைவார்த்தையை  எவ்வளவு அதிகமாக சிந்திக்கிறோமோ அல்லது தியானிக்கிறோமோ, அந்தளவுக்கு  தூய ஆவியார் நமது மனக்கதவைத் திறப்பார். இதனால், கடவுளைப் பற்றிய ஞானம் நமக்கு நாளக்கு நாள் அதிகரிப்பதுண்டு.  

முதல் வாசகத்தில் அப்பல்லோ ஆர்வத்தோடு நற்செய்தியை ஏற்றுக்கொண்டதோடு நின்றுவிடாமல் இயேசுவே யூதர்கள் எதிர்ப்பார்த்த மெசியா என்பதை துணிவோடு பகிர்ந்துகொண்டார். அவர் ஒரு செயல் வீரர். தூய ஆவியாரின் ஆற்றலோடு அவர் பணிக்குப் புறப்பட்டார் என்று லூக்கா கூறுகிறார்.  அடுத்து நமது மன்றாட்டு எப்படிஇருக்க வேண்டும் என்றும் இயேசு விவரிக்கிறரார். ஆம், இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடுவதால் என்ன நன்மை விளையும் என்பதையும் ஆண்டவர் இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார்.  

‘நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை’ (தி.ப.4:12) என்பதை நாம் நினைவில் கொள்ள இன்றைய நற்செய்தி நினைவூட்டுகிறது. எருசலேம் திருக்கோவிலின் முன்பாக உள்ள அழகுவாயிலில் இருந்த  முடுக்குவாதமுற்றவரை யோவானும் பேதுருவும், இயேசுவின் திருப்பெயரைச் சொல்லிக் குணப்படுத்தியபோது, அவர் உடனே நலம்பெற்றார்.  

நாம் பலமுறை புனிதர்களிடம் நமது மன்றாட்டுகளை வைத்து அத்தோடு நின்றுவிடுகிறோம். புனிதர்களிடம் வேண்டுவது ஒரு பரிந்துரை மன்றாட்டு. அவர்கள் நமது மன்றாட்டுக்குப் பதில் கொடுப்பதில்லை. நம்மோடு இணைந்து அவர்கள் நமது மன்றாட்டை இயேசுவோடு தந்தையிடம் ஒப்புக்கொடுக்கிறார்கள். இவர்களின் பரிந்துரையாலும் இயேசுவின் திருப்பெயராலும் தந்தையாம் கடவுளின் இரக்கத்தையும் தயவையும் நாம் கூடுதலாகப் பெறுகிறோம், வெற்றிப் பெறுகிறோம்.

பவுல் அடிகள் கூறுவதைப்போல்,  ‘இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி  2:10) ஆகையால், அவரது சீடர்களான நாம் ஏன் அவரது திருப்பெயருக்கு மண்டியிடக்கூடாது? மண்டியிடுவோம், பலன்களைப் பெற்று மகிழ்வோம். 


இறைவேண்டல்.
  
‘நாங்கள் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே உமது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை’ என்றுணர்த்திய ஆண்டவரே, உமது திருப்பெயருக்கு அஞ்சி வாழும் வரத்தை எனக்கு என்றும் அருள்வீராக. ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452