நல்ல நம்பிக்கையாளர்- இயேசுவின் உடன் உழைப்பாளி | ஆர்.கே. சாமி | VeritasTamil

27 பிப்ரவரி  2024,                                                                                          

தவக்காலம் 2ஆம் வாரம் - செவ்வாய்

எசாயா 1:10,16-20                                                                              

மத்தேயு  23:1-12 

முதல் வாசகம்:

 இன்றைய முதல் வாசகமானது, யூதர்கள் பாபிலோனிய நாடு கடத்தலுக்கு 
முன் எசாயா இறைவாக்கினர் யூதேயாவில், எருசலேம் பகுதியில் விடுத்த மனமாற்றத்திற்கான எச்சரிக்கை அழைப்பாக உள்ளது.   ஏற்கனவே, சோதோம் மற்றும் கொமோராவின் மக்கள் பாவத்தால் அழிந்தார்கள்.  இந்த இரு ஊரினரையும் எடுத்துகாட்டாகக் கொண்டு எசாயா மனமாற்றத்திற்கு அழைக்கிறார். 

மக்களை நல்வழிநடத்தி நீதியோடு ஆட்சி செய்ய வேண்டிய அரசர்களும் நெறிதவறினார்கள், வேற்று தெய்வங்களுக்குப் பலி செலுத்தினார்கள். எனவே, மனமாற்றத்தின் அடையாளமாக, நீதிக்கான தேடல்,  தவறுகளைச் சரிசெய்தல், ஏழைகளுக்கு உதவுதல், ஆதரவற்றவர்களைக் காத்தல் போன்ற நல்ல காரியங்களை விரைந்து  செய்ய வேண்டும் என்று ஏசாயா இறைவாக்கினர்  மக்களுக்கு நினைவூட்டுகிறார்.  


 நற்செய்தி:
 
இன்றைய நற்செய்தி வாசகத்தில்  இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடர்களையும் சந்தித்து, அக்கால மறைநூல் அறிஞர்களைப் போலவும்  பரிசேயரைப் போலவும் வெளிவேடம் கொண்டிருக்க வேண்டாம் என்கிறார். "மோசேயின் கட்டளைகளை கடைப்பிடிப்பதில்  மறை நூல் அறிஞரும் பரிசேயரும் வல்லவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளும்  இயேசு, அவர்களின்  போதனைகளைப் பின்பற்றுவதில் தவறில்லை என்றும்,  ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள் என்றும் சீடர்களையும் பாரம மக்களையும் அறிவுறுத்துகிறார். 

மறை நூல் அறிஞரும் பரிசேயரும் சொல்வதை செயலில் காட்டுவதில்லை.
தற்புகழ்ச்சியைப் பெரிதும் விரும்பும் அவர்கள் வெளிவேடக்காரர்கள் என்று வெளிப்படையாக கூறுகிறார். 


சிந்தனைக்கு:

இன்றைய வாசகங்களை ஆழ்ந்து சிந்தித்தால், சொல்லிலும் செயலிலும் நேர்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை கடவுள்  வலியுறுத்தவதை உணரலாம். அக்காலத்தில் யூதேயாவில்,  மக்கள்  மத்தியில் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் சொல்வதொன்று செய்வதொன்றாக  இருந்தனர். அடுத்து,  அவர்களின் செயல்கள் தற்புகழ்ச்சியை மையமிட்டிருந்தது. இறைவழிபாட்டிற்கும் அவர்களது வாழ்க்கைக்கும் தொடர்பானது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதும் கதையாக இருந்தது. இந்நிலையைத் தான் இயேசு சுட்டிக்காட்டுகிறார், 

கிறிஸ்தவ வாழ்வில் சொல்லும் செயலும் இணைந்தே இருக்க வேண்டும்.  ஊருக்குத் தான் உபதேசம்… உனக்கில்லையடி பெண்ணே… என்பதாகிவிடக்கூடாது. 

நமது முன்னோர்கள், நாடு விட்டு நாடு வந்து நற்செய்தியை புறவினத்தார் மனதில் விதைத்ததோடு, அவர்களின் நல வாழ்வில் அக்கறைக்கொண்டு ஆங்காங்கே மருத்துவமனைகளைக் கட்டினார்கள். மக்களின் அறிவுக்கண்களைத் திறப்பத்ற்கு   பாலர் பள்ளிகளைளோடு, தொடக்க நிலை, இடைநிலை மற்றும் உயர்நிலை கல்விக்கூடங்களை ஏற்படுத்தினார். இதனால், நாடு வளமுற்றது. மக்களின் அறிவுக்கண்கள் திறக்கப்பட்டன. நற்செய்தியில் வாசித்ததை நற்பணிகளில் வெளிப்படுத்தினார்கள். 

மேலும், கிறிஸ்தவர் என்பவர் ஓர் உதவாக்கரை அல்ல. அவர்  நீதிக்கும் நியாயத்திற்குமான போராளி. அவர் உலகத்தார் வாழ்வது போல பத்தோடு பதினொன்றாக வாழ்பவரும் அல்ல. எனவேதான் இன்று,  ‘அவர்கள் (உலகத்தார்) செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள் என்றும் அறிவுறுத்துகிறார் ஆண்டவர். 

முதல் வாசகத்தில்  'நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்' என்கிறார் இறைவாக்கினர் எசாயா. நாம் செயலற்று இருந்தால், எப்படி நன்மை செய்வது?  ‘அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா?’ என்றுதான் திருத்தூதர் யாக்கோபுவும் இன்றை நம்மை கேட்கிறார். (யாக்கோபு 2:20)

ஆகவே, கடவுளின் மீட்புப்பணியின் உடன் உழைப்பாளிகள் நாம் என்பதை மனதில் கொண்டு நன்மை தரும் செயல்களைத் தொடர்வோம்.   நாம் ஒவ்வொருவரும் ஓர் அன்னை திரேசாவாக மாறும் காலம் மலர்ந்தால் திருஅவையின் பயணம் வெற்றிபெறும். 

இறைவேண்டல்:

“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு’ என்று என்னையும் உமது திராட்சைத் தோட்டத்திற்கு அழைத்த ஆண்டவரே, நான் வெறுமனே திருஅவையில் எனது காலத்தைக் கழிக்காமல், பயனுள்ள பணியாளனாக செயல்பட உதவுவீராக. ஆமென். 

 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452