துணிவுக்குத் துணை தூய ஆவியார்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

6 மே 2024  

பாஸ்கா 6ஆம் வாரம் - திங்கள்

தி.பணிகள் 16: 11-15

யோவான்  15: 26- 16: 4

முதல் வாசகம்.
 
முதல் வாசகத்தில், துரோவாவிலிருந்து கப்பலேறி சமொத்திராக்கு தீவுக்கும், மறுநாள் நெயாப்பொலி இரு நகர்களையும் கடந்து, மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம் என்று லூக்கா குறிப்பிடுகிறார். இப்பயணத்தில் பவுல், சீலா, திமொத்தேயு, லூக்கா ஆகிய நால்வரும் இணைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பு நகரில் குறைந்த அளவிலான யூதர்கள் இருந்ததால் அங்கு தொழுகைக்கூடங்கள் இல்லை. 
எனவே,  பிலிப்பு நகரில் ஓடிய ஓர் ஆற்றின் கரையில் ஒன்றுகூடி வழிபாடு செய்வர். அன்று ஓய்வுநாள். இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி ஆற்றோரம் செல்ல,  அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம் என்று லூக்கா கூறுகிறார். அவர்களின் உரையாடலை  லீதியா என்ற பெண் கேட்டுக்கொண்டிருந்தார். அவள், தியத்திரா நகரைச் சேர்ந்தவர்.

அவள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு, விலையுயர்ந்த , செந்நிற ஆடைகளை விற்பனை செய்பவள்.  இவளும் ஒரு யூதராக இருந்நிருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை.  அதிலும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவராகவும் இருந்திருக்க வேண்டும். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார் என் லூக்கா குறிப்பிடுகிறார்.  பவுல் அடிகளின் நற்செய்தி போதனையால் கவரப்பட்ட லீதியா, மனமாற்றம் அடைந்து, திருமுழுக்குப்பெற தகுதி பெற்றார். 

நிறைவாக, அவரும் லீதியாவும் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன்பின் அவர் சீடர்களிடம்  “நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்” என்று கெஞ்சிக் கேட்டு அவர்களை இணங்கவைத்தார்.
 
நற்செய்தி.

நற்செய்தியில் இயேசு தனது சீடர்களிடம் உரையாடி தூய  ஆவியானவர் என்று அழைக்கப்படும் துணையாளரின் வருகைக்கு அவர்களை தயார்படுத்துகிறார். தூய ஆவியார்  அவரைப் பற்றி சாட்சியம் அளிப்பார் என்றும், அவருடைய பணியின் தொடக்க முதல்   அவருடன் இருந்ததால் அவர்களும்  சாட்சியம் அளிப்பார்கள் என்றும் அவர் சீடர்களிடம்  கூறுகிறார்.   

சீடர்கள் சாட்சியம் பகர்வதால் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்று இயேசு தம் சீடர்களை எச்சரிக்கிறார். அவர்கள் தொழுகைக்கூடங்களிலிருந்து  வெளியேற்றப்படுவார்கள் என்றும், அவர்களைக் கொலை செய்பவர்கள் என்றும், அவர்களை எதிர்ப்பவர்கள் தந்தையாகிய  கடவுளையோ அல்லது இயேசுவையோ உண்மையாக அறியாததால் இந்த துன்புறுத்தல் நடக்கும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

துன்புறுத்தல் வரும்போது அவர்கள் ஆச்சரியப்படக்கூடாது என்பதற்காகவே இவற்றை முன்கூட்டியே அவர்களுக்குச் சொல்கிறேன் என்று இயேசு விளக்குகிறார். அவர்கள் துன்புறுத்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும்போது அவருடைய வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும்  இயேசு அறிவுறுத்துகிறார்.  

இயேசுவின் சீடர்கள் மீதான அக்கறையையும், அவருடைய செய்தியைப் பரப்புவதில் அவர்கள் சந்திக்கும் சவால்களுக்கு அவர்களைத் திடப்படுத்த விரும்பியதையும் நற்செய்தியில் யோவான் எடுத்தியம்புகிறார்.  


சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில் தியத்திரா நகரைச் சேர்ந்த லீதியா என்ற பெண் பவுல், சீலா, திமொத்தேயு, லூக்கா ஆகியோரின் நற்செய்தி உரை கேட்டு மனமாறி அவராகவே  கிறிஸ்துவை முன் வந்து ஏற்கிறார். சீடர்கள்  தன் வீட்டில் தங்க இடமும் கொடுக்கிறார்.  ஆனால், நற்செய்தி அறிவிப்புப் பணியானது எப்போதும் இவ்வளவு எளிதில் நிறைவேறாது. துன்பமும் துயரமும் தான் நற்செய்தி அறிவிப்பாளர்களுக்கான வெகுமதி. 

”இறைவன் முன் நாங்கள் பயனற்ற ஊழியா்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்” என்கிற இறைவார்த்தைக்கு ஏற்ப, புனித பவுல்  தனக்கு நடக்கிற இன்னல்களை, இடையூறுகளை நினைத்து கவலைப்படாமல், தன்னுடைய பணியை அவர் செய்து கொண்டேயிருக்கிறார். துன்பங்களை, இடைநூறுகளைக் கண்டு அவர் அஞ்சினாரில்லை. 

புனித பவுல் அடிகள் போலே, இயேசுவின்  சாட்சிகளாக வாழ  நாமும் அழைக்கப்பட்டுள்ளோம்.   இக்காலத்தில், நமது சாட்சிய வாழ்வு  புனித பவுல் அல்லது மற்ற ஆரம்பகால சீடர்களின் சாட்சிய வாழ்வு போல் இல்லாமல் இருக்கலாம். அவர்களைப் போல் நாம் ஊர் ஊராக, தெரு தெருவாகச் சென்று நற்செய்தி போதிக்க முடியாது. துன்பங்கள் தொடர்ந்து வருவதாலும், பட்ட காலிலே பட்டாலும்   கடவுள் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது என்பதே இயேசுவின் வலியுறுத்தல்.  உள்ளுயிராய் இருந்து உரமூட்டி, அவநம்பிக்கையை வேரறுத்து புத்தெழுச்சியூட்டி புது வாழ்வு தரும் தூய ஆவியாரைப் பற்றிக்கொள்வோர் கைமாறு  பெறாமல் போகார். 

ஆதலால், நற்செய்தி அறிவப்புக்கு நமது வாழ்வே கிறிஸ்துவுக்கான சாட்சிய வாழ்வாக மாற வேண்டும். இது நமக்கு ஒரு சவால். எல்லாம் வணிகமயமாகப் பார்க்கப்படும் இக்காலத்தில்  சுயநலம் கொண்ட உலகின் வழிகளில் இருந்து நாம் தனித்து நிற்க வேண்டும். கடந்த 500 ஆண்டுகாலமாக  கிறிஸ்தவர்களே கிறிஸ்தவர்களைக் கூறுபோடும் சூழலில், நற்செய்தி அறிவிப்புக்கு கிறிஸ்தவர்களே முட்டுக்கட்டையாக உள்ளனர். 

இன்றைய நற்செய்தியில் இயேசு தூய ஆவியாரைக் குறித்துப் பேசுகின்றபொழுது இரண்டு முக்கியமான செய்திகளைக் குறிப்பிடுகின்றார். ஒன்று, தூயஆவியார் தன்னைக் குறித்துச் சான்று பகர்வார் என்பதாகும். இரண்டு தூய ஆவியார் சீடர்கள் சான்று பகர்வதற்கு உறுதுணையாக இருப்பார் என்பதாகும்.

தூய ஆவியானவர், பவுல், பேதுரு மற்றும் மற்ற முதல் நற்செய்தி அறிவிப்பாளர்களுக்குச் செய்ததைப் போலவே, நம்முடைய சாட்சிய வாழ்வுக்கும் துணை நிற்கிறார். அவர் உறங்குவது கிடையாது. ஆனால், பிரிவினைவாதிகளால் நாம் பலவீனப்படுத்தப்படுகிறோம். ஆளுக்கொரு சபை என தெருவுக்கு ஒரு சயையை ஏற்படுத்தும் ஆநாகரீக கலாச்சராம் இன்று தலைவிரித்தாடுகிறது. கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பு இன்று  சீர்குழையச் சுயநலக் கிறிஸ்தவர்களே காரணமாகிறார்கள்.  
 
நற்செய்தி அறிவித்தல் என்பது, அவரவர் சபையில் ஆள் சேர்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. வருமானம் இங்கே முன்னுரிமை பெறுகிறது. இன்றைய நற்செய்தியில். நாம்   வெளி உலகில் இருந்து வரும் தாக்குதல்கள் கண்டு அஞ்ச வேண்டாம் என்று எச்சரிக்கிறார்ஆண்டவர்.  இன்று திருஅவையில் முளைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் குழப்பவாதிகளுக்கும்  எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து கூறுவதைப் போல, நற்செய்திப் பணியில் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அவருடைய வார்த்தைகளை நினைவில் நிறுத்தி முன்னோக்கிச் செல்வோம்.


இறைவேண்டல்.

துணையாளரை தந்துதவிய இயேசுவே, நீர் எனக்கு அருளிய தூய ஆவியானவரின்  அருள்கொடையை அறிந்துணர்ந்து துணிவுடன் நற்செய்தி பணிக்கு என்னை ஈடுபடுத்திக்கொள்ள அருள்புரிய வேண்டுகிறேன். ஆமென்.  

 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452