அலகைக்கு இடம் கொடாதீர்கள் | ஆர்.கே. சாமி | VeritasTamil

 26 மார்ச்  2024                                                                                          

புனித வாரம் -செவ்வாய்  

எசாயா  49: 1-6                                                                                  

யோவான் 13: 21-33, 36-38

முதல் வாசகம் :

முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயா நூலின் இரண்டாம் பகுதியைச் சேர்ந்தது. இப்பகுதி யூதர்கள் பாபிலோனில் அடிமைகளாக நசுக்கப்பட்டு நம்பிக்கை இழந்து இருந்த காலத்துக்குரியது.   கடவுள் தம் மக்களை பாபிலோனிய அடிமை வாழ்விலிருந்து விடுவித்து அவர்களது சொந்த வீடான எருசலேமில் புதுவாழ்வு வாழுமாறு அழைத்துச் செல்வார் என்று இறைவாக்கினர் முன்னுரைக்கிறார். 

மேலும், இந்நூலில் இடம் பெற்றுள்ள  துன்புறும் ஊழியனைப் பற்றிய நான்கு பாடல்களில் இது இரண்டாவது பாடலாகும். இப்பாடலில் ஆண்டவர் கடவுள், மெசியாவை முன்னிட்டு, “நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்” என்கின்றார். இறைவாக்கினர் ஏசாயா  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கடவுளுடன் நெருங்கிய உறவுக்குக் கொண்டுவரும் பணியை  நிறைவேற்றுவதற்காக, துன்பப்படும் ஊழியராக  பிறப்பதற்கு முன்பே கடவுளால் அழைக்கப்பட்டார் என்பதை நாம் அறிய வருகிறோம்.  

மக்களைக் கடவுளுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதில் சில சமயங்களில் பணி வீணாகிவிட்டதாகத் தோன்றுகிறது என்று  பணியாளரான எசாயா   வெளிப்படுத்துகிறார். ஆயினும் அவருக்குரிய  நீதி ஆண்டவரிடம் உள்ளது; அவரது பணிக்கான பரிசு கடவுளிடம் இருக்கின்றது’ என்று எசாயா மகிழ்ச்சியுறுகிறார். 


நற்செய்தி :

நற்செய்தி வாசகத்தில் இயேசு ‘“உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். அடுத்து, அந்நேரத்தில், ‘பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது’ என்று இயேசு கூறியதும், பேதுரு முந்திக்கொண்டு ‘ “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டதோடு,  ஆண்டவரே ‘உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றார் பேதுரு. 

இயேசு அவரைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். 


சிந்தனைக்கு :

இயேசுவைக் காட்டிகொடுக்கவிருக்கும் யூதாஸ் இஸ்காரியோத்தும், இயேசுவை மறுதலிக்கவிருக்கும் பேருதுவும், இயேசுவோடு மூன்று ஆண்டுகள் பணிசெய்தவர்கள், ஒன்றாகப் பயணம் செய்தவர்கள். ஆனால் அவர்களே இயேசுவுக்கு எதிராக செயல்படவிருப்பதுதான் மிகவும் ஆச்சரியத்திற்கும் வேதனைக்குமானதாக  இருக்கின்றது.  

இதில், யூதாஸ் இயேசுவை பணத்துக்காகக் காட்டிக்கொடுக்கத் திட்டமிட்டு செயல்படுகிறார்.   பேதுருவோ தீடீரென்று, யாது செய்வதென்று அறியாமல் தம் உயிரைக் காக்க பொய்யுரைக்கவுள்ளார்.  இருவருமே, பின்னர் செய்த குற்றத்தை நினைத்து மனம் வருந்துகிறார்கள். ஆனால், இயேசுவுக்கு நேரிடவிருக்கின்ற  நிகழ்வுகளான - காட்டிக்கொடுத்தலும், மறுதலித்தலும் மனுக்குல மீட்புக்கான அவரது போராட்டத்தில்  மனம் தளரவிடவில்லை. 

நமது அன்றாட வாழ்க்கையிலும் நம்மோடு ஒட்டி உறவாடிக்கொண்டு நமக்கெதிராக நம்பிக்கைத் துரோகம் செய்யும் மனிதர்களைப் பார்க்கின்றோம். முதுகுக்குப் பின்னால் குத்துபவர்களாக பலர் இருக்கிறார்கள். கூட இருந்தே குழி பறிப்பவர்களும் உண்டு.   இத்தகையோரை மன்னிப்பது மனித இயல்பில் கடினமாக இருந்தாலும்,  இயேசுவைப் போன்று மன்னிப்பது மிகச் சிறந்த  பண்பாகும். 

குறிப்பாக இறைப்பணியில் ஈடுபடுவோர் மட்டில் வெளிப்படைதன்மை இன்றியமையாதது. நற்செய்தியில், இயேசு, ‘‘பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்’ என்றுதான்’ சீடர்களை அழைத்தார். எனவே, இறைப்பணியில ‘நீயா? நானா? என்ற கேள்விக்கு இடமே இல்லை. அனைவரும் கிறிஸ்துவில் துன்புறும் பணியாளர்களே. யூதாஸ் காட்டிக் கொடுத்தான், எனெனில் அவனுக்குள் சாத்தான் புகுந்தான் (லூக்கா 22:3). எனவே, நம்பிக்கைத் துரோகம் செய்வபவர்களும்  முதுகுக்குப் பின்னால் குத்துபவர்களும்  ஒருவகையில் சாத்தானின் தூண்டுதலுக்கு உட்பட்டவர்களாக நாம் பார்க்க வேண்டுமேயொழிய அவர்களைப் பழிக்குப் பழி வாங்க நினைப்பது மடமையாகும். 

‘பொல்லாரோ உலகினின்று பூண்டோடு அழிவர்; நயவஞ்சகர் அதனின்று வேரோடு களைந்தெறியப்படுவர்’ (நீதிமொ. 2:22) என்பது நமக்கான அறிவுறுத்தல். எனவே, நயவஞ்சகம், கீழறுப்பு, குழிபறித்தல்  போன்றவை கிறிஸ்துவின் சீடர்களுக்கு ஆகாத ஒன்று.  மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் போலன்றி  இயேசுவின் சீடத்துவ வாழ்வு சிறப்புற துன்பத்தை ஏற்கவும்  நேர்வழி நடக்கவும்  முற்படுவோம். ‘அலகைக்கு இடம் கொடாதீர்கள்’ (எபே 4:27) எனும் புனித பவுல் அடிகளின் அறிவுரையை ஏற்போம்.


இறைவேண்டல் :

‘உங்களை நான் நண்பர்கள் என்றேன்’ என்றுரைத்த ஆண்டவரே, அனைத்து இறைப்பணியாளர்கள் மத்தியில் உண்மையும் நேர்மையும் கொண்ட நண்பராக நானும் வெளிப்படைத்தன்மையில் நிலைத்திருக்க அருள்புரிவீராக. ஆமென்.


 
 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452